2013/11/30

மாதச் சிறப்பு


    லைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால் மட்டுமே தெரியும் என்பார்கள். காதலும் ப்லாக்வலியும் அந்த வகையில் சேரும் என்பது என் அனுபவம். அதிலும் ப்லாக்வலி...

பூத்தூரிகை காலத்தில் முதல் அனுபவம். மூன்றாம் சுழியில் சமீப அனுபவம். தொலைத்த பதிவுகளை மெள்ளச் சேர்க்கப் போகிறேன். தடங்கலுக்கு வருந்துகிறேன்.

ஒரு சில கதைகள் கட்டுரைகள் தவிர மற்றவை என்னிடம் சேமிப்பில் உள்ளன. கவிதைகள் முற்றிலும் தொலைந்து போயின என்பது உலகத்துக்கே மகிழ்ச்சியைத் தரும் செய்தி. பதிவுகளைத் தனியாகச் சேமித்து வைத்திருக்கிறேன் என்றாலும் முறையாகச் செய்யவில்லை. சேமித்தவை அந்தந்தக் காலக்கட்டத்து கணினிகளில் இருப்பதால் எல்லாவற்றையும் தனித்தனியாக எடுத்து மீண்டும் சேர்க்க வேண்டியிருக்கிறது. பெரிய விஷயம் ஒன்றுமில்லை. இருந்தாலும் செய்யப் பொறுமையும் முனைப்பும் போதவில்லை. இந்த வருடம் அக்டோபர் நவம்பரில் நிறையப் படுத்துவிட்டேன். ஆள் விழுங்கி நவம்பர் என்னையும் விழுங்கிவிடுமோ என்று ஒருகணம் தோன்றியது உண்மை. நிலமை இப்படி இருக்கையில் ப்லாக் போனதைப் பற்றிக் கவலைப்பட்டாலும் எதுவும் செய்ய முடியவில்லை. பயணம், வெறுப்பு, சோம்பல் எல்லாம் கலந்து.. எத்தனையோ இழப்புகளில் மனம் சலித்த நிலையில் பதிவுகள் எப்படிப் போனாலென்ன என்று ஒரு கணம்.. ஒரு கணம் எண்ணியதை ஒப்புக்கொள்கிறேன்.

பதிவுகள் காணாமல் போனதை விசாரித்து எனக்கு வந்த இமெயில்கள் என்னைக் கலங்க வைத்தன. நெஞ்சைத் தொட்டன. 'உங்கள் பதிவுகள் ஒரு பரிசு' என்று ஒருவர் எழுதியிருந்தார். இன்னொருவர், 'I feel I am missing something' என்று எழுதியிருந்தார். ஒரு பின்னூட்டம் கூட இதுவரை இடாதவர்கள் பலர் இப்படி எனக்கு எழுதி விசாரித்த போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. கர்வமாகவும். ஒரே ஒரு இமெயில் மட்டும் கொஞ்சம் சுவாரசியமாக உறுத்தியது. பெயர் மறைத்த அவர் நெஞ்சில் சிறிய அக்கினிக் குஞ்சு சில நாள் சிறகடிக்கட்டும்.

ப்லாக் நலம் விசாரித்த அத்தனை பேரின் அன்புக்கும் நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன். மிகவும் நன்றி. ஐந்து வருடத்துக்கு மேற்பட்ட உழைப்பை(?) அனாவசியமாக எறிய வேண்டாம் என்றும் தோன்றியதால் நேரம் கிடைக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துவிடுகிறேன்.

யாண்டும் எவர்க்கும் கடவுச்சொல் கொடற்க எனும் அரியநெறி இதனால் அறியற்பாலது.

    வேலையில்லை. பொழுது போக என்ன செய்யலாம்? காழ்ப்புடன் அல்பமாகப் புலம்பலாம். உலகம் கெட்டுவிட்டது என்று அடுத்த தலைமுறையைத் திட்டலாம். அல்லது இந்தியக் கொலை வழக்குகள் படிக்கலாம்.

லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கின் தீர்ப்பைப் படித்ததும் இன்னும் தேடத் தோண்டியது. இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும் இதுவரை விவரங்கள் எதுவும் தெரியாதிருந்தேன். தியாகராஜ பாகவதர், என்எஸ் கிருஷணன் இருவரும் கொலை செய்து சிறை சென்றார்கள் என்றே இதுவரை அறிந்திருந்தேன். இந்த வழக்கின் விவரங்களைப் படிக்கையில், இருவரும் கொலை செய்திருக்கச் சாத்தியமில்லை என்ற கருத்தும் வழக்கில் சந்தேகத்துக்கிடமின்றி (சந்தேகத்துடன்?) கிளப்பியிருப்பதைப் படித்தேன். ஜூரிகளில் 6 பேர் ஆதரவாகவும் 3 பேர் எதிர்த்தும் தீர்ப்பு சொல்லி இருவருக்கும் கொலை குற்றத்துக்கானத் தண்டனை வழங்கினார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு ஜூரி எதிர்த்தாலும் தீர்வு காண முடியாது என்ற வரைமுறை இந்த வழக்குக்கோ அல்லது அந்தக் காலத்திலோ புழக்கத்தில் இல்லையா? அல்லது மரண தண்டனைக்கு மட்டும் தான் அந்த வரைமுறையா? என்எஸ்கே, எம்கேடி பற்றி எழுதிய நேரத்தில் இந்தக் கொலை நடந்ததால் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது என்ற கருத்தை கோர்ட்டுகளிலும் ப்ரிவி கவுன்சிலிலும் சொல்லியிருப்பதைப் பார்த்தால் நிறைய சந்தேகம் வருகிறது. தோண்டித் தோண்டிப் படித்ததில்... கொலை செய்தவர்களாகக் கருதப்பட்டவர்களில்.. அந்த நாளில் வளர்ந்து வந்த ஒரு மூன்றெழுத்து நடிகர், மூன்றெழுத்து நான்கெழுத்து பெயர் கொண்ட இரண்டு அரசியல் தலைவர்கள், ஒரு இசைக்குயில், பிரபல தொழிலதிபர், ஒரு சினிமா நடிகையின் 'சமூக அந்தஸ்துள்ள' கள்ளக்காதலன்... என்று நிறைய பேர் அடங்கியிருப்பது சுவாரசியம்.

இதைப் புத்தகமாக யாராவது எழுதியிருக்கிறார்களா? ரண்டார் கய் இதைப் பற்றிப் புத்தகம் எழுதியிருப்பதாகச் சொல்கிறார்கள். யாருக்காவது விவரம் தெரிந்தால் சொல்லுங்கள். இந்த வழக்கின் காலக்கட்ட விவரங்கள் யாருக்காவது தெரிந்திருந்தால் இந்தியா வரும்பொழுது சுவாரசியமாக அரட்டை அடிக்கலாம். காஸ்யபன் ஐயாவுக்கு நிறைய விவரங்கள் தெரிந்திருக்கும் என்று கௌளி சொல்கிறது. சூரி மற்றும் ஜிஎம்பி அவர்கள்? சென்னைப் பித்தன் அந்த நாட்களில் மயிலையில் இல்லை என்று நினைக்கிறேன்.

குறைந்த பட்சம் இதை யாராவது புத்தகமாக எழுத வேண்டும். ஜெயமோகனைத் தவிர. குறைந்த பட்சம் இதை யாராவது சினிமாவாக எடுக்க வேண்டும். ஹிஹி.. ரைட்.. அவரைத் தவிர.

உபரி: 'எம்கேடி'யின் 'எம்' மாயவரமாம்.

    க்ஷ்மிகாந்தன் பற்றிப் படிக்கையில் எம்எஸ்வி பற்றி ஒரு துக்கடா தெரிந்து கொண்டேன். எல்லாம் அறிந்த ஈசனின் திருவிளையாடலில் மீனாக்ஷி மாதிரி தீவிர எம்எஸ்வி ரசிகர்கள் நெகிழ்ந்து போகலாம் என்பதற்காக இங்கே சேர்க்கிறேன்.

சினிமா சான்ஸ் தேடுவதற்கு முந்தைய காலம். ஒரு பெரிய செல்வந்தர் வீட்டில் வைர நெக்லஸ் திருடினார் என்று குற்றம் சாட்டி எம்எஸ்வியைக் கைது செய்து சிறையிலடைத்தார்களாம். எம்எஸ்வி சரியாகப் பேசத்தெரியாமல் தவித்ததாலோ அல்லது அவர் பேசியதைப் புரிந்து கொள்ள இயலாமல் போனதாலோ அவர் மேல் வழக்கு தொடர்ந்தார்களாம். தீர்ப்புக்காகக் காத்திருக்கையில் அசல் திருடன் பிடிபடவே எம்எஸ்வியை விடுதலை செய்தார்களாம். அசல் திருடன் பிடிபடாதிருந்தால் எம்எஸ்வி திரையுலகுக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம்.

திக்கெனவில்லை?

    ள் விழுங்கி நவம்பர் முடியப்போகிறது. நன்று.

நவம்பர் மாதத்தின் மிகப் பெரிய சிறப்பு ஒன்று உண்டு. அத்தனை இழப்புகளையும் ஈடுகட்டும் சிறப்பு. ஆர்கிமிடீஸ் கோரிய லெவர் மாதிரி ஒரு பிடிப்பைத் தரும் சிறப்பு. என் தம்பி பிறந்த மாதம்.

எங்கள் குடும்பத்தில் சகோதர-ரிகளிடத்தே போலித்தனம் கொஞ்சம் கூட இல்லை. எங்கள் அம்மா ஒரு முக்கியக் காரணம். நாங்களும் சில்லரைக் காரணங்கள். என்னை விட என் சகோதர-ரிகளுக்குப் பண்பு அதிகம் என்று சிலர் சொல்வார்கள். (சொல்பவர்கள் நேரில் வந்து சொன்னால் அவர்கள் பல்லை உடைக்கத் தயாராக இருக்கிறேன்).

சிறுவயதில் நானும் என் தம்பியும் எதற்கெடுத்தாலும் அடித்துக் கொள்வோம். அடிதடி என்றால் அ டி த டி. கட்டிப்புரண்டு கழுத்தை நெறித்துச் சண்டை போடுவோம். 'கொன்னுடுறா.. துரப்பா.. அவனைக் கொன்னு போட்டுரு.. உன்னைவிட சின்னவன்னு பாக்காதே.. கொன்னுடு' என்று பதறுவார் என் பாட்டி. அப்படி ஒரு மாட்டடி அடித்துக் கொள்வோம். ஆளுக்கொரு க்ரிகெட் டீமின் பெயர் கொண்டு எங்கள் வீட்டு ஹாலில் க்ரிகெட் விளையாடி ஏற்கனவே விரிந்திருக்கும் தரையை இன்னும் உடைத்திருக்கிறோம். வீட்டின் தட்டி வேலிக்குள் ஆடு மாடு பன்றிகள் வந்தால் தட்டிவேலிக்கதவை அடைத்து, எங்கிருந்து அடி விழுகிறது என்று புரியாமல் ஆடு மாடுகள் மிரண்டு ஓடும் வகையில் மறைந்திருந்து பெரிய செங்கல்களாகப் பொறுக்கி எடுத்து அடித்திருக்கிறோம். மாதம் மூன்று வாரம் வந்தால் ஒரு ரூபாய் இனாம் தருவார்கள் என்பதற்காக சம்ஸ்கிருத வகுப்புக்குப் போவோம். அம்மா திட்டுவார் என்பது இன்னொரு லேசான காரணம். அவன் ஒரு ரூபாய்க்காக மட்டுமே வருவான். எனக்கு இரண்டு அழகான காரணங்கள் இருந்தன. நாங்கள் இருவரும் ஒரே பள்ளிக்கூடம் தொடர்ந்து ஒரே கல்லூரியில் படித்தோம். நேரத்தில் பள்ளிக்கூடம் போக வேண்டுமென்று மூன்று வருடங்கள் போல் தினம் அவனைப் பின்னால் உட்காரவைத்து காட்டு வேகத்தில் சைக்கிள் மிதித்திருக்கிறேன். அது மட்டுமே அவனுக்கு நான் செய்திருக்கும் உருப்படியான பணி என்று நினைக்கிறேன். அதுவும் நான் பள்ளிக்கூடம் போகிற சாக்கில். ஒரே ஒரு தடவை பள்ளிக்கூடத்தில் அவனை யாரோ மிரட்டினார்கள் என்பதற்காக அவனுக்காகச் சண்டை போட்டிருக்கிறேன். எனக்குப் பாதுகாப்பு தரும் அளவுக்கு அவன் பம்மலில் படா ஆளானது வேறு கதை. இன்றைக்கும் தொடர்கிறது. தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது என் மட்டில் வேதம். எங்கள் குடும்பத்தின் பீமன். பல்லாண்டு பலமோடு வாழட்டும்.

அவன் பிறந்தநாளன்று உடனிருந்து இருபத்தைந்து வருடங்களாவது ஆகியிருக்கும். இந்த நவம்பரில் வாய்ப்பு கிடைத்தது. இது அவனுக்காக.


    சினுக்கு பாரத் ரத்னா கொடுத்தது தவறா என்று என்னிடம் ஒருவர் கேட்டார். 'ஒபாமாவுக்கு நொபெல் தரவில்லையா?' என்று உடனடியாக மனதில் தோன்றியதை அடக்கிக் கொண்டேன். வித்தியாசம் இருக்கிறது. ஒபாமாவுக்குக் கொடுத்ததால் நொபெல் பரிசுக்குத் தீராதக் களங்கம் உண்டானது. ஸசினுக்குக் கொடுத்ததால் பாரத ரத்னாவுக்கு ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது. இல்லையென்றால் என் போன்றவர்களுக்கு பாரத ரத்னா பற்றி என்ன தெரியப் போகிறது - எம்ஜிஆருக்குக் கொடுத்தார்கள் என்றா?

ஸசின் க்ரிகெட் விளையாடி அவ்வளவாகப் பார்த்ததில்லை. அதிலும் அவர் சிறப்பாக விளையாடிய பதினைந்து இருபது வருடங்களில் ஒரு முறை கூட பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நூற்றுக்கணக்கான செஞ்சுரிகளில் ஒன்றைக் கூடப் பார்த்த நினைவில்லை. இருந்தாலும் அவரை அறிய முடிந்தது அவர் விளையாட்டின் சிறப்பினால் என்பது எனக்குத் தெரியும். ஸசின் ஓய்வு விழா (?) தொலைகாட்சியில் பார்த்தேன். 'இந்த பாரத ரத்னா என் அம்மாவுக்கு' என்றார். அதற்காகவே.. அந்தப் பண்புக்காகவே.. பாரத ரத்னா கொடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்துவிட்டது. 'பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக எத்தனையோ செய்கிறார்கள்.. அவர்களைப் பொறுத்தவரை அவை தியாகங்கள் அல்ல.. இந்த நாள் வரை என் பெற்றோர்கள் உனக்காக இதைச் செய்தேன் அதை இழந்தேன் என்று சொன்னதில்லை..' என்றார். இந்த வரிகளுக்காக அடுத்த வருட பாரத ரத்னாவையும் அவருக்கே வழங்கவேண்டும்.

ஸசினை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. எப்படிப்பட்ட பெற்றோர்கள்! 'இன்னிக்கு நீ போட்டிருக்கிற சட்டை நான் வாங்கிக் கொடுத்தது.. இன்னிக்கு நீ சம்பாதிக்கிற வேலை படிச்ச படிப்பு நான் போட்ட பிச்சை.. இன்னிக்கு நீ கட்டியிருக்கிற புடவை என் ரத்தத்தைக் கொட்டி சம்பாதிச்சது..' என்ற பாணியில் புழங்கும் பெற்றோர்களையே இன்றளவும் சந்தித்துச் சந்தித்து.. ஸசின் பேச்சைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. ஸசினுடைய பெற்றோர்களுக்கும் பாரத ரத்னா தரவேண்டும்.

52 கருத்துகள்:

  1. // பயணம், வெறுப்பு, சோம்பல் எல்லாம் கலந்து.. எத்தனையோ இழப்புகளில் மனம் சலித்த நிலையில் பதிவுகள் எப்படிப் போனாலென்ன என்று ஒரு கணம்... //

    வருத்தப்படுகிறேன்... (சோம்பல்)

    பதிலளிநீக்கு
  2. இன்னிக்கு நீ சம்பாதிக்கிற வேலை படிச்ச படிப்பு நான் போட்ட பிச்சை.. இன்னிக்கு நீ கட்டியிருக்கிற புடவை என் ரத்தத்தைக் கொட்டி சம்பாதிச்சது.//

    அத்தோடு நிறுத்திக்கொள்பவர்கள் உத்தமர்கள் என்று தோன்றுகிறது . நான் சம்பாதித்த பணத்தில் நீ படித்தாய். அந்த படிப்பில் நீ நல்ல வேலை கிடைத்தது. அந்த வேலைக்கு ஒரு பெண் கிடைத்தாள். அந்த பெண் நாங்கள் சொல்லும் சம்பிரதாயங்களுக்கு உட்பட்டு நடக்கவேண்டும்.

    மாமியார் ஒரு ரூல் புக் போடுவார்கள். அதற்கேற்றபடி பையனுக்கு வரும் பெண் நடக்கவேண்டும்.

    வாழ்க்கை என்ன என்பதற்கு மாமியார்கள் சொல்லும் அதை அப்படியே ஆமாம் சாமி போடும் மாமனார்கள் கொடுக்கும் டெபனிஷன் அக்செப்ட் செய்யும் மருமகள் தான் நல்ல பெண்.

    ஏதாவது ஒரு கணத்தில் வந்த பெண் சொல்வது சரியாத்தானே இருக்கிறது என்றார்போலே பையன் சொல்லிவிட்டாலோ,. என்ன சொக்குப்பொடி போட்டாளோ , என் பையனை அப்படியே கைக்குள் போட்டு கொண்டு விட்டாள் என்று

    ஊர் முழுக்க தம்பட்டம் அடிக்கும் அம்மாக்கள் சாம்ராஜ்யம் இன்னும் இருக்கிறது.

    இதனால், பையனுக்கும் அம்மாவுக்கும் ஒரு கால கட்டத்தில் விரிசல் தோன்றுகிறது. வெளிப்படையாக அம்மாவை அப்பாவை எதிர்த்து பேசா விட்டாலும், அவர்கள் செய்வது அவ்வளவு நியாயமில்லை என்று நினைக்கும் பையன்கள் நிறையவே இருக்கிரார்கள்.

    இத்தனைக்கும் நடுவிலே சச்சின் மாதிரி ஒருவர அம்மாவை போற்றுகிறார் என்றால்,

    அதற்கு அவர் அம்மாவின் நான் இன்டர் பியர்னஸ் இன் எனி ஆப் த சில்டர்ன்ஸ் ஜாப்ஸ் ..ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடும்.

    The fact remains however that even today most parents, if not all, hardly allow their children to lead their lives in their own way.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  3. இனித்தொடர்ந்து எழுதுங்க அய்யா

    பதிலளிநீக்கு
  4. //இந்த வழக்கின் காலக்கட்ட விவரங்கள் யாருக்காவது தெரிந்திருந்தால்.... //

    என் ந்னவு வரவல்ல பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  5. ஆள் விழுங்கி நவம்பர்

    இன்று என் நண்பர் ஒருவரைக் கடைசி முறையாக வழியனுப்பி விட்டு வந்தேன்.

    பதிலளிநீக்கு
  6. எனக்குத் தோணவே இல்லை ஜீவி சார். how awkward. என்னை மன்னிக்கணும்.

    பதிலளிநீக்கு
  7. எவ்வளவு எழுதினாலும் பற்றாக்குறையாகும் topic சூரி சார்.

    பதிலளிநீக்கு
  8. வருந்துகிறேன் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  9. பதிவுகளை இழந்தது வருத்தமாக இருக்கிறது...

    மற்றவை எல்லாம் உங்கள் பாணியில்...

    சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது என் மட்டில் வேதம். எங்கள் குடும்பத்தின் பீமன். பல்லாண்டு பலமோடு வாழட்டும்.//
    உங்கள் சகோதரர் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

    தியாகராஜ பாகவதரைப் பற்றி மாயவரம் ராம்ஜி என்ற பதிவர் எழுதி இருக்கிறார்.அவரின் தம்பி அவரும் வலைத்தளம் வைத்து இருக்கிறார் பெயர் ஆயில்யன் (வலைத்தளம் கடகம்) அவர் எனக்கு கொடுத்தார் அந்த புத்தகத்தை.
    அதில் வழக்கு பற்றி உள்ளது.

    புத்தகம் எழுதியவர் மெயில் முகவரி:
    ramkiji @ gmail.com அவரிடம் பேசி உங்கள் சந்தேகங்களை கேட்டுக் கொள்ளலாம்.
    புத்தகத்தின் பெயர் பாகவதர்.
    அந்த புத்தகத்தில் லக்ஷ்மிகாந்த காண்டம் (கண்டம்) என்று எழுதி இருக்கிறார்.
    பாகவதரின் பிறப்பு முதல் இறப்பு வரை எழுதி இருக்கிறார்.

    இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், தனது இறுதித் தீர்ப்பை அறிவித்து பாகதவரும் கிருஷ்ண்னும் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்ப்ட்டார்கள்.1947, ஏப்ரல் 25. பிற்பகல் 1.15 மணி விடுதலை பெற்ற நாள் என்று எழுதி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  11. தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார், தியாகராஜ பாகதவரின் கம்பீரமான் வாழ்க்கை, சிறைக் கம்பிகளுக்குப் பின் காணாமல் போனது. உய்ரத்தின் உச்சம், பாதாளத்தின் பாதம் இரண்டையுமே பார்த்தவரின் வாழ்கை வரலாறு, அவரது திரைப்படங்களைப் போலவே உணர்ச்சிமயமானது.//
    என்று புத்தகத்தின் அட்டையில் குறிப்பிட்டு படிக்க ஆவலை ஏற்படுத்துகிறார்.
    ஜெ.ராம்கி. ராம்கி என்கிற ஜெ. ராமகிருஷ்ணன் அவர்கள்.

    பதிலளிநீக்கு
  12. புத்தக விவரங்களுக்கு நன்றி கோமதி அரசு.

    யார் கொலை செஞ்சிருப்பாங்க என்ர வம்பை வச்சு புத்தகம் இருக்குதா? :)

    பதிலளிநீக்கு
  13. ஒரு பிள்ளையார் சுழி தான் போட்டுட்டு போனேன்.

    இப்போ அந்த முருகப்பெருமான் சுழி.

    பிள்ளையாருக்கும் முருகனுக்கும் ஒரு பழம் குறித்துத் தான் போட்டி வந்தது.

    முருகனை உலகம் முழுக்க சுத்த வைச்சுட்டார் பிள்ளையார்.

    நீங்கள் முருகனா பிள்ளையாரா ?

    என்று யோசனை வந்தது.

    இந்த வரியில் அதற்கான க்ளூ கிடைக்கிறது.


    எனக்கு இரண்டு அழகான காரணங்கள் இருந்தன. //

    அந்த கானொளியில் அந்த அழகான காரணம் புரிந்தது.

    அது சரி. யார் ஜெயிச்சார் ?

    பீமனை பற்றி கண்டிப்பாக சொல்லவேண்டும்
    பரமாத்மாவை ஒரு பூ போட்டே கவர் பண்ணினவன் அவன்.

    அர்ஜுனன் !!!

    அவனை ( சாரி. அவரை பீமன் என்று சொல்லிவிட்டீர்கள்.)

    திரும்பவும் வருவேன்.



    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  14. யார் கொலை செஞ்சிருப்பாங்க என்ர வம்பை வச்சு புத்தகம் இருக்குதா? :)

    இருக்கிறது படித்து பாருங்கள்.…

    பதிலளிநீக்கு
  15. யார் கொலை செஞ்சிருப்பாங்க என்ர வம்பை வச்சு புத்தகம் இருக்குதா? :)

    இருக்கிறது படித்து பாருங்கள்.…

    பதிலளிநீக்கு
  16. யார் கொலை செஞ்சிருப்பாங்க என்ர வம்பை வச்சு புத்தகம் இருக்குதா? :)

    இருக்கிறது படித்து பாருங்கள்.…

    பதிலளிநீக்கு
  17. அப்பதுரை அவர்களே! நான் தெய்வமே நு ஒரு ஓரமா உட்காந்து இருக்கேன் ! என் வாய பிடுங்கறேர் ! மூன்ரெழுத்து அரசியலார், ஒரு ஜட்ஜ்,வக்கீல், என்று பலர் அடையார் பங்களாக்களில்"ஜல்ஸா"நடத்துவார்கள். அதொடு ---குயில் ஒரு பிரபல செட்டியாரை ரயிலில் போட்டுப்பார்த்ததாக செய்தி உண்டு ! இதெல்லம் கேள்விதான் ! அந்தப்பாவி லட்சுமி காந்தன் இதைப்பற்றி அடுதவரம்வரும் என்று எழுதியிருந்ததை தடுக்க நடந்த கோலை என்றும் கூறு வார்கள்!
    ரங்கதுறை என்ற ரண்டார்கை வழக்கு பற்றி எழுதியுள்ளாற் ! வட்சுமி காந்தன் கொலைவழக்கு என்று நாடோடிப்படல்காளுமுண்டு ! என்.எஸ் கிருஷ்ணனுக்காக கெ எம் முன்ஷி வாதாடி அவர் விடுதலைக்கு அஸ்திவாரம் பொட்டர் ! அந்தக்காலத்தில் அவருடைய வாதம் பற்றி சிலாகித்து பேசுவர்கள் ! எனக்கு ஒன்றும்தரியாது ! நான் வாயத்திறக்க மாட்டேன் ! அநியாயத்துக்கு என்னை மாட்டி விடப் பர்க்காதீர் ! வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்..

    பதிலளிநீக்கு
  18. // ஆள் விழுங்கி நவம்பர் என்னையும் விழுங்கிவிடுமோ என்று ஒருகணம் தோன்றியது உண்மை. நிலமை இப்படி இருக்கையில் ப்லாக் போனதைப் பற்றிக் கவலைப்பட்டாலும் எதுவும் செய்ய முடியவில்லை. பயணம், வெறுப்பு, சோம்பல் எல்லாம் கலந்து.. எத்தனையோ இழப்புகளில் மனம் சலித்த நிலையில் பதிவுகள் எப்படிப் போனாலென்ன என்று ஒரு கணம்.. ஒரு கணம் எண்ணியதை ஒப்புக்கொள்கிறேன். //

    ரொம்பவே வருத்தமா இருக்கு. மனம் தளர்ந்ததால் உடல் தளர்ச்சியா? உடல் தளர்ச்சியால் மனத் தளர்ச்சியா? தெரியலை. என்றாலும் உங்களுக்கு இப்படி எல்லாம் தோன்றியது என்பதே கஷ்டமா இருக்கு. இனி தைரியமாக இருங்க.

    ஹிஹிஹிஹி, துணக்கு, ஆறுதலுக்கு எல்லாம் அவன் பார்த்துப்பான் அப்படினு நினைச்சுக்குங்களேன்! யானை பலம் வந்துடும்! :)))))

    பதிலளிநீக்கு
  19. சூரி சாரின் பின்னூட்டங்களை எல்லாம் நான் படிக்கவே இல்லை. எனக்கு ஒண்ணுமே தெரியாது. :))))

    பதிலளிநீக்கு
  20. லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்குனு கேள்விப் பட்டிருக்கேனே தவிர இத்தனை விபரங்கள் இன்றே அறிந்தேன். கோமதி அரசுவின் விபரங்களும் புதியவையே. புத்தகம் வாங்கிப் படிக்கணும் போல இருக்கு! எத்தனையோ ஆசைகளில் இதுவும் ஒண்ணு. :))))

    பதிலளிநீக்கு
  21. உங்கள் தம்பிக்கு தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள். பீமன் போல வலுவோடும், பலத்தோடும் மனத்திண்மையோடும் வாழவும் வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  22. மறந்துட்டேனே, கண் பிடுங்கி நீலன் கதை கிடைச்சுதா? அதோட முடிவு எழுதணும். சீக்கிரமா எழுதிடுங்க. :))))

    பதிலளிநீக்கு

  23. எழுதிய பதிவுகள் காணாமல் போக வாய்ப்பு உள்ளதா? எப்படிசேமிப்பது?

    பதிலளிநீக்கு
  24. லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு பற்றி ராண்டார் கை அவர்கள் அண்ணாநகரில் இருந்து வெளியாகி வந்த ஒரு பத்திரிகையில் ஐந்தாறு வருடங்களுக்கு முன் படித்தது . அவ்வளவு ஊன்றிப் படிக்கவில்லை. ஆனால் இந்த வழக்கு நடந்து கொண்ண்டிருந்தபோது என் தந்தையார்(எனெஸ்கே அபிமானி)அரக்கோணத்தில் இருந்து சென்னைக்குச் சென்று வருவார். நான் என் அரக்கோணம் நினைவுகள் என்னும் பதிவிலும் குறிப்பிட்டிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  25. என் இரண்டு பிள்ளைகளும் (இரண்டே வயது வித்தியாசம்) சண்டை போட்டுக் கொள்வது நிறையவே பார்த்திருக்கிறேன அதே சமயம் பள்ளியில் இளையவனை யாரோ அடித்துவிட்டார்கள் என்று அவர்களுடன் சண்டைக்குப் போய்விழுப்புண்களுடன் மூத்தவன்வந்ததையும் பார்த்திருக்கிறேன். நவம்பர் ஆள்விழுங்கி என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். நவம்பரில்தான் நான் பிறந்தேன்

    பதிலளிநீக்கு
  26. சச்சின்,
    'இந்த பாரத ரத்னா என் அம்மாவுக்கு' என்றார்.

    அதற்காகவே.. அந்தப் பண்புக்காகவே.. பாரத ரத்னா!..

    மனம் நெகிழ்ந்தேன்!..

    பதிலளிநீக்கு
  27. எழுதிய பதிவுகள் காணாமல் போக வாய்ப்பு உள்ளதா? எப்படிசேமிப்பது?//

    gmb sir. pl spare me your ear.
    let none else hear this.
    எழுதும்போதே ஒரு நகல் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
    இல்லையென்றாலும், இப்போதைக்கு ஒரு ஐடியா.
    செட்டிங்க்ஸ் க்கு போய் அங்கு இம்போர்ட் என்று ஒரு பட்டன் இருக்கிறது.
    அதில் முயற்சிக்கலாம்.

    ஆனாலும் ஒரு வார்த்தை.

    கூகிள் என்றாவது ஒரு நாள் ( அந்த நாள் அடுத்த 4 அல்லது 5 வருஷங்களுக்குள் வந்தாலும் ஆச்சரியப்படாதீர்கள் ) இனி பைட் சர்வீஸ் என்று வருஷத்துக்கு ரொம்ப குறைச்சலா 50 டாலர் ( அ சாருக்கு அது ஒண்ணுமில்ல.ஆனா நம்ம மாதிரி பென்சனருக்கு படா காசு.) கட்டசொல்வாங்க. அப்படின்னு எனது கணிப்பு.

    முன்னமேயே நான் 1995 முதல் ஆங்கிலத்தில் எழுதிய எல்லாமே ஒரு நாள் காணாமல் போய் விட்டது. the silent zone within என்று தலைப்பில் நான் எழுதியதெல்லாம் சைலெண்டா போய்விட்டது.

    இன்னும் ஒன்று.

    என்ன போனால் போகட்டும் போடா என்று இருந்தால் அதை பற்றி கவலை பட வேண்டாம்.

    பொழுது போகவில்லை. நாம் எழுதுவதை ரசிப்பதற்கு ஏன் படிப்பதற்கு கூட பிள்ளைகள் தயாராக இல்லை. அதற்கு ஆள் பிடிக்க வேண்டிய நிலை.

    நானே போகவேண்டிய க்யூவில் நிற்கிறேன். நான் எழுதியது எங்க போனால் என்ன ?

    என்ற ஆடிட்யூட் இருந்தாலும் நல்லது தான்.

    கம்பனும் வள்ளுவனும் என்ன நகல் எடுத்து வைத்துக்கொண்டார்களா என்ன ?

    அவர்கள் போல் நம் எழுத்து இருக்குமாயின் தொலைந்து போய் விடும் என்ற பயமும் வேண்டாம்.

    சோதிடன் என்ற முறையில் கேட்டால் :
    ஆன்மீக வழியில்,
    தொலைந்து போன வற்றை திரும்பி பெற பாதுகா சஹஸ்ரத்தில் ஒரு ஸ்லோகம் இருக்கிறது. வீர வைஷ்ணவர்களைக் கேட்டு பாடம் பண்ணிக்கொண்டு அப்பறம் சொல்லவேண்டும்.

    என்னது ..சீக்கிரம் முடிக்கணுமா ?

    ஆமாம். நான் என்ன எழுதறேன் அப்படின்னு திருவரங்கத் தாயார் காத்துக்கொண்டு இருக்கிறார்.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  28. அக்கறைக்கு நன்றி கீதா சாம்பசிவம்.
    நான் சூரி சார் கட்சி - போனால் போகட்டும் போடா.
    உடல் தளர்ச்சி தான் அப்படி நினைக்கத் தோணுதே தவிர.. மனத் தளர்ச்சினா என்னான்னே எனக்குத் தெரியாது. எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.. இன்னிக்குப் போனா நாளைக்கு ரெண்டுனு.. ரொம்ப நாள் அதற்கு அர்த்தம் தெரியாமல் இருந்தேன்.. இப்ப யோசிக்குறப்ப அதன் starkly casual யதார்த்தம் அசர வைக்குது. அதனால... யார் நம்மைப் பாத்துண்டா என்ன? ஹிஹி.

    பதிலளிநீக்கு
  29. பதிவை விடுங்க ஜிஎம்பி சார்.. ரெண்டு நிமிஷத்துக்கு முன்னால போட்ட கமென்ட்டைக் காணோம்..

    பதிவை backup செய்து கொள்வது நல்லது. (க்கும்.. இப்ப நான் சொல்லி என்ன பண்ண?) நான் blog copier ஒண்ணு உபயோகிக்கிறேன் - அதுல password எல்லாம் போடணும்.. கொஞ்சம் சிக்கல். ப்லாகர்லயே export import வசதி இருக்கு இப்ப.



    பதிலளிநீக்கு
  30. காணாமல் போன கமென்ட்.

    உங்களுக்குத் தெரியாத கிசுகிசுவா காஸ்யபன் சார். மூணெழுத்து நடிகர் தவிர மிச்ச எல்லாரையும் கண்டுபிடிச்சேன்.. எந்த மூணெழுத்து நடிகர்னு குழப்பமா இருக்குது. அப்புறம்.. இசைக்குயில் படே ஆளா இருந்திருப்பாங்க போலிருக்கு.

    என்ன? ரண்டார் கை அசல் பேரு ரங்கதுரையா?!!! இனிமே எம்பேரு அண்டார் முய்.

    பதிலளிநீக்கு
  31. ப்லாக் காணாமல் போறது சகஜம் ஜிஎம்பி சார். சகஜம்னாலும் நம்மைச் சுத்தி அடிக்கடி நடக்காததால we feel secure. இப்பல்லாம் நிறைய hack பண்றாங்க. ரஷ்யாவிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் திடீர்னு ஆயிரக்கணக்குல ஹிட்ஸ் வரும்.. மலேசியாவிலந்து வருதுனா அவங்க பதிவை காபி அடிக்குறாங்கனு நல்லா தெரியும். ரஷ்யாவிலிருந்து வர்ற காரணம் தெரியலே - சில நேரம் ரஷ்யா போர்வைல வேறே ஏதாவது நாட்டுலந்தும் ஹிட்ஸ் வரலாம். இங்கே தான் என் ப்லாகோட சிக்கல்னு நினைக்கறேன். அப்படி வரப்போ நான் ஆன்லைன்ல இருந்தேன்னு வையுங்க.. பாஸ்வேர்டு பிடிச்சுடுறாங்களோனு ஒரு சந்தேகம். டெக்னிகல் திறமை இருந்தா கொஞ்சம் தோண்டிப் பார்க்கலாம்.. அதுக்கு எங்கே போறது சொல்லுங்க! பூத்தூரிகை டயத்துல இப்படித்தான்.. கமென்ட் போட்டவங்க இமெயிலுக்கு பலான படங்கள் அனுப்பிட்டாங்க. (நான் நிறைய கமென்ட் போட்டிருக்கேன், எனக்கு வஞ்சம் பண்ணிட்டாங்க பாவிங்க. முருகர் படம் அனுப்பி வச்சாங்க)

    பதிலளிநீக்கு
  32. மூணாவது சுழியையும் சூப்பராவே போட்டீங்க சூரி சார்.

    //நானே போகவேண்டிய க்யூவில் நிற்கிறேன். நான் எழுதியது எங்க போனால் என்ன ?

    கொஞ்சம் சங்கடமா இருந்தாலும் யதார்தத்தை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

    தொலைந்து போனதை திரும்பப் பெற ஸ்லோகமா? ஆ! இருவது வருஷத்தைத் தொலைச்சுட்டு நின்னா பாதுகா சஹஸ்ரம் படிக்கலாமா சொல்லுங்க..

    பதிலளிநீக்கு
  33. சகோதரர்களில் அர்ஜூனனை விட பீமன் எனக்குப் பிடிக்கும் சூரி சார். கடைசி இரண்டும் ஒப்புக்கு சப்பாணி என்றாலும் முதல் மூவரில் பீமன் மட்டுமே was impeccably clean.. எந்த வித அடாவடியும் செய்யாமல் சொந்த வலுவில் நின்றான் என்று நினைக்கிறேன். அர்ஜூனன் போல் ஒரு சகோதரன் வேணுமா அல்லது பீமன் போலவானு யாராவது என்னிடம் கேட்டால், என் சாய்ஸ் பீமனுக்கே.

    பதிலளிநீக்கு
  34. சச்சின் வருமான வரி படிவத்தில் தன் தொழில் நடிப்பு என்று குறிப்பிட்டதாக நினைவு!

    பதிலளிநீக்கு
  35. இன்றுதான் உங்கள் எழுத்தைப் படிக்கிறேன். சுவையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  36. //சச்சின் வருமான வரி படிவத்தில்

    aha.. பாரத ரத்னாவுக்கான அசல் requirements வெளிவருதா..? ஸசின் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்பதும் கொஞ்சம் அறிய முடிந்தது (க்ரிகெட் டீமை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தது மட்டும் காரணமல்ல)

    பதிலளிநீக்கு
  37. அப்பாதுரை அவர்களே! நான்" கிசுகிசு" எல்லம் தெரியதவன் ! "--குயில் "னு தான் எழுதியிருந்தேன் ! நீர் கூட எதையாவது சேத்தா?அதுக்கு நானா பொருப்பு ! நான் ஆட்டைக்கு வல்ல சாமி !---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  38. Do not worry. You can do it and start doing slowly and soon you will be able to recollect all the posts on one fine morning.
    Brotherhood days made me to feel for a moment. Long live to you and also to your brother and also wish that it continues and the bond becomes stronger and stronger.
    Regarding Sachin, the argument put forward is : Sachin is worth of it; no doubt but there are also others in other faculties who deserve and who are neglected so. That's all.

    பதிலளிநீக்கு
  39. Sir, This is too much; you and shri kasyapan are openly discussing some matters but in coded language making us to pluck your hair (already my hair is less in density. Why sir? Why this sadist (sorry for using this word; I do not get any other word and from this you can understand my state of mind) mentality.

    பதிலளிநீக்கு
  40. //அர்ஜூனன் போல் ஒரு சகோதரன் வேணுமா அல்லது பீமன் போலவானு யாராவது என்னிடம் கேட்டால், என் சாய்ஸ் பீமனுக்கே.//


    இதெல்லாம் என்ன அண்டார் முய் சாய்ஸ்லேயா இருக்கு ?

    அப்படியே கேட்டாலும்,

    இவங்களுக்குள்ளே யாராவது ஒருவர் அப்படின்னு,

    துர்யோதனன், துச்சாதனன், ஜாபாலி, இரண்யன் , இராவணன்,
    போனாப்போறது அப்படின்னு ஒரு சுப்பு தாத்தாவையும் சேர்த்துத்
    தான் லிஸ்ட் தரப்போறாரு. உங்க விருப்பம் என்ன அப்படின்னு கேட்கப்போறாரு....
    யாரு கேட்கபோறாரா ?
    .அதாங்க..
    அந்த ஆண்டவர் மெய்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  41. This is for MOHAN BARODA
    NOT FOR ANDAAR MUY.
    I FULLY EMPATHISE WITH YOUR PRESENT HAIR CONDITION YOU MEAN YOU ARE BALD. DONT WORRY.
    PLEASE SEE THIS SIDESHOW.
    http://www.medicinenet.com/hair_loss_pictures_slideshow/article.htm
    AND APPLY ON YOUR HEAD AND A LITTLE ON ANDAR MUY HEAD ALSO.
    IT HAS A MIRACULOUS EFFECT OF SPRINGING NEW HAIR ON BALD PLACES AND CREATING BALDNESS ON PLACES WHERE THERE IS PRESENTLY HAIR.

    SUBBU THATHA

    பதிலளிநீக்கு
  42. Subbu Thatha Sir,
    I did not ask for the medicine for growing hair; whether it grows or not, it is not going to make any impact. But now it seems my heart will break if I do not know the persons who are coded in their conversation. Please do not prescribe any medicine or reference to website for heart related ailments.

    பதிலளிநீக்கு
  43. //shri kasyapan are openly discussing some matters but in coded language 

    ஹிஹி மோகன்.. முதுகு வீங்கிடுமோனு பயம் தான் எனக்கு. காஸ்யபன் அவர்களுக்கு அந்த பயம் எப்பவுமே கிடையாது. தீக்கதிர்னா சும்மாவா?
    இன்னொன்று. many respected (worshipped) celebrities seem to have a disreputable past. புதுச் சட்டையில் பழைய அழுக்கை பூசுவானேன்?

    பதிலளிநீக்கு
  44. // whether it grows or not, it is not going to make any impact. 

    என்னுடைய மயிருக்கு முன் - மயிருக்குப் பின் படங்களைப் பார்த்தால் அப்படிச் சொல்லமாட்டீங்க ;-)

    பதிலளிநீக்கு
  45. //என்னுடைய மயிருக்கு முன் - மயிருக்குப் பின் படங்களைப் பார்த்தால்... /

    No...nO...No. dont do it.
    One never allows others to see one's precious thing and that too live.

    st

    பதிலளிநீக்கு
  46. //One never allows others to see one's precious thing and that too live.

    rofl :-)

    பதிலளிநீக்கு
  47. rofl :-)
    மோஹன் பரோட்டா வுக்குத்தான் சங்கேத மொழியினால் தலையைப் பிய்த்தொக்கொல்வதற்கு மனாபொலி இல்லை. எல்லாருக்குமே அது போல தான் என்று சொல்லும் வகையில் நீங்கள் இந்த

    நாலெழுத்து பதிலைப் போட்டு என்னை அசத்தி விட்டீர்கள்.

    நேற்று முழுவதும் என்னை ஏதோ திட்டி திட்டி திட்டி திட்டி திட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டி எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்து இருந்தேன்.

    அப்படி நான் ஒன்றும் திட்டும் படியாக எழுதவில்லையே , அ .து. சாருக்கு தேவையான சங்கதியை தேவையான சமயத்தில் தானே சொல்லியிருக்கிறேன்.

    அதுவும் பாரத ரத்னா போலே. எப்ப கொடுக்கவேணும் அப்படின்னு தானே அனலைஸ் பண்ணி தந்து இருக்கேன் அட்வைஸ் ..என்ன தான் அப்படி இந்த பதிலில் இருக்கிறது ?

    இவர் பதிலுக்கு என்ன அர்த்தம் ?

    ஒரு போன் போட்டு கேட்டு விடலாமா ? என்று கூட நினைத்தேன்.

    இன்று காலையில் தான் வலையில் அதன் அர்த்தம் என்ன என்று கண்டு பிடித்தேன்.

    ஆஹா. !!! rolling on floor that is what is you mean. and laughing too.
    நீங்கள் தலையில் புரண்டு உருண்டு சிரிக்கிறீர்கள் என்று சொல்வதாக அர்த்தம் என தெரிந்துகொண்டேன்.


    இருந்தாலும் திடீர்ரென்று ஒரு ஐயம் மனதிலே கார்மேக கருமை போல தோன்றியது.

    i read an example for understanding more:

    அய்யய்யோ...

    Oh,n....a, my boss just came to my cubicle. I was so embarrassed for him because his fly was open, and I didn't have the courage to tell him.
    (na....ha:) ROFL! A....a !!You mean he just talked to you with his front door open the whole time! LOL!

    rofl:

    i ippa rofl.

    s.t.

    பதிலளிநீக்கு
  48. Glad to know that you have recovered. Wishing you lot of good health and happiness.

    பதிலளிநீக்கு
  49. இப்போது பழைய நிலைக்குத் திரும்பி விட்டீர்கள் என்ற நினைக்கிறேன்.

    தம்பியுடன் (belated பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவருக்கு) உங்கள் உறவு ஆரோக்கியமாக இருப்பது பற்றி சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் அம்மாவும் இதற்குக் காரணம் என்று சொன்னீர்களே, அது இன்னும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது.
    ஒரு பிள்ளையிடம் தனக்கு ஆதரவு தேடி மற்ற பிள்ளைகளை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லும் தாய்மார்கள் நிறைய இருக்கிறார்கள்.

    Dropbox-இல் நமது பதிவுகளை சேமித்து வைத்துக்கொள்ளலாம் என்று என் பிள்ளை சமீபத்தில் எனக்கு சொல்லிக்கொடுத்தான். User Name, Password உருவாக்கிக் கொள்ள வேண்டும். நம் கணனியிலேயே வந்துவிடுகிறது. நம் பைல்களை அதில் காப்பி பேஸ்ட் செய்ய வேண்டியதுதான். இணையத்தில் தான் திறக்கும். எல்லாம் செய்துவிட்டு பார்த்தால் வெறும் பாக்ஸ் பாக்ஸ் தான் இருக்கிறது. தமிழ் enable செய்தால் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.
    என்னுடைய ஸ்டோரேஜ் என் அம்மாதான். நான் எழுதுவதை (ஒரிஜினல்) அம்மாவிற்கு பிரிண்ட் அவுட் எடுத்து பைலில் போட்டுக் கொடுத்து விடுகிறேன்.
    ஸோ, கவலையில்லை.

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் என்று நீங்கள் சொல்லியிருக்கும் யாரையும் எனக்கு கண்டுபிடிக்க முடியவில்லை - சந்தோஷப்படுவதா? வருத்தப்படுவதா?

    மறுபடி உங்கள் வழக்கமான பதிவுகளுடன் உலா வர அன்பான வேண்டுகோள்.

    பதிலளிநீக்கு
  50. தொலைந்து போன பொக்கிஷங்களை

    மீட்டெடுத்து பதிவாக்குங்கள்..!

    பதிலளிநீக்கு
  51. A RANDARGUI என்பது RANGADURAI என்ற சொல்லின் anagram என்று எங்கேயோ படித்தேன். :-)

    பதிலளிநீக்கு