2012/10/07

கலகத்துலகம்




            ரு வாரமாக இந்த வரி மண்டையைக் குடைகிறது:
குருடன்
  எனக்கு முன் இங்கே ஒரு அறிஞனாவது
  தடம் பதித்திருக்கலாம் என்ற நம்பிக்கையில் தினம்
  அடி வைத்துச் சரிகிறேன்.

            லூபர் என்று ஒரு படம் பார்த்தேன். எனக்குப் பிடித்த சப்ஜெக்ட். காலப் பயணம்.

வருங்காலத்தில் கொடுங்குற்றவாளிகளைச் சட்டம் நீதி என்று படுத்தாமல் லடசணமாகத் துரிதத் தண்டனை கொடுக்கிறார்கள். குற்றவாளி முதுகில் வெள்ளிக்கட்டிகளைச் சேர்த்துக் கட்டி, மரண தண்டனைக்காகக் கடந்தகாலத்துக்கு அனுப்புகிறார்கள். தற்காலத்தில் வந்து இறங்கும் அந்தக் குற்றவாளிகளை வந்தக் கணத்திலேயே சுட்டுக் கொன்று, வெள்ளிக்கட்டிகளை சம்பளமாக எடுத்துக் கொள்கிறார்கள் தற்காலக் கூலிகள்.

கூலி ஒருவன், விரைவில் தொழிலை விட்டு விலகி ப்ரெஞ்சு இலக்கியம் படிக்கும் முனைப்போடு வெள்ளிக்கட்டிகளைச் சேகரிக்கிறான். ஒரு நாள் வந்திறங்கியக் குற்றவாளியின் முதுகில் கண்டத் தங்கக்கட்டிகள் காரணமாக இவனுக்கு இரண்டு சிக்கல்கள் உருவாகின்றன. தங்கக்கட்டியோடு வந்தால், அந்தக் குற்றவாளி தன்னுடைய எதிர்கால வடிவம் என்று பொருள். அந்தச் சிக்கல் போதாதென்று, குற்றவாளி கண்ணிமைக்கும் நேரத்தில் கூலியை அடித்துப் போட்டு ஓடிவிடுகிறான். தன் எதிர்கால வடிவைக் கண்டுபிடித்துக் கொன்று, தங்கக் கட்டிகளை மீட்டு, ப்ரெஞ்சு இலக்கியம் படிப்பானா கூலி? படம் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

ப்ரூஸ் விலிஸ் வயதானவனாகவும், ஜோசப் கோர்டன் லெவிட் இளைஞனாகவும் அமர்க்களமாக நடித்திருக்கிறார்கள். இந்த மாதிரி அற்புதமான கருவை, அட்டகாசமான நடிகர்களை வைத்துக் கொண்டு ஜவ்வாகப் படமெடுத்திருப்பது சோகம். கதைக்காகவும், காட்சியமைப்புகளுக்காவும், ப்ரூஸுக்காகவும் ஒரு முறை அவசியம் பார்க்க வேண்டிய படம்.

            சென்னையில் வாங்கி வந்த லட்சுமி லலிதா மாலினி படங்கள் சில பார்த்தேன். சொக்கிப் போனேன். மெல்லிசைப் பதிவொன்றில் எழுத எண்ணியிருந்தேன், பொறுமையில்லை, இங்கேயே சேர்த்துவிடுகிறேன். ஜோதிலட்சுமியின் சுழலும் பின்னல்கள் பளாரென்று ரவிச்சந்திரனை அறைவதை ஒரு காட்சியில் கவனிக்கலாம். இடுப்பை வெட்டி ரவிச்சந்திரனையும் என்னையும் எப்படிப் படுத்துகிறார்! 'ஆவணி வந்ததும் தாவணி' போன்றச் சங்கத்தமிழ்ச் சந்தவரிகள் கொண்ட டிஎம்ஸ்-ஈஸ்வரி கலக்கும் படு ஜாலியான பாடல். எஞ்சாய்.

            முகமது நபியைப் பற்றிக் கீழ்த்தரமாகப் படமெடுத்து யுட்யூபில் வெளியிட்டிருக்கிறான் எவனோ ஒரு கிறுஸ்துவத் துக்கிரி. கயவன் எப்போதோ வெளியிட்ட படம், கடந்த செப்டம்பர் மாதம் முழுதும் உலகெங்கும் அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் பொது அழிவுக்குக் காரணமாகிவிட்டது.

ஆறு மாதங்கள் போல் சீண்டுவாரின்றிக் கிடந்தப் படத்தை செப் 11 வாக்கில் பரப்பிவிட்டுக் கலவரத்தைத் தூண்டியிருக்கும் அல்கைதா போன்ற மதவெறி அமைப்புகளின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு அவர்களை எதிர்க்காமல்/அடக்காமல், அவர்களோடு இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தது ஆத்திரத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது. போதாக்குறைக்கு, கருத்துச் சுதந்திரத்தைக் காரணம் காட்டி கூக்ல் அந்தப் படத்தை நீக்க மறுத்துவிட்டதும் மிகுந்த எரிச்சலைக் கொடுத்தது.

நிற்க, தீவிரவாத இஸ்லாமியரின் உலகளாவிய ரகளை புரிந்தாலும் ஏற்க முடியவில்லை. எவனோ ஒருவன் யுட்யூபில் படமெடுத்து வெளியிட்டால், அதற்கு அமெரிக்கா என்ன செய்யும் என்று யோசிக்க மாட்டார்களா? பொதுமக்களும் இப்படிக் கொடி பிடிப்பார்களா? தூதரகத்தில் வேலை பார்த்த சாதாரணர்கள் என்ன பிழை செய்தார்கள்? அவர்கள் ஏன் சாக வேண்டும்? செப்டம்பர் 11 அன்று லிபியாவின் அமெரிக்கத் தூதரகம் தகர்க்கப்பட்டது. அமெரிக்காவுக்கு எதிரான தீவிரவாதமா அல்லது மதவெறி ஒனாய்களா? எகிப்தின் அமெரிக்கத் தூதரக வாசலில் நடந்த ஆர்ப்பாட்டங்களை டிவியில் பார்த்த போது மனம் கொதித்தது. அமெரிக்காவிடம் அதிகமாக நிதியுதவி பெறும் முதல் ஐந்து நாடுகளில் ஒன்று எகிப்து என்பது நினைவுக்கு வந்து உறுத்தியது. படமெடுத்து வெளியிட்டப் பாதகன் எகிப்தில் பிறந்தவன்! மூளைமழுங்கிப் பிறந்தக் காரணத்துக்காக சிறையில் அடைத்திருக்க வேண்டியவனை இப்போது ப்ரொபேஷன் விதிகள் மீறியக் காரணத்துக்காக அடைத்திருக்கிறார்கள். சிறையிலிருந்தால் சரி.

இந்தக் கலவரங்களைப் பார்த்த சாதாரணப் பொதுஜனம் - இஸ்லாமியர் என்று இல்லை - என்ன நினைக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவல். எவனோ எடுத்த இந்த விடியோவுக்கு அமெரிக்கா பொறுப்பு என்ற எண்ணம் சரியா? கடவுள் மதம் பற்றி அவதூறு செய்பவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முறையா?

இந்த நிகழ்ச்சி பற்றிய என் உள்ளூர் நண்பர்களுடனான உரையாடல், நட்புக் குடும்பத்தின் பேரிழப்பு, கடவுள் மதவெறி பற்றிய என்னுடைய இயலாமை கலந்தக் கோழைத்தனத்தின் வெளிப்பாடு,... இவை நான் எழுதியச் சிறுகதையானது. கதை படித்த வெளியூர் நண்பர்கள் சிலர் என்னைத் தொலைபேசியில் அழைத்துத் தயக்கத்தோடு கருத்தைச் சொன்னார்கள். சிலர் இமெயிலில் 'கதை நல்லாத்தான் இருக்கு...' என்று மென்மையாக இழுத்தார்கள். மிகக் கடுமையான மிரட்டல் இமெயில்கள் இரண்டு வந்தன. மற்றபடி எனக்கும் பலருக்கும் பொழுது புலர்ந்துப் பூப்பூத்து, இரவில் இனிய நிலவு காய்ந்து, தினசரி வாழ்வில் நிறைவு கிடைத்து வருகிறது - என் உள்ளூர் நண்பர்கள் வீட்டில் தவிர.

எண்பதுகளில் பெண் கைக்குழந்தையோடு தமிழ்நாட்டிலிருந்து இங்கே வந்தார்கள். இன்னொரு பிள்ளை பெற இயலாத மனைவியின் நிலையை இருவருமே பொருட்படுத்தாமல், பெண்ணைச் சாதனையரசியாக வளர்த்தார்கள். ஹ்யூபர்ட் ஹம்ப்ரி ஸ்காலர்ஷிப்போடு வெளியுறவுக் கொள்கை படித்து முடித்த இருபத்துமூன்று வயதுச் சாதனையரசி, இரண்டு வருட பெலோஷிப்பில் லிபியா அமெரிக்கத் தூதரகம் போய் பத்து மாதங்களாகின்றன. திரும்பி வரப்போவதில்லை. இவள் என் மகனாகவோ உங்கள் மகளாகவோ இருந்திருக்கக் கூடும்.

            மிட் ராம்னி தோற்றுவிடுவாரென்ற சந்தேகம் வலுத்து, இப்பொழுது நம்பத் தொடங்கியிருக்கிறேன். ஒபாமாவின் அகம்பாவக் கையாலாகாத் தலைமையை மீண்டும் ஏற்று வாழத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். கடைசி நிமிடத்தில் அறிவு வந்து அமெரிக்கர்கள் ஒபாமாவை வீட்டுக்கு அனுப்புவார்களா?

            போகிற போக்கில் இன்னொரு கவதைக் குடைசல்:
துலக்கம்
  விழித்தக் கணத்தில் அவளைக் காணாதுத் தேடினேன்.
  அறையோர இருளில் ஓசையின்றி அழுது கொண்டிருந்தாள்.
  புரியாதப் பதட்டத்துடன்
  "எத்தனை நேரமாக அழுகிறாய்?" என்றேன்.
  புரிந்த அமைதியுடன், "வருடக்கணக்கில்" என்றாள்.

17 கருத்துகள்:

  1. விழித்தக் கணத்தில் அவளைக் காணாதுத் தேடினேன்.
    அறையோர இருளில் ஓசையின்றி அழுது கொண்டிருந்தாள்.
    புரியாதப் பதட்டத்துடன்
    "எத்தனை நேரமாக அழுகிறாய்?" என்றேன்.
    புரிந்த அமைதியுடன், "வருடக்கணக்கில்" என்றாள்.

    அஹா அஹா இப்பவாவது கேட்கத்தோனுச்சே.

    பதிலளிநீக்கு
  2. கடைசியில நீங்க தந்திருக்கற கவிதை அருமை. பகிர்ந்திருக்கற பாடலும் ரசிக்க வெச்சது. லூபா... டிவிடி கிடைக்குமான்னு பாக்கறேன்...

    பதிலளிநீக்கு
  3. அப்பதுரை அவர்களே! உங்கள்"கலகத்துலகம்" பார்த்தேன்..மிகுந்த வருத்தமாக இருக்கிறது.அப்பாவி மக்கள் தான் பலிகடா வாகிறார்கள். வியட்னாமில் குண்டு மழை பொழிந்த போது நியூயார்க் நகரில் அதனை எதிர்த்து அமெரிக்கமக்கள் ஊர்வலம் போனார்கள். அவர்களோடு பல்வேறு மாணவர்களூம் (வேளிநாட்டு) மாணவர்களும் சென்றார்கள். தமிழ்நாட்டை சேர்ந்த என் நண்பர்களும் அதிலுண்டு. அந்த மாணவர்களை கம்யுனிஸ்டுகள் என்று அரசு அறிவித்ததால் படிப்பைக் கைவிட்டு தாயகம் திரும்பினர்.ஆனலும் மக்களின் எதிப்பு தொடர்ந்தது.அரசு பணிந்ததற்கு அதுவும் ஒரு காரணம். அமெரிக்காவின் அத்துமீறிய செயல்களை எதிர்த்து இப்போது ஏன் மக்கள் போராட மறுக்கிறார்கள்..அமெரிக்காவிடமுள்ள அணு கூண்டுகளால் இந்த உலகத்தை 13 மூன்று முறை அழித்துவிடலாமாம்.அவ்வளவு பலமுள்ள அரசால் தன் தூதரகத்தை காக்க முடியவில்லயே!காரணம் மூட மதவெறி மட்டுமல்ல---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  4. வார்த்தைகளற்ற இந்தக் கவதை எவ்வளவோ பரவாயில்லை.

    வார்த்தைகள் தான் வரவிடாம தடுத்திண்டிருந்தது என்பதும் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  5. லூபர் கதைக் கரு மிகக் கவர்கிறது.
    கலவரங்களில் பெரும்பாலும் காரணமானவரைப் பிடிக்க முடியாததால் அப்பாவிப் பொது மக்கள் பலியாவது எல்லா இடத்திலுமே நடக்கிறது.
    கடைசிக் கவிதை அற்புதம்.

    பதிலளிநீக்கு
  6. குருடன்
    எனக்கு முன் இங்கே ஒரு அறிஞனாவது
    தடம் பதித்திருக்கலாம் என்ற நம்பிக்கையில் தினம்
    அடி வைத்துச் சரிகிறேன்.


    அறிஞன் தடம் பதிக்க காத்திருக்கிறோம் ....

    பதிலளிநீக்கு
  7. கவிதைகள் இரண்டுமே அருமை....

    பாடல் கேட்டு ரசித்தேன்....

    பதிலளிநீக்கு
  8. //விழித்தக் கணத்தில் அவளைக் காணாதுத் தேடினேன்.
    அறையோர இருளில் ஓசையின்றி அழுது கொண்டிருந்தாள்.
    புரியாதப் பதட்டத்துடன்
    "எத்தனை நேரமாக அழுகிறாய்?" என்றேன்.
    புரிந்த அமைதியுடன், "வருடக்கணக்கில்" என்றாள்//.

    ரொம்பவும் வதைக்கிறது வருடக் கணக்கில் ஓசையின்றி அழும் அழுகை பள்ளத்தாக்குகளில் பார்க்க யாருமின்றிப் பெய்யும் அடைமழை போல.

    //எனக்கு முன் இங்கே ஒரு அறிஞனாவது
    தடம் பதித்திருக்கலாம் என்ற நம்பிக்கையில் தினம்
    அடி வைத்துச் சரிகிறேன்.//

    முதலுக்கும் கடைசிக்கும் ஏதோ கநெக்டிவிடி தென்படுகிறது.

    மூர்க்கமாய் ஒரு அறிஞனின் சுவடு தேடல் அவளைத் தனிமைப் படுத்தி நெடுநாட்களாய் அழவைத்திருக்குமோ?

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லாஅக்டோபர் 08, 2012

    கவிதை இரண்டையும் படித்த பின் நானும் இரண்டு கவிதைக்கும் ஏதோ தொடர்பு இருக்குமோ என்றே யோசித்தேன்.
    வெளிச்சம் இருந்தும் இருட்டிலேயே வாழும் அவளை விட இருட்டிலும் வெளிச்சத்தை தேடும் அந்த குருடன் எவ்வளவோ மேல். கண்ணிருந்தும் ஒரு குருடாய் வாழும் அவள்
    வாழ்வில் நம்பிக்கை என்பது குருடன் கை விளக்கு போலத்தான்.
    இரண்டு கவிதைகளும் பிரமாதம். படித்ததில் இருந்து மனதை என்னவோ செய்கிறது. வரிகளில் இருந்து மீள முடியவில்லை.

    லூபர் படம் பார்க்க வேண்டும் என்று நினைத்தபோது violence ரொம்ப அதிகமா இருக்குமோ என்று யோசித்தேன். பார்க்கலாம்.

    பாடல் இதுவரை பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை. கே.ஆர். விஜயா பாடல் காட்சியில் ஆடி, பாடி அஷ்ட கோணலாய் வாயசப்பதை விட ஜோதிலக்ஷ்மி மிகவும் அழகாகவே நடித்திருக்கிறார். பார்க்கவும் அழகாய் இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  10. லூபர் அறிமுகத்துக்கு நன்றி.

    கலகத்துலகத்தை கலகத்துவமாகப் படித்துவிட்டேன்.

    கவதைகள் நன்று.

    பதிலளிநீக்கு
  11. கலகத்துலகம் ரொம்ப அருமையாக இருந்ததுப்பா....

    கவதை குடைசல்.....

    புரியாத பதட்டத்துடன்....

    புரிந்த அமைதியுடன்.....

    எத்தனையோ வருஷம் புரியாத இருந்தாலும் அட்லீஸ்ட் இப்பவாவது புரிஞ்சுக்கிட்டாரே என்ற இந்த அமைதி தான்....

    லூபர் படம் கண்டிப்பா பார்க்கணும்... அஞ்சான் கிட்ட தான் சொல்லி டௌன்லோட் பண்ணி தரச்சொல்லனும்..

    படத்தின் விமர்சனம் தான் பார்க்கத்தூண்டுகிறது...

    ஜோதிலக்‌ஷ்மியின் நடனம் க்ரேஸ்ஃபுல்லா அழகா இருக்கும். அவர்கள் நல்ல ஹைட் என்பதாலும் நடனம் தெரிந்தவர் என்பதாலும்.... பழைய படங்கள் பார்த்தால் தவிர்க்காமல் ஜோதிலக்‌ஷ்மி அவர்களின் நடனம் விரும்பி பார்ப்பதுண்டு நான்... மாலைமுரசு சேனல்ல வர பழைய படங்கள் எல்லாம் பார்ப்போம் நாங்கள்.

    முதல் கவிதை...

    என்ன ஒரு நம்பிக்கை...

    நம்பிக்கையில் கண்மூடி அடி எடுத்து முன்னே வைத்தாலும் நம்பிக்கையை சரிப்பது போல தானும் சரிவது....

    அருமையான ஆழ்சிந்தனை வரிகள் ரெண்டு கவிதைகளுமே.... சொல்லவந்ததை நச் நு சொல்லிட்டு போயிட்டே இருப்பதை ரசிக்கிறேன்..

    மதக்கலவரம் ஆரம்பிப்பது கடவுளிலில் இருந்து தான் என்று நானும் நம்புகிறேன். என் கடவுளை நீ இகழ்ந்தியா உன் கடவுளை நான் என்ன செய்றேன் பாரு.. இதில் தான் ஆரம்பிக்கிறது பிரச்சனையே...

    அருமையான கலகத்துலகம்... பேர் எல்லாம் எப்படி தான் வைக்கிறீங்களோ யப்ப்பா சாமி...

    அன்புவாழ்த்துகள் அப்பாதுரை.





    பதிலளிநீக்கு

  12. எனக்கு முன் இங்கே ஒரு அறிஞனாவது
    தடம் பதித்திருக்கலாம் என்ற நம்பிக்கையில் தினம்
    அடி வைத்துச் சரிகிறேன்.
    .
    ................
    மீண்டும் எழுகிறேன்
    அறிஞன் யாரென்ற தெளிவுடன்.


    கல்லூரிப் பருவத்தில் பார்த்த Back to the future படம் நினைவுக்கு வருகிறது. லூபர் விமர்சனம் படிக்கும் போது.


    உண்மையில் நபிகள் மேல் நம்பிக்கையும் பற்றும் கொண்டவர்கள் அந்தப் படத்தை பெரிதுபடுத்த மாட்டார்கள். அமெரிக்கத் தூதரகங்களை தகர்ப்பதற்கு தேவை ஒரு காரணம் அவர்களுக்கு. உண்மையில் நபிகளை அவமானப் படுத்துவது அவர்கள் தான்.

    விழித்தக் கணத்தில் அவளைக் காணாதுத் தேடினேன்.
    அறையோர இருளில் ஓசையின்றி அழுது கொண்டிருந்தாள்.
    புரியாதப் பதட்டத்துடன்
    "எத்தனை நேரமாக அழுகிறாய்?" என்றேன்.
    புரிந்த அமைதியுடன், "வருடக்கணக்கில்" என்றாள்.
    .......................
    புரியாதது போல் நடித்தேன்.

    பதிலளிநீக்கு
  13. அருமையான பகிர்வு. உங்கள் நட்புக்குடும்பத்தின் பேரிழப்பு மனதைத் தொடுகிறது. கவிதைகள் இரண்டுமே மனதைத் தொட்டது.

    பதிலளிநீக்கு
  14. Mixed expressions. Reading you after a very long time.
    Enjoyed reading it. Thx.

    பதிலளிநீக்கு
  15. பின்னூட்டங்களுக்கு மிக நன்றி.

    looper படத்தை ரசிக்க முடியும் என்று நினைப்பவர்கள், நான் நேற்று பார்த்த 'cloud atlas' படத்தை இன்னும் ரசிக்க முடியும் என்று நினைக்கிறேன். ஒரு படத்தில் நாலைந்து வேடங்களில் நடிப்பவர்கள் பெரும்பாலும் ஒப்பனையை நம்பியோ அல்லது eddie murphy பாணியையோ காப்பியடித்து நடிக்கிறார்கள். ஒரே படத்தில் பல வேடங்களில் எப்படி நடிப்பது என்று tom hanks இந்தப் படத்தில் கற்றுக் கொடுப்பதாக நினைக்கிறேன். மற்றபடி படம் புரியவில்லை என்று ஒதுங்க வேண்டும்; இல்லை புரிந்து கொள்வேன் என்று அடம்பிடித்து நாலைந்து முறை பார்க்கலாம். (அப்புறம்.. (வயசுப் பையன் பெண் இருந்தால் உடன் கூட்டிப் போக வேண்டாம். இருபது வினாடி சிவசக்திக் காட்சி ஒன்று இருக்கிறது).

    சிவகுமாரன்.. நன்றி. கவதையைக் கவிதையாக்கும் வரம் வாங்கி வந்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  16. "Looper... Guess I would need to wait till HBO/Star purchases the movie rights.
    It was a senseless act to attack the American embassies. But religion pushes people to senselessness.
    Poetry- The one word she utters- so powerful! Brilliant.

    பதிலளிநீக்கு