
சிறுகதைகள் ஆக்சிஜனைப் போன்றவை. தினசரி யதார்த்தத்தின் வேகத்திலும் அயர்விலும் விதியென்றுத் தொலைந்து போகும் பரிதாபத்துக்குரிய ஆயிரக்கணக்கான சபிக்கப்பட்ட மாந்தரைப் போல் தொலையாமல்.. குலையாமல்.. வாழ்வின் நுகர்ச்சிகளை அறிந்தே அடைந்தே தீருவது என்ற உறுதியுடன் சோர்வை விரட்டத் துணியும் சிலருக்கு, சிறுகதை வாசிப்பு ஆக்சிஜன். துரித ஆகஸ்டு பதினைந்து. அப்படித்தான் நினைக்கிறேன். மொழி, மக்கள், நாடு, இனம், கலாசாரம், பண்பாடு என்று வகை கடந்த, அல்லது வகை சார்ந்த, சிந்தனைப் பிரதேசத்துக்கான உடனடிப் பயணம் சிறுகதை. இலக்கியம் அலக்கியம் போன்றப் பாசாங்கு அளவுகோலோடு திரியாமல்,'படிப்பவர் உணர்வுகளைச் சுண்டியிழுத்தால் அது சிறுகதையின் வெற்றி' எனும் பக்குவத்தோடு படிக்கும் பொழுது அடிக்கடி இலக்கியத்தைத் தொட முடிகிறது.
ம்ம்.. எனக்குச் சிறுகதைகள் பிடிக்கும் என்று எப்போதாவது சொல்லியிருக்கிறேனோ? இல்லையெனில் இப்போது சொல்கிறேன். எனக்குச் சிறுகதைகள் பிடிக்கும்.
சமீபத்தில் பல முறை படித்தப் புத்தகம், 'சூர்ப்பனகை'. கெ.ஆர்.மீரா எழுதிய மனதைப் பிசையும் மலையாளச் சிறுகதைகளை மொழிமாற்றித் தமிழில் வழங்கியிருக்கிறார் கே.வி.ஷைலஜா.
'புத்தகம் படிப்பது எப்படி?' என்று virginia woolf எழுதியக் கட்டுரையைக் கல்லூரி நாளில் படித்திருக்கிறேன். இதற்கு ஒரு கட்டுரையா என்று கேலி செய்ததன் பலனை சூர்ப்பனகை புத்தகம் படிக்கும் பொழுது அனுபவித்தேன். கட்டுரையில், 'புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது புத்தகம் படிப்பதன் முக்கிய சவால்' என்பார் வர்ஜினியா. நுண்மையைக் கண்டுணரும் தேடல் இருக்கிறது பாருங்கள்.. சாகா எழுத்தின் அடையாளம். இந்தத் தொகுப்பில் நிறைய கதைகள் அந்தத் தவிப்பைத் தந்தன.
தொகுப்பில் மொத்தம் எட்டுச் சிறுகதைகள். அனைத்துமே கனமானக் கதைகள். கதைத் தலைப்புகள் ஒவ்வொன்றும் கவிதை. தலைப்புக்காக ஒரு முறை, கதைத்தளத்துக்காக ஒரு முறை, கதைக்காக ஒரு முறை, நடைக்காக ஒரு முறை, சொல்லாட்சிக்காக ஒரு முறை, புரியாத தவிப்பைப் பெற ஒரு முறை, புரிந்த அதிர்ச்சியைப் பெற ஒரு முறை, கதையின் பாதிப்புக்காக ஒரு முறை, பாதிப்பிலிருந்து விடுபட ஒருமுறை என்று பல முறை படிக்க வைக்கின்றன. எட்டில் ஆறு கதைகளாவது படித்த பின் ஆவி போல் நம்மைச் சுற்றிக் கொண்டேயிருக்க வல்லவை.
பொதுவாக, மனதை வருடியோ உலுக்கியோ செல்லும் கதைகள் நிறைய கிடைக்கின்றன. படித்திருக்கிறேன். இத்தொகுப்பில் கதைத் தளமும் சொல்லிச் சென்றப் பாங்கும் அறிவைக் குடைந்தெடுத்து விடுகின்றன. அறிவைக் குடையும் படைப்புகளுக்கு ஆயுள் அதிகம். இது மீராவின் வெற்றி, ஷைலஜாவின் சாதனை. ஷைலஜாவின் ஆக்கத்திறனுக்கு சிறிது நேரத்தில் வருகிறேன். முதலில் புத்தகத்திலிருந்து எனக்குப் பிடித்த நான்குக் கதைகளைப் பற்றி.
சூர்ப்பனகை
அனகா. பெண்ணின் சமூக அடையாளம் அந்தஸ்து அங்கீகாரங்களுக்காகப் போராடும் பெண்ணியவாதி. கணவனைப் பிரிந்து சுதந்திரமாகத் தன் பெண் சீதாவைப் வளர்ப்பவர். தன்னிலையை விட்டுக்கொடுக்காமல் போராடும் கல்லூரி விரிவுரையாளர். 'பெரிய மார்புகள் வைத்து வரைந்த படங்களுக்கும் சுவரெழுத்துக்களுக்குமிடையே பணி புரியும்' அவரை 'சூர்ப்பனகை' என்று அழைக்கிறார்கள். பெயர்க்காரணம் மறுபடியும் கதையின் இறுதியில் நம்மைத் தாக்கும் பொழுது ஒரு கணம் மூச்சுத் திணறுகிறது. கதையின் இறுதியில் அனகாவுக்கு மார்புப் புற்று நோய் வந்து மார்பை அறுத்தெறிய வேண்டி வருகிறது. சிகிச்சைக்கு முன் சீதாவை அழைத்து, "உனக்கு என்ன வேண்டும் கேள்" என்கிறார். 'லேக்டோஜன்' குடித்து வளர்ந்த அனகாவின் பெண், "முலைப்பால்" என்கிறாள். சிறுகதை இங்கே முடிந்துவிடுகிறது என்று நான் நினைத்தேன். ஆனால் அதைத் தொடர்ந்து சில வரிகள் எழுதி கதையை முடித்த விதம் அதிர்ச்சியூட்டும் வகையில் பிரமாதம். கதையின் ஆதார ஆண்-பெண் சமத்துவ வாதங்களும் நுண்பிரசாரங்களும் சொல்லாட்சியும் நடையும் திகைக்க வைக்கின்றன. 'இனிப்பூட்டப்பட்ட வார்த்தைகள் கட்டுப்பட்டியானப் பெண்களுக்கே பொருந்தும். வீழ்ச்சிகளை அறிந்துகொண்டே செய்யும் சாகசம் தான் பெண்ணியம்' என்ற வரிகள் சிந்திக்கத் தூண்டின. ஒரு கட்டத்தில், 'ஆணால் எப்படிக் கட்டுப்பட்டியாக வாழமுடிகிறது?' என்ற அனகாவின் கேள்வியைப் படித்ததும் சத்தியமாகத் திடுக்கிட்டேன்.
செய்திகளின் நாற்றம்
தலைப்பின் கவிதைத்தனத்தை ரசித்தபடி படிக்கத் தொடங்கினால் நொடிகளில் கதைத் தளம் நம்மைக் கட்டிப் போடுகிறது. ஜர்னலிசத்தில் முனைவர் பட்டம் பெற்ற அன்னா ஒரு சாதாரணப் பத்திரிகையில் இரங்கல் செய்தி, மரண அறிவிப்பு, சவ அடக்க விவரங்கள் எழுதுபவராகப் பணிபுரிகிறார். அன்னா, மகன் சன்னி, காதலன் சந்தோஷ் என்ற மூன்று பாத்திரங்களினூடே சொல்லப்பட்டிருக்கும் இறுக்கமான கதை. சூர்ப்பனகை போலல்லாமல் இந்தக் கதையின் முடிவோடு என்னால் ஒத்துப் போக முடிந்தது. ஆனால் எதிர்பார்க்கவில்லை. தில்லிக்குப் பெயரும் பொழுது, 'மரணச்செய்திகளின் வாடையை மட்டுமே உன்னால் அறிய முடிகிறது; வேறு ஜர்னலிச வேலைகளுக்கு நீ லாயக்கில்லை' என்றப் பொருளில் கிண்டலடிக்கும் சந்தோசின் வரிகள் அன்னாவின் தன்மானத்தை அப்போதைக்கு ரணப்படுத்தினாலும், கதையின் இறுதியில், அன்னாவின் கணுக்கால் நாற்றத்தைப் படிக்கையில் சம்மட்டியாக நம்மைத் தாக்குகின்றன.
அர்த்த ராத்திரிகளில் ஆத்மா
'ஹெட்மிஸ்ட்ரஸ் சரளா தூங்க ஆரம்பித்தவுடன் அவளுடைய ஆத்மா விழித்துக் கொண்டுவிடும். உடலிலிருந்து மெதுவாக இறங்கி.. வேட்டைக்காரன் போல் சோம்பல் முறித்து வெளியே வரும்' என்றுத் தொடங்கும் முதல் பத்தியில் தொலைந்து போனவன், கதை முடிந்து வெளியே வர ஒவ்வொரு முறையும் மிகவும் சிரமப்பட்டேன். உறங்கும் பொழுது உடலை விட்டுப் பிரிந்து உலவும் ஆத்மாவின் பயண அனுபவங்கள், விழித்த நிலையில் பாதிக்குமானால் என்னாகும்? உன்னதமான கதைத்தளம். கற்பனை. 'கனவுகளென்றால் என்னவென்று எத்தனை பேருக்குத் தெரியும்?' என்று முடித்திருக்கும் விதம் பிரமாதம் என்றாலும், நுட்பத்தை முகத்தின் எதிரே நிறுத்திக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. தொகுப்பில் என்னை மிகக் கவர்ந்தக் கதை.
இறந்தவளின் கல்யாணம்
'இறந்தவளின் கல்யாணம் இப்படியாக மங்களமாக நடந்தேறியது' என்று முடிகிறது கதை. முடிவை முதலில் படித்து அது வழங்கிய மெல்லிய ஆச்சரியத்தில் தூண்டப்பட்டு முழுக்கதையும் படித்தேன். ஆதர்ச நிலையிலிருக்கும் ஒருவருக்கும் அவரை அப்படி நிறுத்தியவருக்கும் இடையிலான கோழைத்தனம் பூசிய அபாண்டமான நிழலுறவின் விளைவுகளை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார். படித்ததும் சிலந்தி வலையில் எதிர்பாராமல் விழுந்துச் சிக்கியச் சிறு பூச்சி போல், நாற்புறமும் எச்சில் அமிலத்தால் தன்னை வாட்டிப் புரட்டும் சிலந்தியைத் தடுக்க முடியாமல் தவிப்பது போல், உணர்ந்தேன். ஹா! என்ன கற்பனை! எப்படிப்பட்ட நடை! திருமணமும் சிலருக்கு மரணச்சடங்காகவே அமைகிறது என்ற எண்ணத்தைத் தடுக்க முடியவில்லை.
மொழிமாற்றம் எளிதேயல்ல. மூலப்படைப்பின் வெற்றியில் அந்த மொழிக்குப் பெரும் பங்கிருக்கிறது. மூலப்படைப்பின் உயிர்த்துடிப்பில் அந்த மொழிக்குப் பெரும் பங்கிருக்கிறது. அந்த துடிப்பை இன்னொரு மொழியில் வெற்றிகரமாக வழங்குவது எப்பேற்பட்ட ஆற்றல்! ஷைலஜாவின் தமிழாக்கத்தை மட்டுமே படித்த நான், மூலத்தின் தாக்கத்தைப் பெறும் அறிவில்லையே என்று ஏங்கினேன் என்றால் அது ஷைலஜாவின் சாதனை. தமிழில் இப்படியெல்லாம் எழுத முடியுமா என்று வியக்க வைத்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு எழுத்தையும் 'கைபிடித்து அழைத்துப் போய் மலையுச்சியில் வைத்து அழகு பார்க்கும் பிரபஞ்சன்' போலவே நானும் உணர்கிறேன்.
சூர்ப்பனகை
மலையாள மூலம் கெ.ஆர் மீரா | தமிழில் கே.வி.ஷைலஜா
வம்சி புக்ஸ் வெளியீடு, டிசம்பர் 2009, ரூ.50
வாசிக்கத் தூண்டுது உங்க சிபார்சு. அவசியம் வாசிக்கிறேன்.
பதிலளிநீக்கும்.... சுவாரஸ்யமாய்த் தெரிகிறது. அர்த்தராத்திரிகளில் ஆத்மா... தலைப்பும் கருவும் கவர்கிறது.
பதிலளிநீக்குதங்கள் அருமையான விமர்சனம் படித்ததும்
பதிலளிநீக்குஅவசியம் படித்துவிடவேண்டும் என
முடிவெடுத்துவிட்டேன்
விரிவான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
//'இனிப்பூட்டப்பட்ட வார்த்தைகள் கட்டுப்பட்டியானப் பெண்களுக்கே பொருந்தும். வீழ்ச்சிகளை அறிந்துகொண்டே செய்யும் சாகசம் தான் பெண்ணியம்' //
பதிலளிநீக்குஎங்கேயோ நெருடல் தெரிகிறது. அது நேரடியான உணர்தலை ஏற்படுத்த தவறுகையில்.. எஸ். இங்கே தான்.
அந்த சாகசம்! என்ன வகைத்தான சாகசம் அது?..'வீழ்ச்சிகளை அறிந்து கொண்டே, சாகசத்தைத் துய்க்கும் களிப்பிற்கான சாகசமா?.. வெற்றி இலக்கில்லாத சாகசமா?.. யாரைப்பற்றியும் கவலை கொள்ளாத தன் ஒருத்தியின் திருப்திக்கான சாகசமா?.. அல்லது எதிராளியை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்கான சாகசமா? எந்த வகை என்று தெரியாத பொழுது, இது தான் பெண்ணியம் என்று இறுதித் தீர்ப்பு வழங்க மனசு யோசிக்கிறது.
'கட்டுப்பட்டியான பெண்களுக்கான பெண்ணியம் என்ன' என்கிற கேள்வியும் எழுகிறது. இல்லை, அவர்களைக் கணக்கிலேயே சேர்த்துக் கொள்ளவில்லையோ?..
அதே மாதிரி, அனகாவின் பார்வையிலான கட்டுப்பட்டியாக வாழும் ஆண்களுக்கான ஆண்ணியமும்!
இதெல்லாம் குறுக்கே குறுக்கே விளைந்த எண்ண நெசவே தவிர, உங்கள் ப்ரசண்டேஷன் அற்புதம்.
இதற்காக, இதற்காக என்று படித்த ஒவ்வொரு முறையையும் எதற்காக என்று அடுக்கியிருக்கிறீர்கள் அல்லவா, அதுமாதிரி, நீங்கள் வியந்து விவரிக்கும் வரிகளுக்காகவே தவறாது ஒருமுறை படித்துப் பார்த்து விட வேண்டுமெனத் தோன்றுகிறது.
அப்பாதுரை அவர்களே! ஷைலஜா அவர்களுக்கு வங்காளி,மராட்டி,கன்னட மொழியும் தெரிந்திருந்தால் தமிழ் சிறுகதைஉலகம் எவ்வளவு உன்னதமான செழுமை பெற்றிருக்கும் என்று நினப்பதுண்டு நான்---வாழ்த்துக்கள்---காஸ்யபன்.
பதிலளிநீக்குThe review is very interesting. Makes you want to read the book. But can't promise that I would read it. "Reading for pleasure" has taken a back seat for now...
பதிலளிநீக்குசுவாரஸ்யமாக இருந்தது விமர்சனம்... வாங்கிப் படிக்க வேண்டும்... நன்றி...
பதிலளிநீக்கு'சூர்பனகை' அறிமுகத்துக்கு நன்றி.
பதிலளிநீக்குஇதுவரை வந்த உங்கள் புத்தக அறிமுக பதிவுகளில் நீங்கள் இந்த அளவு உணர்ச்சி வசப்பட்டு எழுதி இருப்பது இதுவே முதல் முறை என்று நான் நினைக்கிறேன். முதலில் சிறுகதையின் தனித்துவத்தை அருமையாக எடுத்து சொல்லி, பின் இந்த தொகுப்பில் உள்ள கதைகளை பற்றி சொல்லி, இறுதியாக ஷைலஜா அவர்களின் சாதனையை சொல்லி பதிவை முடித்த விதம் மிகவும் எடுப்பாக இருக்கிறது.
நீங்கள் 'இதற்காக இதற்காக' என்று கதையை படித்த விதத்தை சொல்லி இருப்பதை படித்தபோது, எனக்கு 'அதற்காக அதற்காக' எல்லாம் ஒரு முறை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. :) புத்தக பிரியர்கள் உங்களோட இந்த விமர்சனத்தை படித்தாலே புத்தகம் எளிதில் விற்பனை ஆகிவிடும். :)
அறிமுகபடுத்தி உள்ள நான்கு கதைகளின் தளங்களுமே மனதை கவர்ந்தது. இருந்தாலும் ஆத்மா, கனவுகள் இதை பற்றி வரும் 'அர்த்த ராத்திரிகளில் ஆன்மா' கதையை இப்பொழுதே படித்து விட மாட்டோமா என்று மனது பரபரக்கிறது. 'இறந்தவளின் கல்யாணம்' இந்த தலைப்பே மனதில் உழன்று கொண்டிருக்கிறது. உணர்வுகளை கீறி செல்கிறது.
'பெண்ணியம்' பற்றிய ஜி.வீ. அவர்களின் கருத்து சரியானதே. அவருடைய கேள்வி சிந்தனையை தூண்டுகிறது. அருமையான பின்னூட்டம் ஜீ.வீ.
ஷைலஜா அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
படிக்கத் தூண்டும் விமர்சனம். இணையம் மூலம் வாங்க முயற்சிக்கிறேன்....
பதிலளிநீக்குவாங்கத் தூண்டும் விமரிசனம்!
பதிலளிநீக்குநான் நம்ம ஷைலூன்னு நினைச்சுக்கிட்டு அவுங்ககிட்டே கேட்டால்.... கிடைச்ச பதில்...
'ஙே'.....
பரவாயில்லை.இந்த ஷைலஜாவையும் நம்ம ஷைலஜா 2 ஆக்கிட்டேன்
kv ஷைலஜா மொழிபெயர்ப்புத்துறையில் பிரபலம்! இந்த சூர்ப்பனகை அறிமுகம் உங்களால் தெரியவந்தது வாங்கிடறேன் கண்டிப்பா
பதிலளிநீக்குதுளசி கோபால் கூறியது...
பதிலளிநீக்குவாங்கத் தூண்டும் விமரிசனம்!
நான் நம்ம ஷைலூன்னு நினைச்சுக்கிட்டு அவுங்ககிட்டே கேட்டால்.... கிடைச்ச பதில்...
'ஙே'.....
பரவாயில்லை.இந்த ஷைலஜாவையும் நம்ம ஷைலஜா 2 ஆக்கிட்டேன்
>>>>>>துள்சி ! எனக்கு தமிழ் ஒண்ணுதான் ஓரளவு ஒழுங்கா தெரியும் இந்த ஷைலஜா மிக அருமையான மொழி பெயர்ப்பாளர்.. இந்த சூர்ப்பனகையை அப்பாதுரை சார் எழுதி இருப்பதிலிருந்து உடன் வாங்கி வாசிக்க ஆவலாகிறது...
படிக்கும் ஆவலைத்தூண்டி விமர்சனம் அழகாக சொன்னீர்கள்.
பதிலளிநீக்குநுண்மையைக் கண்டுணரும் தேடல் இருக்கிறது பாருங்கள்.. சாகா எழுத்தின் அடையாளம். /
பதிலளிநீக்குரசனையான வாசிப்புப் பகிர்வு ..
சிறுகதைப் பிரியனான நான் நல்ல சிறுகதைகள் என்கிற உங்களின் ஒற்றை வார்த்தைக்கே வாங்கிப் படிச்சிருப்பேன் அப்பா ஸார். இவ்வளவு விரிவா. ரசிச்சதையும் மொழிபெயர்ப்பாளரின் சிறப்பையும் எழுதி படிக்கற பசியை ரொம்பவே கிளறி விட்டுட்டீங்க. நிச்சயம் வாங்கிப் படிச்சிடறேன் நான். அப்பப்ப இந்த மாதிரி நீங்க ரசிச்ச நல்ல கதைகளைப் பகிருங்க. நனறி.
பதிலளிநீக்குபின்னூட்டங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்கு'பாரதி வரிகளில் பெண்ணியம்' பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஜீவி?
பதிலளிநீக்குசுவாரசியமான சிந்தனை ஜீவி அவர்களே. புத்தகத்தின் பல கதைகள் இது போன்ற கேள்விகளைத் தூண்டுவன.
பதிலளிநீக்குசாகசம் என்றால் என்ன? அதுவே இன்னும் எனக்குச் சரியாகப் புரிந்த பாடில்லை.
பெண்ணியம் என்பது பெண்களின் பார்வையில் ஒன்றும் ஆண்களின் பார்வையில் இன்னொன்றுமாக இருப்பதை அறிகிறேன். never the twain shaal meet :)
'burn the bra' காலத்திலிருந்து பெண்ணியம் நிறையவே evolve ஆகியிருப்பதாக நினைக்கிறேன். எனினும், பெண்ணியத்தின் அடிப்படைக் குறிக்கோள் என்னவென்று யாருமே தீர்மானிக்காத காரணத்தால் பெண்ணியம் என்பது சந்தர்ப்ப சூழலுக்கேற்றப் பிரசாரக் கருவியாக மாறிவிட்டதெனத் தோன்றுகிறது. சூர்ப்பனகை கதையில் வரும் கணவன் எனக்கென்னவோ தேவையில்லாமல் அவதிப்படுபவனாகவே தோன்றுகிறான். கதையை இந்தப் பார்வையில் கொஞ்சம் அலசியிருக்கலாமென்று இப்போது தான் - உங்கள் கேள்விகளின் பலன் - தோன்றுகிறது.
இன்றைய சூழலில் ஆணியம் என்று ஏதாவது வேண்டும் என்றும் சில நேரம் தோன்றுகிறது :-)
அதுல பாருங்க மீனாக்ஷி.. இந்தப் புத்தகத்துக் கதைகளை ரொம்ப நாளாக அசை போட்டுட்டிருந்தேன் (புரிய நாளானது ஒரு காரணம்..). நான் படிச்சதெல்லாம் முகத்திலடிக்கிற சுஜாதா எழுத்துன்றதுனால இந்த புத்தகத்து நடையும் சொல்லாட்சியும் புரிய நாளானது. மலையாளக் கதைகள் படித்ததே இல்லை என்று நினைக்கிறேன். மலையாள சமூகம் தமிழ்ச்சமூகத்தை விட கொஞ்சம் முற்போக்கானதோ என்று எண்ண வைத்தக் கதைகள் உடனடியாகப் புரியவில்லை என்றாலும் அந்தப் புதிரானக் கவர்ச்சியில் தொலைந்து போனதும் உண்மை. இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுத ஒரு வேகம் தேவைப்பட்டது. ராம்னி தோல்வியின் ஆத்திரம் வசதியானது :)
பதிலளிநீக்குதுளசி கோபால், ஷைலஜா :-) (என்னங்க ஷைலஜா இது.. நான் தான் அந்த ஷைலஜா, பரிசு கிரிசு இருந்தா தபால் பெட்டிக்கு அனுப்பி வைக்கவும்னு ஒரேயடியா சொல்லியிருக்க வேணாமோ?)
பதிலளிநீக்கு//பெண்ணியத்தின் அடிப்படைக் குறிக்கோள் என்னவென்று யாருமே தீர்மானிக்காத காரணத்தால் பெண்ணியம் என்பது சந்தர்ப்ப சூழலுக்கேற்றப் பிரசாரக் கருவியாக மாறிவிட்டதெனத் தோன்றுகிறது.//
பதிலளிநீக்குஅப்பாதுரையோடு முதல்முறையாக ஒத்துப் போகிறேன். :))))
நீங்கள் எழுதி இருக்கும் விமரிசனம் வாசிக்கத் தூண்டுகிறது. பல மலையாள நாவல்கள் படிச்சிருக்கேன். நாலு கட்டு வீடு, செம்மீன் இப்படி. என்றாலும் நீங்கள் விமரிசித்திருக்கும் பாங்கு இந்தக் கதைகளைத் தனித்துக் காட்டுகிறது. கிடைச்சால் பார்க்கலாம்.
:-) கீதா சாம்பசிவம். அந்தக் கமென்ட் எழுதுறப்ப உங்க நினைவு தான், உண்மையா சொல்றேன். இன்னொன்று எழுதிப் பிறகு நீக்கிட்டேன் :)
பதிலளிநீக்குமலையாளக் கதைகள் எனக்குப் புதுசு. மலையாளப் படங்கள் கூட உட்கார்ந்து பார்க்க முடிந்ததில்லை. கதாசிரியர் மீரா தேர்ந்தெடுத்திருக்கும் கதைத் தளங்கள் வித்தியாசமானவை. என் மலையாள நண்பர் ஒருவரிடம் கொஞ்ச நாள் முன்பு இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.. என்னைக் கீழாகப் பார்த்து "மலையாள இலக்கியம் பத்தி ஒண்ணுமே தெரியாம இருக்கியே?" என்று என் naivetteஐ கிண்டல் செய்தார். பத்துப் பதினைந்து ஆசிரியர்கள் பெயரைச் சொல்லிப் படிக்கச் சொல்லியிருக்கிறார். பார்ப்போம். ரொம்ப நுட்பமா எழுதுறாங்கனு தோணுது.
பெண்ணையும் ஆணையும் மானுடர்கள் என்கிற பொதுவகையி லிருந்து தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதே சூது. இரண்டு பேரும் சேர்ந்ததான மனித குல மேன்மையின் உச்சத்திற்கான பின்னடைவே இப்படியான பிரித்தல். மனித மதிப்பீடுகளின் உயர்வுகள் கூடிய சமுதாயத்தில் இந்த பெண்-ஆண் பேதம் இருக்காது. ஆகவே அவற்றிற்கான இயங்களும் உதிர்ந்து போகும். (whither away)
பதிலளிநீக்குஅந்த பேதமற்ற சமுதாயத்தில் ஆண்- பெண் உயர்வு தாழ்வு இல்லை. பாரதி சொன்ன சரி நிகர் சமானம்.
பதிலளிநீக்குஇது உடோபியா இல்லை; உண்மை.
அந்த விடியலுக்கான கீற்றுகள் இப்பொழுதே கூட தெரியத் துவங்கி விட்டன.
வாசிக்கத் தூண்டும் விமர்சனம்.
பதிலளிநீக்குமூன்றாம் சுழியில் என் கவிதை நூலுக்கான விமர்சனம் எப்போது வரும் என்று ஏங்க வைக்கும் எழுத்து.
எங்கள் ஊர்க்காரர் மறைந்த கந்தர்வனின் சிறுகதைகள் படித்திருக்கிறீர்களா ?
கண்டிப்பாய் படித்துப் பார்க்கிறேன்
பதிலளிநீக்குநான் மலையாள நாவல்களை அதே மொழியில் வாசிச்சுருவேன்( பின்னே எப்படி எனக்கு மலையாளம் படிக்கத்தெரியுமுன்னு நாசூக்கா சொல்வதாம்?)
பதிலளிநீக்குநிறைய இடங்களில் சொல்லாட்சி பிரமாதமா இருக்கும். சரியான ஆப்ட் மீனிங் தரும் சொற்கள். எல்லாம் சமஸ்கிரதசேர்க்கை என்பதால், இதைப்பற்றிச் சொல்லப்போக..... மற்றவர்களிடம்சொல்லடி வாங்கிக்க வேணாமுன்னு கப்சுப்ன்னு இருந்துருவேன்.
மொழிமாற்றம் எளிதேயல்ல. மூலப்படைப்பின் வெற்றியில் அந்த மொழிக்குப் பெரும் பங்கிருக்கிறது. மூலப்படைப்பின் உயிர்த்துடிப்பில் அந்த மொழிக்குப் பெரும் பங்கிருக்கிறது. அந்த துடிப்பை இன்னொரு மொழியில் வெற்றிகரமாக வழங்குவது எப்பேற்பட்ட ஆற்றல்! //
பதிலளிநீக்குதிரு. சந்தோஷ் ஏச்சிக்கானம் எழுதிய 'ஒற்ற வாதில்' நூலை 'ஒற்றைக் கதவு' என மொழிபெயர்த்து அதற்காக நல்லி திசை எட்டும் விருது பெற்ற கே.வி. ஷைலஜாவை(இப்படியே சொல்லியிருந்தால் குழப்பம் நேர்ந்திருக்காதோ) விருது வழங்கும் விழாவில் பார்த்தேன். பேசவில்லை. பேசவில்லையே என ஏக்கமுற வைத்தது உங்கள் 'சூர்ப்பனகை'க்கான விமர்சனம். படைப்பாளியை உச்சத்துக்குக் கொண்டு செல்வது வாசக மனதின் தெளிவும் புரிதலுமல்லவா!
மூல நூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர் இருவரையும் உயர்த்திப் பிடித்தது அருமையான தங்கள் விமர்சனம்.
பொறாமையா இருக்குங்க துளசி கோபால்.. என்னவோ அப்பல்லாம் மலையாளம்/வங்காளம்னாலே சோகம், bore, அல்லது விரசம்னு ஒரு stereotypical அபிப்பிராயம் சேர்ந்து அந்தப் பக்கமே அதிகம் போகலே. regret it now.
பதிலளிநீக்குவாங்க நிலாமகள்.
பதிலளிநீக்குஷைலஜா விருது பெற்றது எந்தப் படைப்புக்கு என்று தெரியவில்லை - விருது கிடைத்தது மட்டுமே தெரியும். இணையத்தில் சரியாகத் தேட முடியாமல் took the easy route. விவரங்களுக்கு நன்றி. இப்ப 'ஒற்றைக்கதவு' படிக்க ஆசை வந்தாச்சு. (எங்கிருந்து இப்படியெல்லாம் தலைப்பு பிடிக்கிறாங்க!!)
ஹேமா.. நீங்கள் நிச்சயம் இந்தப் புத்தகத்தை ரசிப்பீர்கள்.
பதிலளிநீக்கு//பெண்ணையும் ஆணையும்.. பொதுவகையி லிருந்து தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதே சூது.
பதிலளிநீக்குபடிச்சதிலிருந்து பிராண்டிக்கிட்டே இருக்கு ஜீவி. அருமை.
கந்தர்வன் கதைகள் படித்ததில்லை சிவகுமாரன். பெயரை அறிமுகம் செய்தீர்கள், நன்றி.
பதிலளிநீக்குஹிஹி.. எனக்கும் அந்த ஆசை இருக்குங்க.. விமரிசனம் எழுத இல்லே, உங்க நூலுக்கு முகவுரை எழுத. சான்சு கிடைக்காமலா போகும்?
பதிலளிநீக்குஉங்க வலை வந்து எட்டிப் பார்த்தேன். பெரிய பெரிய கதை போட்டிருந்தீர்களா.. கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே உங்க கதையில் வர மாதிரியே திடீரென கும்மிருட்டு. நாக்கு வறண்டு பின்னங்கால் பிடறியில் தெறிக்க ஓடிபோய்ட்டேன்.
சூர்ப்பனகை... நீங்க சொன்ன கதைப் பின்னலைப் படித்து விட்டு 'ஆணால் எப்படிக் கட்டுப்பட்டியாக வாழமுடிகிறது?' என்ற தொடரைப் படித்தவுடன் லேசாக மயிர்க்கூச்செரிப்பதை உணர முடிந்தது. கதையைப் படித்தால்... ஆர்வமாக.. ஈ புக்காக கிடைக்குமா அப்பாதுரை. விமர்சனங்கள் எழுதுவது கூட ஒரு கலை என்பதை உங்களில் இருந்து தெரிந்து கொள்கிறேன். அழகிய விமர்சனம். படிக்கத் தூண்டிவிட்டீர்கள்.
சமீபத்தில் நானும் பிறமொழிக் கதைகளில் (மொ.பெ) இறங்கியுள்ளேன். மாப்பாசான் சிறுகதைகள் அகிலன் மொழிபெயர்ப்பில் படித்தேன். அத்தனையும் அருமை.இப்போது டால்ஸ்டாயின் சிறுகதைகள் தொடங்கியுள்ளேன்.ஷெர்லாக் ஹோம்ஸும் நெடுநாளையக் கனவு. ஒரு கதைதான் படிக்க முடிந்தது. வித்தியாசமான கோணத்தில் எழுதுவதாக உணர்கிறேன்.
பதிலளிநீக்குபின்னூட்டம் போட்டுட்டு இருக்கும்போதே திரும்பவும் கும்மிருட்டு. இருள் சூழ்ந்த தமிழகத்தில் இருந்து கொண்டு எங்கே பின்னூட்டம். இனி பின்னோட்டம் தான். எங்க வேலை முடியும் போது கரண்ட் இருக்காது. கரண்ட் இருக்கும்போது எங்களுக்கு வேலை இருக்கும். எங்கேன்னு கேக்கறீங்களா? அடுப்படியிலதான்
பதிலளிநீக்குசரி.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் அப்பாதுரை.
அப்பரம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன். எலிங்ககிட்ட உங்க தீபாவளி வாழ்த்தைச் சொல்லிட்டேன். அதுங்க சந்தோசத்தில துள்ளிக் குதிச்சிட்டு இருக்காங்க...
பதிலளிநீக்குபல மொழிகள் தெரிந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று தோன்றும் எனக்கு. அந்தந்த மொழியிலேயே கதைகளைப் படித்து விடலாமே!
பதிலளிநீக்குமலையாள சிறுகதைகள் என்றுமே கொஞ்சம் முன்னேறிய நிலையிலேயே இருக்கும். கமலாதாஸ் தொடங்கி இன்றைய பெண் எழுத்தாளர்கள் வரை மனதில் பட்டதை சொல்லுவதில் ஒரு அழுத்தம்,சொல்வதில் என்ன தப்பு என்பது போல எழுதுவார்கள்.
உங்கள் புத்தக ஆய்வு 'சூர்ப்பனகை'யை படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கிறது.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அப்பாதுரை ஸார்!
அப்பாதுரை அவர்களின் வலைக்கு
பதிலளிநீக்குஅவசியம் வரவேண்டும் என
அடிக்கடி தோன்றினாலும்
அந்த நாள் இன்றுதான் வந்தது.
அப்பப்பா !!
அழகு தமிழில்
உணர்வுகள் வெள்ளம்.
மூன்றாம் சுழியா ? இல்லை. இது சிவனின்
மூன்றாவது கண்.
கூடவே
சைலஜாவுக்கு ஒரு
சபாஷ் !!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அப்பாதுரை ஸார்!
சுப்பு ரத்தினம்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
பதிலளிநீக்குஇனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்...
உங்கள் அற்புதமான விமர்சனம் நம்மை ஓரிடத்தில் கட்டி வைத்து, 'படித்து விட்டு மறுவேலை பார்" என்று சொல்வதாக இருக்கிறது :) ஷைலஜா அவர்களின் தமிழ் மொழியின் ஆளுமையையும் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களுக்கு வாழ்த்துகள்; உங்களுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குஇனிய தீபாவளி வாழ்த்துகள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆதிரா, Ranjani Narayanan, sury Siva (ஆகா! நன்றி சார்), ரெவெரி (நாளாச்சு!), கவிநயா..
பதிலளிநீக்குEnna Elavu comment idhukku eluthaurathu.
பதிலளிநீக்குInnoru Anbumalli solgirar, Naan ethinavatho!
விலைமிகுந்த வைர வைடூரிய நகைகளேயானாலும், அவற்றையும் ஸ்டார்கள் அணிந்து, ஒரு ரேம்வாக் செய்தால்தான், அதனைப் மக்களிடம் கொண்டு செல்ல முடியும். தங்களின் அறிமுக பதிவு எனக்கு ஒரு அற்புதமான மாடல்,சரியான மேடையில் (க)நடைவிரித்த அருமையான டிஸ்பிலே (வெளிப்பாடு)..சூர்பணகையை படிக்கும் வரை இனி யுத்தகாண்டம் தான்.
பதிலளிநீக்குSubhu sir,
பதிலளிநீக்குI am going to unsubscribe your blog :( you have cheated me. I lost my conf.
நல்லி திசையெட்டும் விருது பெற்றவர் ஷைலஜாவின் சகோதரி கே.வி.ஜெயஸ்ரீ.
பதிலளிநீக்குஎன் பிழைக்கு வருந்துகிறேன்.
கே.வி.ஜெயஸ்ரீக்கு வாழ்த்துக்கள்.
தகவல் தெரிவித்த கே.வி.ஷைலஜாவுக்கு நன்றி.
நானும் சேர்த்து குழப்பி விட்டேனோ... வருந்துகிறேன்.
பதிலளிநீக்குஇல்லை நிலாமகள்.. பிழை என்னது தான். நீங்கள் சொல்லியிராவிட்டால் ஒற்றைக்கதவு புத்தகம் பற்றித் தெரிந்திருக்காதே?
பதிலளிநீக்குகதைத் தலைப்புகள் ஒவ்வொன்றும் கவிதை. தலைப்புக்காக ஒரு முறை, கதைத்தளத்துக்காக ஒரு முறை, கதைக்காக ஒரு முறை, நடைக்காக ஒரு முறை, சொல்லாட்சிக்காக ஒரு முறை, புரியாத தவிப்பைப் பெற ஒரு முறை, புரிந்த அதிர்ச்சியைப் பெற ஒரு முறை, கதையின் பாதிப்புக்காக ஒரு முறை, பாதிப்பிலிருந்து விடுபட ஒருமுறை என்று பல முறை படிக்க வைக்கின்றன. எட்டில் ஆறு கதைகளாவது படித்த பின் ஆவி போல் நம்மைச் சுற்றிக் கொண்டேயிருக்க வல்லவை. \\ சூர்ப்பனகை தொகுப்பு கட்டாயம் வாசிக்கிறேன். மேலே உள்ள பத்தி ஆர்வத்தை தூண்டிவிட்டது.
பதிலளிநீக்குமிகவும் சிறப்பாக கதைகளின் சுருக்கம் கூறியிருக்கிறீர்கள் ஐயா எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.ஏனென்றால் மலையாள மொழிப் பெயர்ப்பு சிறுகதைகளில் தான் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு இருக்கிறேன்.மிகவும் நன்றி ஐயா
பதிலளிநீக்கு