2012/07/01

மெக்சிகோ



    து பயணக்கட்டுரை அல்ல.

    ன்னும் மூணறை பிலியன் வருடங்களில் ஹைட்ரஜன் வற்றத்தொடங்கி சூரியன் ஏறக்குறைய சூபர் நோவா நிலைக்குத் தயாராகும் பொழுது, உலக வெப்பம் இன்றை விட இரட்டிப்பாகும் சாத்தியம் உண்டு என்கிறார்கள். பூமி அழிவதைத் தடுக்க என்ன செய்யலாம் என்று உலக மகா புத்திசாலிகள் அவ்வப்போது கூடி ஒருவர் தலையை இன்னொருவர் சொறிந்து கொண்டிருக்கிறார்கள். நிறையத் திட்டங்கள் பரீசீலனையில் உள்ளன. ஒரு தலைசொறிக் கூட்டம் சொல்லியிருக்கும் திட்டத்தைப் படித்த போது ஆகா என்று தோன்றியது.

பூமியை இப்போது இருக்கும் பாதையிலிருந்து அலேக்காகப் பெயர்த்து வியாழன் அல்லது சனிக்கருகில் சேர்த்துவிடுவதே அந்தத் திட்டம். இயல்பாக நிலவும் கிரகங்களின் ஈர்ப்புச் சக்தி மற்றும் slingshot உத்திகளின் அடிப்படையிலான எளிமையானத் திட்டம் என்றாலும், விவரங்களைப் புரிந்து கொள்ள பி.எச்டி வேண்டும். என்னிடம் பி கூட இல்லை.

விடுங்கள். தோன்றியக் கணம் முதல் நாட்பட பூமியின் வெப்பம் அதிகரித்தது, அதிகரிக்கிறது, அதிகரிக்கும் (வினைத்தொகையாக ஒரு சொல் தெரிந்தால் சொல்லுங்கள்) என்று நினைத்தேன். இல்லையாம். ஏறக்குறைய நூறு மிலியன் ஆண்டுகளுக்கு முன், பூமி இப்போதை விட இருபது சதவிகிதம் போல் அதிக வெப்பமாக இருந்தததாம். என்ன காரணம் என்று நோண்டிப் பார்த்தால், டைனோசார்! டைனோக்கள் வாழ்ந்த காலத்தில் பூமி வெப்பம், ராக்கெட் வேகத்தில் உயர்ந்ததாம். காரணம் ரொம்ப சிம்பிள். டைனோசார் குசு. அத்தனையும் சுத்த மெதேன். பூமியின் வெப்பம் உயரும் அளவுக்கு சக்தி வாய்ந்த டைனோ வாயு. இதைக் கண்டுபிடித்து நம்முடன் பகிர்ந்துகொண்ட ஞானிகளுக்கு ஒரு கிலோ மொச்சைக்கொட்டை பரிசு.

NASAவின் அற்புதமான Climate Kids தளத்தை அறிமுகம் செய்து, என் பிள்ளைக்கு greenhouse effect பற்றி விளக்கிக் கொண்டிருந்தேன். (பச்சைவீடு பாதிப்பு என்று இன்னும் யாரும் தமிழ்ப்பெயர்க்கவில்லை). கார்பன் டையாக்சைட், மெதேன் பற்றி என்னிடமிருந்த அரைகுறை ஞானத்தை அவனிடம் சேர்த்தேன். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டு, "now i know why our house is always unbearably warm" என்றான்.

"coz of summer" என்றேன்.

"no old man, coz of your methane" என்றான்.

உரக்கச் சிரித்த என் மகள், "figures.. another indian phenom" என்றாள்.

இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குப் பெரியவர்கள் என்ற மரியாதையே இல்லை. "ஏம்மா கொழந்தே அப்படிச் சொல்லுறே? இந்தியா என்ன பண்ணிச்சு?" என்றேன் மிகுந்தப் பணிவுடன்.

சொன்னாள். படித்த செய்தி என்றாலும் மறந்திருந்தேன். இந்தியாவின் ஐநூறு மிலியன் கால்நடைகள் ஒரு வருடத்துக்கு சுமார் பனிரெண்டு டன் மெதேனைக் கடைப்புறமாகக் கிளப்புகிறதாம். ஓசைப்படாமல் வாயு போக்கும், வாயில்லா ஜீவன் பாவம் வேறென்ன செய்யும்?

    ந்தியாவில் அப்படி என்றால் மெக்சிகோவும் சபாபதே போலிருக்கிறது. சமீபப் பயணம் ஒன்றில் தெருவோரமாக நிறைய ஆடுமாடுகள் நிம்மதியாக அமர்ந்து சுவாரசியமாக அசை போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. எத்தனை டன் மெதேன் கிளப்புகின்றனவோ!

ஒரு public policy/social measure கலந்துரையாடலுக்காக மெக்சிகோ போயிருந்தேன். ஓசியில் இடம் சாப்பாடு பயணச்செலவு கொடுத்து அழைத்தார்கள். திருமணக்கால உச்ச வரம்பு பற்றிய "பிரமுகர்" உரையாடல். திருமண லைசென்சுக்குக் காலவரம்பு வேண்டும் என்றக் கூட்டத்தைச் சேர்ந்தவன் நான். "திருமணத்தை காலவரம்புக்கு மேல் நீடிக்க வேண்டுமானால் இன்னொரு லைசென்சு பெறலாம். பிடிக்கவில்லையா, தானாகவே விலகிவிடலாம். விவாகரத்து, வக்கீல், பிள்ளைப் பிரிவு, கஸ்டடி சண்டை என்று எந்தவித சிக்கலும் இருக்காது" என்று நிறைய உள்ளூர் social public policy கருத்தரங்குகளில் பேசியிருக்கிறேன். அமெரிக்க ரோமன் கத்தோலிக்கக் குழுவிடம் சில நேரம் கல்லடி பட்டிருக்கிறேன். i mean சொல்லடி.

மெக்சிகோவில் திருமணக் காலவரம்புச் சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு திருமணம் சட்டப்படி செல்லாது. கணவனும் மனைவியும் கருத்தொருமித்தால் திருமணத்தைச் சட்டப்படிப் புதுப்பித்துக் கொள்ளலாம். i think that is a very forward looking measure. இரண்டு நாள் workshopல் challenge simulation, policy modeling என்று அறிவுக்கும் கற்பனைக்கும் வேலை கொடுத்தார்கள். நிறைவாக இருந்தது, சாப்பாட்டைப் போலவே. "திருமணக் காலவரம்பு எல்லா நாடுகளிலும் அமலுக்கு வரும். மெக்சிகோ முன்னோடியாக இருக்கிறது. சமூகப் பிரச்சினைகள், குறிப்பாகப் பிள்ளை வளர்ப்பு பற்றியவை, வரத்தான் செய்யும், எனினும் முற்போக்கான முயற்சி" என்றுப் பாராட்டிப் பேசிவிட்டு வந்தேன்.

இப்போது இன்னொரு மெக்சிகோ நகரத்தில் இரண்டு ஆண்டு திருமணக் காலவரம்பு கொண்டு வருவதாகப் பேச்சு அடிபடுகிறது. என்ன வேகம், நில்லு மரியா.

    மெக்சிகோ பயணத்தின் இரண்டு மறக்க முடியாத சுவாரசியங்களுள் முதலாவது கேரி தனீன் சந்திப்பு. கேரியின் sex tips இணையத்தில் பிரபலம். தினமும் பலமுறை உடலுறவு கொள்வது மனதுக்கும் உடலுக்கும் ரொம்ப நல்லது என்கிறார். இதை விட்டு அனாவசியமாக ஜிம்முக்கும் ரன்னிங் ட்ரேக்குக்கும் ஒடுகிறேனே என்று நினைத்தேன். ஓ.. செக்சுக்கு இரண்டு பேர் வேண்டுமோ? இணக்கமும் வேண்டுமோ? சரிதான். எங்கே என் running shoe?

திருமணக் காலவரம்பு பற்றிப் பேச வந்திருந்தார் கேரி. மனவளர்ச்சி குறைவாக இருப்பதால் காலவரம்பு தேவைப்படுவதாகச் சொன்னார். "ஆணும் பெண்ணும் மனதளவில் முதிர்ச்சியை வளர்த்துக் கொண்டால் காலவரம்புக்கு அவசியமில்லை. காலவரம்பைப் பற்றியக் கவலையும் இல்லை" என்று நிறைய விவரங்களைப் பிட்டு வைத்தார். மாலை cocktails போது சந்தித்து அறிமுகம் செய்து கொண்டு அவர் பேச்சைப் பாராட்டினேன். "உடலுறவு உடல் நலனுக்கு உகந்ததா?" என்றேன் உற்சாகமாக. காலவரம்பு கிடக்கிறது.

"உண்மையில்" என்றார்.

"அடடே! எங்கே கொஞ்சம் விவரமா சொல்லுங்க?" என்றேன்.

"தவறாமல் உடலுறவு கொண்டால் அழுத்தம் போன்ற மன உபாதைகள் மட்டுமல்ல, தினம் அனுபவிக்கும் சளி, பித்தம், பெண்களுக்கு ஏற்படும் அதிக மாதவிடாய் ஓட்டம், ஆண்களுக்கு ஏற்படும் தலைவலி போன்ற உபாதைகளும் நீங்கும்" என்றார்.

"அடடே!" என்றேன். "உடலுறவு எத்தனை நாள் தான் இயலும்? அதற்குப் பிறகு சளி பித்தம் தீர என்ன செய்வது? என்ன தான் காதலித்தாலும் கருத்தொருமித்தாலும் வயதாகுமே?" என்றேன்.

"அதற்காகக் காலவரம்பு போடுவது முறையா?" என்று சிரித்தார். உடனே சீரியசாக, "தம்பதிகளிடையே காதல் இருந்தால் எதுவுமே தேவையில்லை. முடியும் பொழுது உடலுறவு கொண்டால் உடலுக்கு நல்லது. மனதுக்கும் நல்லது. உடலுறவுக் காலத்தையும் கடந்து நிலைக்குமே மன நலம்? முடியாத காலத்தில் ஒருவர் புன்னகையை மற்றவர் ரசிப்பதும் உடலுறவு தான்" என்றார். பொட்டில் அடித்தது.

கேரியின் பதிவொன்றை இணைத்திருக்கிறேன். பதிவை நிறைய பேர் படிப்பார்கள் என்று தெரியும். எதற்குச் சொல்கிறேன் என்றால் சமீபத்தில் வலைச்சரம் ஆசிரியராக ஒரு வாரம் ஓட்ட வாய்ப்பு கிடைத்தது. சுய அறிமுகத்தில் நிறைய சொல்லியிருந்தேன். அந்த வாரம் மூன்றாம் சுழியில் அதிக வாசகர்கள் படித்தது நான் குறிப்பிட்டிருந்த 'காமம்' பற்றிய பதிவுகளே. மிச்ச மூன்றாம் சுழிப் பதிவுகளை ஒருவரும் சீண்டவில்லை. எல்லோரும் என்னைப் போலவே இருக்கிறார்கள்.

    மெக்சிகோ பயணத்தின் இன்னொரு சுவாரசியம் சற்றும் எதிர்பாராதது. தேவானந்தின் குடும்பத்தில் ஒருவரைச் சந்தித்தேன். ஆனந்த் சகோதரர்களுக்கு உறவாம். ஐம்பது வருடங்களாக பொலிவியா மெக்சிகோ என்று வாழ்வதாகச் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது. தென்னமெரிக்கப் பெண் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு இங்கே வந்து தங்கிவிட்டதாகச் சொன்னார். திருமணமான இரண்டு பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இருந்தாலும், தான் தனியாகவே வாழ்வதாகச் சொன்னார். மனைவி நினைவில் தாங்கள் காதலோடு சுற்றிய இடங்களை அவ்வப்போது பார்ப்பதாகச் சொன்னார். நெஞ்சைத் தொட்டது. தேவ் எனக்குப் பிடித்த ஹீரோ என்றதும் வீட்டுக்கு வரச்சொன்னார். ஒரு இரவு முழுவதும் தேவ் ஆனந்த் படங்கள் பார்த்தோம்.


2:22 வாக்கில் தேவின் கன்னத்தைக் கல்பனா வருடி வருடாமல் போகும் நளினத்தைக் கவனித்து, இருவரும் அதைப் பற்றிக் கொஞ்சம் பேசினோம். எளிமையானக் காதல் பாடல்கள் இப்போது வருகிறதா என்று கேட்டார். என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தேன்.

நிறைய குடும்பக் கதைகள் சொன்னார். மனைவி இறந்ததற்கு வருத்தம் தெரிவித்தேன். "இறந்ததா? யார் சொன்னது?" என்றார்.

"மனைவி நினைவில்.. என்றீர்களே?". எனக்கு சங்கடமாக இருந்தது. மன்னிப்பு கேட்டேன்.

சிரித்தார். "தவறாகப் புரிஞ்சுக்கிட்டீங்க போல. ஒரு சின்ன ஊடல் கொஞ்சம் விவகாரமாயிடுச்சு. இனிமே உன் மூஞ்சிலயே முழிக்க மாட்டேன்னு அவ சொன்னப்ப, நானும் கோபமா என் மூஞ்சிலே நீ முழிச்சால் என் கண்ணு ரெண்டும் குருடாகட்டும்னு கத்திட்டேன். ஒரு கோவத்துல வெளியே போனவதான்.. திரும்ப வரவேயில்லே..." என்றார்.

திடுக்கிட்டேன். "என்ன சார்.. இப்படிச் சொல்றீங்க?"

"ஆமாம்.. முப்பது வருஷமாச்சு.. என்ன ஆனாள்னு யாருக்குமே தெரியாது.. most likely she is no more.. ஆனால் நாங்க சுத்தின இடங்களிலெல்லாம் அவ இருக்கா.. இங்க எப்பவுமே இருக்கா" என்றார், நெஞ்சை இரண்டு விரல்களால் குத்தியபடி.

எனக்கு நெஞ்சைக் கட்டிக் கண்களில் நீர் முட்டியது.

    காதலில் இது தான் பெரிய தொந்தரவு. ஒருவரையொருவர் புரிந்து கொண்டது போல் நடிப்பவர்களுக்கு காதலின் பலன் கிடைக்காமலே போகிறது. ஒருவரை நன்கு புரிந்து கொண்ட இடத்தில், காதலன் அல்லது காதலி பேச்சை விளையாட்டுக்காகவோ அல்லது இயலாமையினாலோ அல்லது எந்த காரணத்திலோ.. உதாசீனம் செய்தாலும் அந்த ஒரு கணம் அவர்களின் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிவிடுகிறது.

தேவானந்த் பாடலைத் தேடியபோது சாய் பரஞ்ச்பையின் இந்தப் படக்காட்சி கிடைத்தது. நண்பர்கள் பேச்சைக் கேட்டு காதலியைத் தவறாக நினைத்துவிடுகிறான் காதலன். அவள் மனம் நோகப் பேசிவிடுகிறான். தொடரும் உருக்கமானப் பாடல் காட்சி. படம் வந்த நாளில் நிறைய ரசித்திருக்கிறேன். இப்போது மீண்டும் வாரக்கணக்கில் தொடர்ந்து பார்த்து ரசிக்கிறேன். ஜேசுதாசின் best effort பாடல்களில் ஒன்றாக இதைக் கருதுகிறேன். உடன் பாடியிருக்கும் ஹைமலதாவின் குரல் குழல்.

இன்னொரு பாடலுக்கு நேரம்/பொறுமை இருக்கிறதா? இருந்தால் இதையும் ரசியுங்களேன்?



28 கருத்துகள்:

  1. அப்பாதுரை அவர்களே, உங்களை எந்த விதமாகப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. பல பரிமாணங்களில் தெரிகிறீர்கள். திருமணத்துக்குக் கால வரம்பு பற்றிப் பேசுகிறீர்கள்.ஒருவர் எதையாவது எழுதும்போது அதில் உள்ளக் கருத்துக்களுடன் பெரும்பாலும் ஒத்துப் போகிறார் என்றுதான் பொருள். இல்லையென்றால் இருபக்கக் கருத்துகளையும் கூறி இருக்க வேண்டும்.
    சிலபின்னூட்டங்களுக்குப் பதில் கூறும் போது எழுதியதில் சங்கடம் தெரிகிறது. ALL SAID AND DONE, I like your effortless writings.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. //உலக மகா புத்திசாலிகள் அவ்வப்போது கூடி ஒருவர் தலையை இன்னொருவர் சொறிந்து கொண்டிருக்கிறார்கள்.//

    இருங்க! சிரிச்சி முடிச்சுட்டு வந்து அப்புறம் மீதியைப் படிக்கின்றேன்!

    பதிலளிநீக்கு
  3. முதன் முதலாய் தங்கள் பதிவை படிக்கிறேன்.அவர் எழுத்தை படித்தது போன்ற உணர்வு.

    பதிலளிநீக்கு
  4. இரண்டாவது பாட்டு அருமை. மனதை வருடிச் சென்றது.

    எனக்கு தேவ் ஆனந்தை விட விஜய் ஆனந்தைப் பிடிக்கும். :))))

    பதிவைப்படிச்சு நல்லாச் சிரிச்சாச்சு. நன்றி. :))))))

    பதிலளிநீக்கு
  5. திருமணக் காலவரை பற்றியும் சொல்கிறீர்கள். பொட்டில் அடிக்கும் விஷயமும் சொல்கிறீர்கள். நம்மவர்களுக்கு இவை பழக சூரியன் சூப்பர் நோவா ஆக வேண்டும்!

    தேவ் ஆனந்தின் பாடல் பகிர்வில் 'மனைவியுடன் சுற்றிய இடங்களைத் தான் சென்று பார்த்து வருவதாக, அந்த நினைவில் வாழ்வதாக, நெஞ்சில் இருப்பதாகச் சொன்னதையும் படித்த போது நெகிழ்வாக இருந்தது. இந்தப் பழைய நினைவில் ஆழ்ந்து அந்த கணங்களை மீண்டும் வாழும் உணர்வை அற்புதமாகச் சொல்லும் ஹிந்திப் பாடல் ஒன்று உண்டு. அருமையான காட்சியமைப்பு. அந்தப் பாட்டு....

    பதிலளிநீக்கு
  6. யேசுதாசின் பல ஹிந்திப்பாடல்கள் அருமையானவை. சிட்சோர் பாடல்கள், 'ஆ....ஆ... ஆரே மித்துவா' என்று தொடங்கும் பாடல்..... இந்தப் பாடலும் அதில் ஒன்று. 'சாவன் கே ஆனே தோ' பாடல் கேட்டிருக்கிறீர்களோ?

    பதிலளிநீக்கு
  7. முதிர்ந்த வாசகருக்கான கருத்தும்
    நடையும் பதிவு மொத்தமும் இருக்கு
    முதிர்சியடைய முயன்றுகொண்டிருக்கும் என்போன்ற
    வாசகர்களுக்குத்தான் நடை ரசிக்கும்படியாக இருந்தாலும்
    கருத்தைப் பொருத்துத்தான் கொஞ்சம்
    தயார்படுத்திக் கொள்ளவேண்டியுள்ளது
    ரசித்துப்படித்த பதிவு

    பதிலளிநீக்கு
  8. கருத்தைப் பொருத்துத்தான் கொஞ்சம்
    தயார்படுத்திக் கொள்ளவேண்டியுள்ளது
    ரசித்துப்படித்த பதிவு //

    அப்பாதுரையோட பதிவு என்பதாலே எப்போவும் தயார் நிலையில் தான் இருந்தாகணும். :D கருத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கட்டாயப் படுத்துவதும் இல்லை. அவர் கருத்து அது. அதோடு சரி! ரொம்ப எளிது. :)))))))))))

    பதிலளிநீக்கு
  9. ஸ்ரீராம் கூறி இருக்கும் பாடல்கள் அனைத்துமே கேட்டிருக்கேன். :)

    பதிலளிநீக்கு
  10. தேவானந்த் பற்றிய விஷயம் மனதை கஷ்டப்படுத்திவிட்டது

    பதிலளிநீக்கு
  11. முதலில் ஒரு கழுகுப் பார்வை கருத்தைச் சொல்லி விடுகிறேன். அப்புறம் விலாவரியாக வரலாம்.

    அசாத்திய கொல்லன் பட்டறை வேலை. இந்தக் கொல்லர் தங்கப் பட்டறைக்குச் சொந்தமானவர். தங்க அணிகலங்கள் உருவாகிற பட்டறை அல்ல. வார்த்தை அணிகலன்கள். இவர் தயாரிப்புகளில் எத்தனை நகாசு வேலைகள் என்கிறீர்கள்? சொல்லி மாளாது. ஜொலிப்பான ஜொலிப்பு. அந்த நகாசுத் திறன்களோடு வார்த்தை சித்து வேலைகளும் செம்பாகக் கலக்கும் பொழுது ஐய்யோடி.. பளபளப்பான பளப்பு.. கண்ணைப் பறிக்கும் பளபளப்பு!

    பதிலளிநீக்கு
  12. சுற்றுபுறச் சுழலில் ஆரம்பித்து, ஒரு சுத்து சுத்தி அழகான காதலில் முடிச்சிறிக்கிங்க...

    நம்மூர்ல ஆட்சி மாறினாலும் காட்சிமாறாத ஊழல் கூட வினைத்தொகை தான்...

    உங்க ஊர்ல கல்யாணமெல்லாம் நடந்துட்டிருக்குதா என்ன ? அது இருக்கிற இடத்துல தாங்க அந்த சட்டமெல்லாம் வேணும்.....

    பதிலளிநீக்கு
  13. உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு , எண்ணற்ற கேள்விகளோடு ஒரு சிறுவனாய் அமெரிக்காவை .... இல்லையில்லை உலகத்தை.. . வேண்டாம் ... நான் பார்த்த இடங்களயேனும் சுற்றிப் பார்க்க ஆசைஅப்பாஜி ...

    பதிலளிநீக்கு
  14. இனிமையான பாடல்கள்.

    ஆரம்பமே அசத்தல்....

    பதிலளிநீக்கு
  15. உங்கள் கருத்து எனக்குச் சரியாகப் புரியவில்லை GMB.. குழப்புகிறேன் என்கிறீர்களா? அது கை வந்தக் கலை.
    நீங்கள் சொல்வது புரிகிறது Ramani. முதிர்ச்சிப் பெண் நிறைய பேருக்கு nsk பாட்டு மாதிரி. எதிரிலிருந்தும் தொடப் பயந்தேனே...
    புரிதலுக்கு மிக நன்றி கீதா சாம்பசிவம்.
    என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள் ஜீவி.. பெரிய வார்த்தைகளுக்கு முன் சிறிய நன்றி.
    உங்க ஊர்ல கல்யாணமெல்லாம்... போட்டீங்களே ஒரு போடு பத்மநாபன். சிரித்தேன்.
    நன்றி kgg, சேக்காளி (மீண்டும் வருக), ஸ்ரீராம், ஹேமா, சிவகுமாரன், வெங்கட் நாகராஜ், ...

    பதிலளிநீக்கு
  16. சளி, பித்தம், தலைவலியா?

    ஹா(ம்) பாயீ (ஹா)ம்.

    வாரத்துக்கு ஒரு தடவை உடலுறவு கொள்ளுங்க.

    ஸாரிடான் விளம்பரத்தில் பொருத்திப் பார்த்தேன்.அடக்கமுடியவில்லை சிரிப்பை)

    //செக்சுக்கு இரண்டு பேர் வேண்டுமோ? இணக்கமும் வேண்டுமோ? சரிதான். எங்கே என் running shoe?//

    செம ஷார்ப் அப்பாஜி.

    செக்சு என்ற ப்ரயோகம் தினத்தந்தியை நினைவுபடுத்தியது.

    //"ஏம்மா கொழந்தே அப்படிச் சொல்லுறே? இந்தியா என்ன பண்ணிச்சு?"//

    சிவாஜியின் தொனி அப்படியே.

    //வாயில்லா ஜீவன் பாவம் வேறென்ன செய்யும்?//

    //ஓசைப்படாமல் வருடத்துக்கு சுமார் பனிரெண்டு டன் மெதேனைக் கடைப்புறமாகக் கிளப்புகிறதாம்.//

    //இதைக் கண்டுபிடித்து நம்முடன் பகிர்ந்துகொண்ட ஞானிகளுக்கு ஒரு கிலோ மொச்சைக்கொட்டை பரிசு.//

    பரிசுலேயும் மெதேனைக் கலந்துட்டீங்களே அப்பாஜி.

    81ல் வந்த சினிமான்னு நெனைக்கிறேன். சஷ்மே பத்தூர்.இந்த சினிமாக்களில் கிடைக்கும் பிளாஸ்டிக் இல்லாத சுற்றுப்புறமும் இசையும் தீப்தி நாவலின் அழகும் ஏங்கவைக்கும் ரகம்.ஜேசுவோட பாடியது ஹைமந்தி சுக்லா. நல்ல குழல். ஷைலேந்தர சிங்கோடு ஹைமந்தி பாடிய இஸ் நதி கோ மேராவும் க்ளாஸ்.

    நெஞ்சை இரண்டு விரல்களால் குத்தியபடி அந்த சினேகிதர் சொன்னதை அடுத்த பதிவுக்கு நகர்த்தியிருக்கலாம்.மனசே சரியில்லை போங்க.

    பதிலளிநீக்கு
  17. வருக சுந்தர்ஜி.. நல்ல சிரிப்புத்தான். பின்னணி jingle என்னவாக இருக்கும்னு யோசிக்கிறேன். நேத்து ராத்திரி யம்ம்மா?

    மிச்ச விஷயங்களும் எனக்கு சிரிப்புத்தான். பாருங்க. அத்தனை மிலியன் வருஷத்துக்கு முன்னாலே டைனசோர் கிளப்பின வாயு பத்தி ஆராய்ச்சி செஞ்சவங்களை சந்திக்கணும்னு தோணிச்சு. அதுக்கு பணவசதி கொடுத்த நிறுவனங்களைச் சந்திக்கத் தோணிச்சு. பாராட்டத்தான். உண்மையாகவே.
    நடுவில சிந்தெடிக் ப்ரோடீன் தயார் பண்ண உதவி கேட்ட சிறிய சென்னை நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தவங்களைச் சந்திக்கவும் தோணிச்சு. நல்ல காரியம் செஞ்சாங்க. உலகத்துப் பசியை அடக்கி என்ன பிரயோஜனம்? அறுபது மிலியன் வருடத்துக்கு முந்தைய குசுமணம் அல்லவா உலகத்துக்கு முக்கியம்?

    பதிலளிநீக்கு
  18. //நெஞ்சை இரண்டு விரல்களால் குத்தியபடி அந்த சினேகிதர் சொன்னதை அடுத்த பதிவுக்கு நகர்த்தியிருக்கலாம்..

    உண்மை தான். இதைக் கொஞ்சம் விரித்து ஒரு சிறுகதையாக எழுதி வைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. கடைசியில் பார்த்தால் நம்ம க.பி.வை.

    தொட்டதெற்கெல்லாம் இது வென்றால் போகப்போக தொடுவதற்கே யோசனையாகிப் போகும். தங்க முட்டையிடும் வாத்தை அரிந்த கதை.
    தலைவலி போய் திருகுவலி என்று இன்னொரு கதையும் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  20. ஆமாம்.. முப்பது வருஷமாச்சு.. என்ன ஆனாள்னு யாருக்குமே தெரியாது.. most likely she is no more.. ஆனால் நாங்க சுத்தின இடங்களிலெல்லாம் அவ இருக்கா.. இங்க எப்பவுமே இருக்கா" என்றார், நெஞ்சை இரண்டு விரல்களால் குத்தியபடி.

    எனக்கு நெஞ்சைக் கட்டிக் கண்களில் நீர் முட்டியது.//

    இதை படிக்கும் போது அன்பு எல்லை மீறும் போது வரும் ஊடல் பிரிவை தந்து விடுகிறது என்று தோன்றுகிறது.

    அவர் அன்பு நெஞ்சை நெகிழவைத்து விட்டது.

    அவரைப்பற்றிய சிறுகதையை படிக்க ஆவல்.

    பாடல்கள் இரண்டும் இனிமை.

    பதிலளிநீக்கு
  21. ரசிச்சுப் படிச்சு பாத்து படிச்சு ரசிச்சேன்.

    பதிலளிநீக்கு
  22. இப்படியா பயமுறுத்துறது? சுந்தர்ஜி பாராட்டினாலும் கதை எழுதுறதா சொல்றீங்க. எதோ போக்கத்த அனானி திட்டினாலும் நாலு கதை எழுதுறதா சொல்றீங்க. கைவசம் ரொம்ப டைம் இருக்குதோ?

    பதிலளிநீக்கு
  23. உண்மையிலேயே ஏசுதாசின் அதி அற்புத பாடல்களில் இதுவும் ஒன்று தான். 'கா கரூன் சஜனி' கேட்டிருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  24. ஹிஹி ராம்.. பழக்க தோஷம்னு கேள்விப்பட்டிருப்பீங்க.. எல்லாத்தையுமே கதையா பாத்தா 'இன்பமில்லே துன்பமில்லே இந்த உலகத்திலே'...

    பதிலளிநீக்கு
  25. ரொம்ப ரசிச்சுப் படிச்சேன் எல்லா வரிகளையும். பொதுவா மெலடி ஸாங்ஸ். இந்தில தேவ் ஆனந்தின் பாடல்கள் எனக்கும பிடிக்கும. அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  26. அப்பாதுரை சார், ஒரே ப‌திவில் ட்ரைத்லான் சாம்பிய‌ன் ஆகிவிட்டீர்கள்.
    புவி வெப்ப‌ம், ப‌ச்சைவீடு எனத் தொட‌ங்கி, வாயு வேக‌த்தில் 'கேரி'யிட‌ம் கொஞ்ச‌ம் 'ஈசி'த்து விட்டு, தேவ் ஆனந்த் சொந்த‌காராரோடு சேர்ந்து அவ‌ரது மென்காத‌ல் (அது தான் காத‌ல், அசைவ‌ம் காம‌ம் ஆகிவிடுகிற‌து) ரசித்துப் பின் திரைக்காத‌ல் பாடல்க‌ளையும் இணைத்து, இணைய‌த்தின் "ட்ரைத்லான்" சாம்பிய‌ன் என்ற‌ ப‌ட்ட‌த்தை முதன் முத‌லாய், "மூண்றாம்" சுழி, என்ற‌ பெயருக்கும் பொருத்த‌மாய் வென்றிருக்கிறீர்க‌ள். வாழ்த்துக்க‌ள்.

    பதிலளிநீக்கு
  27. ரொம்ப நன்றி வாசன்..
    (ஹிஹி.. இப்படி ஏதாவது வாங்கினால் தான் உண்டு ட்ரையேத்லானெல்லாம்.. :)

    //அசைவ‌ம் காம‌ம் ஆகிவிடுகிற‌து//
    interesting pov.

    பதிலளிநீக்கு