2012/06/07

மகிழ்ச்சி எந்திரம்


    மாடியிலிருந்து லியோ அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என்று பலர் பண்ணை வீட்டில் குழுமியிருந்தார்கள். தெரிந்த முகங்களிடையே புரிந்த அன்பின் அடையாளம் விரவியிருக்கும் என்று எண்ணிய லியோவுக்கு அவர்கள் ஒருவருக்கொருவர் ஏசிக்கொண்டும் அடித்துக் கொண்டும் இருந்தது வருத்தமாக இருந்தது. வலித்தது. "நிறுத்துங்க! போதும்!" என்று கூவிக்கொண்டே அவர்களை நோக்கிச் சென்றான்.

லியோ ஓடி வருவதைக் கண்ட பெரிய பாட்டன் சிரித்தார். "டேய்.. நீ ஏன் இங்க வரே? போய் ஏதாவது கண்டுபிடி போ! இதெல்லாம் ஆம்பிளைங்க புழங்குற இடம்" என்றார். லியோவின் மாமா அவனை எச்சரித்தார். "லியோ.. உள்ளே போ.. படாத இடத்துல பட்டுறப்போவுது". பிறகு எக்காளமாகச் சிரித்தார். லியோ தயங்காமல் உரக்கக் கூச்சலிட்டான். "ஏன் இப்படி சண்டை போடுறீங்க? சந்தோஷமா இருக்கக் கூடாதா? எல்லோரும் சேர்ந்திருக்குற நேரத்தை ஏன் சண்டை போட்டு வீணடிக்கிறீங்க?" என்றான்.

"டேய்.. போக்கத்தப்பயலே.. போடா.. போய் சமையல்கட்டுல சமையல் மெஷின் ஏதாவது வேணுமானு கேட்டு செஞ்சு கொடு போ.." என்றார் சித்தப்பா.

"மாமா.. சந்தோஷ மிஷின் ஒண்ணு கண்டுபிடிச்சாலும் ஆச்சரியமில்லே.. இல்லே மாமா?" என்று சேர்ந்து கொண்டான் கூட்டத்தில் இளையவன். எல்லோரும் சிரித்தார்கள். "கண்டுபிடிப்பான்... போக்கத்தவன்..".

லியோவுக்கு உறைத்தது. இவர்களுக்கு என்ன தேவையென்று புரிந்து விட்டது. சந்தோஷ மிஷின்! இவர்களுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே தேவையான ஒன்று. மகிழ்ச்சி எந்திரம்! வீட்டுக்குள் ஓடினான்.

"ஏன் இப்படி தலைதெறிக்க ஓடி வரீங்க? படியேறும் போது தடுக்கி விழப்போறீங்க... ஒவ்வொரு படியா ஏறி வரக்கூடாதா?" என்று கலங்கிய மனைவியை ஒரு கணம் பார்த்தான். "லீனா, இந்த உலகத்துக்குத் தேவையானது எதுனு தெரிஞ்சுகிட்டேன்.. கண்டுபிடிக்கப் போறேன்.. மகிழ்ச்சி எந்திரம்!" என்று குதூகலித்தான்.

தோளைக் குலுக்கிய லீனா, "இப்போ யாருக்கு என்ன சோகம்? எங்கே என்ன கெட்டு போச்சு?" என்றாள்.

"என்னைத் தொந்தரவு செய்யாதே" என்று தன் அறைக்குள் ஓடும் கணவனைப் பார்த்த லீனா பெருமூச்சு விட்டாள். திருமணமாகி நாலு குழந்தைகளுக்குத் தகப்பன் போலவா நடந்து கொள்கிறான் லியோ? அவனையொத்தவர்கள் விவசாயம், வேலை, படிப்பு, வியாபாரம் என்று பலவகையிலும் முன்னேறி சமூக ஏணியில் உயர உயர ஏறுகையில் லியோ ஏன் இப்படி கிறுக்கனாக இருக்கிறான்? சைக்கிள் மணி, தானியங்கி ரொட்டி எந்திரம், காய்கறி வெட்டும் மிஷின், தயிர் கடையும் மெஷின் என்று ஏதாவது செய்து கொண்டு அனைவர் ஏளனத்தின் மையமாக இருக்கிறானே? உள்ளுக்குள் தேங்கிய ஏக்கங்களும் கனவுகளும் அவ்வப்போது அவளுடைய பெருமூச்சுகளில் கரைந்தன என்றாலும் லியோவை நேசித்தாள். லியோ அருகில் இருக்கையில் அவளுக்கு பூக்களின் வாசம் தேவைப்படவில்லை. சிறு மழைத்துளிகளில் நனையவேண்டும் என்ற வேகம் பிறக்கவில்லை. "இதோ இருக்கனே..?" என்று கைக்குட்டை விலக்கி முகம் சிரிக்கும் குழந்தை போல் தோன்றி மறையும் வானவில் கூட இரண்டாம் பட்சம். எனினும்.. லியோ ஏன் மற்றவர்கள் போலில்லை என்று அவ்வப்போது நினைப்பாள். அறைக்குள் சென்ற கணவன், மகிழ்ச்சி எந்திரம் கண்டுபிடிக்கும் முயற்சியில் அடுத்த சில நாட்களுக்கு அருகிலிருந்தும் தொலைவிலிருப்பான் என்று எண்ணியபடி ஒவ்வொரு படியாகக் கீழிறங்கினாள்.

    ரே வாரத்தில் மகிழ்ச்சி எந்திரத்தை உருவாக்கிவிட்டான் லியோ. கண்ணாடிக் கதவுக்கு உள்ளும் வெளியும் சிறு பெட்டிகளும், விளக்குகளும், அவற்றுள் புகுந்து வெளிவந்த வண்ணக் கம்பிகளும் பார்ப்பதற்கு லேசான அச்சத்தைக் கொடுத்தாலும், உள்ளே ஒரு நபர் அமரும் வசதிகொண்ட விளையாட்டு மணிக்கூண்டு போல் இருந்தது எந்திரம். அவ்வப்போது வந்த மனைவி பிள்ளைகளைக் கவனிக்காமல் தயாரிப்பிலே குறியாக இருந்த லியோ, எந்திரத்தில் மகிழ்ச்சிக்குத் தேவையானதென்று நினைத்த அத்தனையும் சேர்த்திருந்தான். உலகப் பயணம், இசை, நகைச்சுவை, இளம்பிராய நினைவுகள், காதல் நினைவுகள், மழலைப் பேச்சு என்று நிறையக் கலந்திருந்தான். எந்திரத்தை இயக்கிய ஒரு நிமிடத்துக்குள் மனம் மகிழ்ச்சியடையும் என்று நம்பினான். ஞாயிற்றுக் கிழமை காலை முதல் வேலையாக தன் குடும்பத்திற்கு மகிழ்ச்சி எந்திரத்தை அறிமுகம் செய்யத் தீர்மானித்தான். சனிக்கிழமை முழுதும் எந்திரத்தை சோதனை செய்வதிலும், கூண்டுக்கு வண்ணம் பூசுவதிலும் கழித்தான். இடையிடையே வந்து போன மூத்த மகன் சால், மிஷினில் குறியாக இருப்பதைக் கவனித்தான். வேண்டுமென்றே எந்திரத்தின் கதவை லேசாகத் திறந்து வைத்துவிட்டு உறங்கப் போனான்.

ஞாயிறு காலை. லீனா, மூன்று குழந்தைகள், வீட்டின் இரண்டு நாய்கள், பூனைகள் என்று குடும்பச் சாப்பாட்டு அறை நிரம்பியிருந்தது. சாப்பாட்டு மேஜை மேல் "லீனாவுக்காக" என்று எழுதி ஒட்டியிருந்த ஒரு பெரிய காட்டுமலர்க் கொத்தைப் பார்த்து லீனா புன்னகைத்தாள். மெள்ள இறங்கி வந்த லியோ எல்லோரையும் பார்த்தான். "மகிழ்ச்சி எந்திரத்தில் பயணம் போகத் தயாரா?" என்றான் லீனாவிடம்.

"அப்பா! நான் தான் முதல்.." என்றான் கடைக்குட்டி. சுற்றும் பார்த்த லியோ, "சால் எங்கே?" என்றான்.

"அப்பா! அண்ணா காலைலயே எழுந்து நைசா எந்திரத்துக்குள்ள போறதைப் பார்த்தேன்.. வேணாம்னு என்ன சொல்லியும் கேக்காம... உள்ளே போய்.." என்று வத்தி வைத்த இரண்டாமவளை மறித்த கடைக்குட்டி, "ஆமா.. நான் வரேன்னு சொன்னேன்.. அண்ணா என்னைத் தள்ளி விட்டாம்பா!" என்று வத்தி வைத்து முடித்தான். "சால் விழுந்து சிரிச்சிட்டிருந்தான்" என்றாள் லீனா.

சாலைப் பலமுறை அழைத்தபின் லியோ உற்சாகத்துடன், "சரி.. லீனா.. நீதான் மகிழ்ச்சி எந்திரத்தை அரங்கேற்றம் செய்யணும்" என்றபடி மேஜையிலிருந்த பூங்கொத்தை அவளிடம் கொடுத்தான். "முதல் வாடிக்கையாளருக்கு மகிழ்ச்சி எந்திரத்தின் அன்பளிப்பு" என்றான்.

"சரி" என்று மகிழ்ச்சி எந்திரத்துள் ஏறி அமர்ந்தாள் லீனா. கதவை அடைத்தாள். மாடியிலிருந்து இறங்கி வந்த சால், "வேணாம், அதுல போகாதே அம்மா!" என்று மென்மையாக வேண்டியதை லீனாவோ லியோவோ கவனிக்கவில்லை. சால் முகத்தில் வருத்தம் அப்பியிருந்தது. கண்ணீர் வற்றியக் கிணறாய் இருண்ட கண்கள்.

ஒரு நிமிடம். கூண்டுக்குள் லீனா சிரித்துக் கொண்டிருந்தாள். மூன்று நிமிடங்கள். சிறு குழந்தை போல் குதூகலித்தாள். ஐந்து நிமிடங்கள். அவள் முகத்தில் அவ்வப்போது மகிழ்ச்சி மின்னியது. எட்டு நிமிடங்கள். லீனாவின் முகம் வாடத் தொடங்கியது. பத்து நிமிடங்கள். அவள் கண்களில் நீர் உருளத் தொடங்கியது. கேவிக் கேவி அழத் தொடங்கினாள்.

லியோ அவசரமாக எந்திரத்தை அணைத்துக் கதவை உடைத்துத் திறந்தான். "என்ன ஆச்சு? எந்திரம் மகிழ்ச்சி தருவதை நிறுத்தி விட்டதா? எந்திரத்தில் ஏதாவது கோளாறா?" என்று கலங்கினான்.

அவனை இறுக அணைத்துக் கொண்ட லீனா விசும்பத் தொடங்கினாள். விசும்பல்களுக்கிடையே பேசினாள். "இல்லை லியோ. எந்திரம் வேலை செய்கிறது. மகிழ்ச்சி என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள முடிந்தது. அதில் நான் பார்த்த கேட்ட நகைச்சுவை இசை, கலாசாரம், உலகப்பயணம், ஓவியம், கவிதை, மழலை, இயற்கை, காதல்... எல்லாமே மகிழ்ச்சியைத் தந்தன. ஆனால் அனுபவிக்க முடியாமல் சோகம் புரண்டுவரத் தொடங்கியது. இவற்றைப் பார்த்த பொழுது மகிழ்ச்சி எழத்தொடங்கினாலும் உடன் நீயில்லை என்ற நினைவின் சோகம் மகிழ்ச்சியை அடக்கிவிட்டது. உடன் என் பிள்ளைகள் இல்லையே என்ற ஏக்கம் மகிழ்ச்சியை அடைத்துவிட்டது" என்றாள். சால் முகத்தில் தோன்றியப் புன்னகைக் கீற்றை கண்டு அவனை அணைத்துக் கொண்டாள்.

"....இதற்காகவா இத்தனை உழைத்தேன்?" என்றான் லியோ.

"புரியவில்லையா லியோ? மகிழ்ச்சி எந்திரம் எதுவென்று இன்னுமா புரியவில்லை?" என்றுக் குலுங்கி அழுதாள் லீனா.



[-]
    னி, சரிந்த மரத்துக்காகச் சிறிதுக் கண்ணீர்.

நீங்கள் மேலே படித்தது ரே ப்ரேட்பரி எழுதிய 'The Happiness Machine' என்ற அருமையான சிறுகதையின் சுமாரானத் தமிழ்ச் சுருக்கம். மையக்கருவும் விவரங்களும் ரேயின் எழுத்து. வர்ணணைகளும் சம்பவத் தொகுப்பும் என்னுடையது. தமிழாக்கத்தில் கதையின் கருவை என் பாணியில் சொல்லியிருக்கிறேன். ஆங்கிலத்தை அப்படியே தமிழில் வார்ப்பது பொருந்தவில்லை என்று நினைத்தேன். (ஆங்கிலத்தையும் அனுபவிக்க முடியாமல் போய்விடுமே என்ற அச்சமும் காரணம்). பிழைகளுக்கு நானே பொறுப்பு. நேரமும் வசதியும் கிடைத்தால் அசல் கதையைப் படியுங்கள். படம்: சிறுகதை வெளிவந்த 1957ம் வருட Saturday Evening Post இதழிலிருந்து.

என்னுடைய பதின்ம வயதில் அறிமுகமான எழுத்தாளர் Ray Bradbury. என்னுடைய மெத்தப் படித்த மாமா வீட்டில் பழைய 'Saturday Evening Post' பிரதிகளைப் படம் பார்த்துக் கொண்டிருந்த போது சட்டென்று attention grabber போல் படமும் தலைப்பும் என்னை இழுத்தது. கதை அப்போது புரியவில்லை. மாமாவிடம் கதை விளக்கம் கேட்ட போது, அவர் சொன்னது ஓரளவுக்குப் புரிந்தது. "இதுக்கு ஒரு கதை தேவையா?" என்று அவரிடம் கேட்டதும், அவர் புன்னகை செய்ததும் நினைவிருக்கிறது. கதையின் தாக்கத்தை இருபது வருடங்களுக்குப் பிறகு உணர்ந்தேன் என்பதே உண்மை.

பதிவெழுதுகையில் குறுக்கிட்ட என் மகன், "இது என்ன படம்?" என்றான். படத்தையும் மகிழ்ச்சி எந்திரம் கதையையும் சொன்னேன். பொறுமையாகக் கேட்டுவிட்டு, "that's it? boring" என்றான். "இன்னும் இருபது வருடம் கழித்துப் புரியும்" என்றேன். "i get it.. but still BORING!" என்றான்.

சரி, மகிழ்ச்சி எந்திரம் உங்களுக்குப் புரிந்ததா?

நாமே மகிழ்ச்சி எந்திரம். நாம் வெளிப்படுத்தும்.. பகிர்ந்து கொள்ளும்.. பெறும்.. வழங்கும்.. நேசம் அன்பு காதல் ஈகை தான் மகிழ்ச்சி. நாம் மகிழ்ச்சியோடு வாழவில்லையெனில் இயந்திரத்தினால் ஒரு பயனும் இல்லை. மகிழ்ச்சி எந்திரத்தை வைத்துக் கொண்டு எதையோ தேடி அலைந்து எத்தனையோ சாக்கு சொல்லி கடைசியில் எந்திரம் துருப்பிடித்து நாசமானதே என்று புலம்புவதில் பொருளே இல்லை. எது உண்மையான மகிழ்ச்சி என்று தெரிந்தும் அதை மதிக்காமல் உணராமல் செயல்படுத்தாமல்.. சபிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறோம்.

விஞ்ஞானப் புனைவின் வியாசரான ரே, எக்கச்சக்கமாக எழுதியிருக்கிறார். நானே இதுவரை நூறு கதைகள் போல் படித்திருப்பேன்! ரேயின் கதைக் கருக்கள், பிறரின் நவீனத் தமிழில் பிரபலச் சிறுகதைகளாகியுள்ளன. ரேயின் பல கதைகள் இன்று பிரபல விடியோ கேம்களாகத் தயாரிக்கப்படுகின்றன.

நான் தினம் நடக்கும் பாதையில் அசாத்திய இதம் தந்த ரே மரம், சென்ற செவ்வாய்க்கிழமை காணாமல் போய்விட்டது. just like that. மரத்தைக் காணோம். மரத்தடி மட்டுமே இருக்கிறது. மாய மரத்துக்கு நன்றி சொல்லி மரத்தடியில் சிறிது இளைப்பாறினேன். நிழலும் பூக்களும் சிந்திய பூதமரத்துக்காகக் கொஞ்சம் உருக விரும்பியது என் மனம். அறிவை வளர்த்த அற்புத எழுத்துக்கு இது என் அஞ்சலி.

சரிந்த மரத்துக்காகச் சிறிது கண்ணீர் உங்கள் கண்களிலும் தளும்புமென்று நினைக்கிறேன்.

goodbye, ray bradbury! we love you.





20 கருத்துகள்:

  1. //நான் தினம் நடக்கும் பாதையில் அசாத்திய இதம் தந்த ரே மரம், சென்ற திங்கட்கிழமை காணாமல் போய்விட்டது. just like that. மரத்தைக் காணோம். மரத்தடி மட்டுமே இருக்கிறது. மாய மரத்துக்கு நன்றி சொல்லி மரத்தடியில் சிறிதுஇளைப்பாறினேன். நான் நடக்கும் பாதையில் நிழலும் பூக்களும் சிந்திய பூதமரத்துக்காகக் கொஞ்சம் உருக விரும்பியது என் மனம். அறிவை வளர்த்த அற்புத எழுத்துக்கு இது என் அஞ்சலி.//

    மனதை உருக்கும் அஞ்சலி.

    நீங்கள் அந்தக் கதையைக் கொடுத்திருக்கவில்லையென்றால் அந்த விஞ்ஞானப் புனைவின் மேதையைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்காது. அஞ்சலியிலும் சகலரும் உணரும் படியான இந்த உருக்கமும் கூடியிருக்காது. தமிழில் அவர் கதையைச் சொல்லிய நேர்த்தியும், பின்னால் அவரைப் பற்றிச் சொல்லிய விவரக் குறிப்புகளும் நெஞ்சில் இடம் பிடித்தன.

    பதிலளிநீக்கு
  2. Priya Schaefferஜூன் 07, 2012

    I thought you might write about your favorite author. Very touching eulogy.

    பதிலளிநீக்கு
  3. ரே பாணியில் ஒரு எளிய முயற்சி:

    கலர்க்கலரான படங்களுடன் கலர்ஃபுல்லாக என் கதை அந்த பிரபல பத்திரிகையில் வெளிவந்திருந் தது.

    படித்துப் பார்த்த நண்பர்களிடமிருந்து ஃபோனில் பாராட்டு. பக்கத்து, எதிர்த்த,அடுத்த வீட்டுத் தெரிந்தவர்களிடமிருந்து பாராட்டு.
    ஆனால் சொந்த வீட்டில் யாரும் அதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

    கதை வெளிவந்த பருவ இதழ் ஹாலில், சோபா மீது சீந்துவாரற்று கிடக்கிறது. மனைவி தொலைக்காட்சி சீரியலில். பெண் நண்பியுடன் போனில். பையன் ஐபாடில் ஆழமாக.

    அபூர்வமானது என் மகிழ்ச்சி யந்திரம். அதிர்ஷ்ட்டக்கட்டை கூட.
    அது வீட்டில் இருக்கும் பொழுதெல்லாம் அப்படி ஒரு யந்திரம் என்னிடம் இருப்பதாக யாருக்குமே உணர்விருக்காது.
    ஊருக்கெல்லாம் தெரிந்தது என் வீட்டினருக்குத் தெரியாது.

    பொறுக்காமல் ஒருநாள் கேட்டே விட்டேன்.

    "அப்படியா?.." என்று கோரஸாக அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டா ர்கள். "என்னிடம் கூட அப்படி ஒரு மிஷின் உண்டே.." என்று ஒருவர் பாக்கியில்லாமல் அத்தனை பேரும் சொன்னது இன்னும் ஆச்சரியமாக எனக்கு இருந்தது.

    பதிலளிநீக்கு
  4. ஒரு நல்ல எழுத்தாளனுக்காக, புத்தகக் காதலனுக்காக. சரிந்த மரத்துக்காக என் கண்களிலும் நீர் தளும்பியது உண்மை.

    பதிலளிநீக்கு
  5. இதோ இருக்கனே..?" என்று கைக்குட்டை விலக்கி முகம் சிரிக்கும் குழந்தை போல் தோன்றி மறையும் வானவில் கூட இரண்டாம் பட்சம். //

    நினைத்துப்பார்க்கையிலேயே மனதில் சந்தோஷம் பொங்குகிறதே. இதை விடவா மகிழ்ச்சியை மகிழ்ச்சி எந்திரம் கொடுக்கும்?

    நல்லதொரு அஞ்சலி, அருமையான அஞ்சலி. இவரைக் குறித்து இன்றுதான் கேள்விப் படுகிறேன். நமக்குள்ளே பொங்கும் ஆனந்தத்தை உணராமல் போவதே பெரும் சோகம். இதையே தான் ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால் ஆசிரியரும் சொல்கிறார். நன்றி நல்லதொரு பகிர்வுக்கு. மனதைத் தொட்ட எழுத்து. நினைத்து நினைத்து யோசிக்க வைக்கும்.

    பதிலளிநீக்கு
  6. கடுகு சார் பக்கத்தில் இவரைப் பற்றிப் படித்தேன். நல்ல அஞ்சலி ஒரு (அல்ப) ஆறுதல் ஜீவி சாருக்கே அவரைப் பற்றி இதுவரைத் தெரியாது என்பதுதான் அது!!! அவரின் உடனடி இன்ஸ்டன்ட் முயற்சி ஆச்சர்யப்பட வைத்தது. தொகுப்பாக எங்காவது (பி டி எஃப்) கிடைத்தால் படிக்கலாம்! பிரபலர்கள் யார் இவர் கருவை எடுத்தாண்டார்கள் என்று சொல்லியிருக்கலாமோ....

    பதிலளிநீக்கு
  7. ரே ப்ராட்பரி!
    அவருக்குத் தெரிந்திருந்தால் உங்களுக்காக இனுனும் கொஞ்ச நாட்கள் இருந்திருப்பார்.
    வெகு உருக்கமான பார்வை.
    கீதா சொன்னது போல ஆனந்தத்தைத் தேட இது ஒரு நல்ல வழி.ஒரு புன்னகை,ஒரு கைதொடல்,ஒரு நேசப் பார்வை.நன்றி துரை.

    பதிலளிநீக்கு
  8. சரிந்த மரத்துக்காகச் சிறிது கண்ணீர் உங்கள் கண்களிலும் தளும்புமென்று நினைக்கிறேன்//

    . நிச்சயமாக
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. மகிழ்ச்சி எந்திரம் எதுவென்று இன்னுமா புரியவில்லை?"

    பதிலளிநீக்கு
  10. சரிந்த மரத்துக்காகச் சிறிதுக் கண்ணீர். [+]

    பதிலளிநீக்கு
  11. மகிழ்ச்சிக்கு அளவுகோல் எது. ? THE KINGDOM OF HEAVEN IS WITHIN YOU என்பது போல மகிழ்ச்சியும் உன்னுள் இருக்கிறது. அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.பொதுவாக TO LOVE AND TO BE LOVED மகிழ்ச்சி தரும்.யார் எழுத்தைப் பகிர்ந்து கொண்டால் என்ன.? சிந்திக்க வைக்கும் சிறுகதை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. பின்னூட்டங்களுக்கு நன்றி.
    ஜீவி.. உங்க குட்டிக்கதை அற்புதம். 'இவ்வளவுதானா நாம்?' என்று இன்னும் யோசிக்க வைத்தது..:)
    ஸ்ரீராம்.. அதனால் என்னங்க? எல்லாரும் எல்லாத்தையும் படிச்சா இருக்கப் போறோம்? இந்தக் கதை saturday evening post தளத்துல கிடைக்குது - ஆச்சரியம். மெட்ராஸ் யுஎஸ் எம்பசி நூலகத்துல அசல் கதையே கிடைக்கலாம்.. நிறைய ரே கதைகள் அங்கே தான் படிச்சது.. குளுகுளு வசதியோட சுகமா இருக்கும் :) இப்போ எப்படியோ?
    வல்லிசிம்ஹன்.. பாவங்க ரே.. தொண்ணூறு வயசுக்கு மேலே ஆச்சு, போகட்டும். (எழுபத்தைந்து வயதுக்கு மேலே உயிரை நிறுத்திக்கொள்ள மனிதருக்கு அடிப்படை உரிமை வேணும்னு நினைக்கிறேன்.. வரும்.)

    பதிலளிநீக்கு
  13. //(எழுபத்தைந்து வயதுக்கு மேலே உயிரை நிறுத்திக்கொள்ள மனிதருக்கு அடிப்படை உரிமை வேணும்னு நினைக்கிறேன்.. வரும்.)//

    'வரும்' என்கிற வார்த்தையில் இருந்த உறுதி நப்பாசையை கிளப்பியிருக்கிறது. அதற்கென்று ஏதாவது முன்பதிவு ஏற்பாடெல்லாம் இருந்தால், இப்போதே செய்து கொண்டால் கூடத் தேவலை.

    பதிலளிநீக்கு
  14. ஸ்வீடன், இங்கிலாந்து போன்ற கொஞ்சம் முதிர்ந்த முற்போக்கு நாடுகளில் இது முதலில் வரலாம். பொருளாதார நிலையை வைத்துப் பார்க்கையில் ஜபேனில் முதலில் வரலாம். இந்தியா அமெரிக்கா போன்ற மதவெறி நாடுகளில் நாளாகும்.
    அடிப்படை மனித உரிமை ஐக்கிய இயக்கம் ஏதாவது (WHO) வழிமொழிந்து, பிறகு ஒவ்வொரு நாட்டிலும் அடிப்படை constitutional amendment செய்ய வேண்டும். மத இயக்கங்களின் எதிர்ப்பை அடக்க மக்கள் ஆதரவு வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை ஏற்கவும் தொடர்ந்து வலியுறுத்தவும் நாடளவிலாவது இயக்கங்கள் வரவேண்டும். நல்ல வக்கீல்கள் வேண்டும். ம். ம். ம்.
    எல்லாம் நடந்து வசதி வரும் நாளில் முன்பதிவு செய்யும் அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. அருமையான கதை.
    ஜீவியின் கதையும் வெகு அருமை.
    \\எழுபத்தைந்து வயதுக்கு மேலே உயிரை நிறுத்திக்கொள்ள மனிதருக்கு அடிப்படை உரிமை வேணும்னு நினைக்கிறேன்.. வரும்.)//
    கண்டிப்பாய் வரவேண்டும்

    பதிலளிநீக்கு
  16. Thank you! I found the story in a PDF in the sat. eve. post website. Brilliant! I needed this...

    பதிலளிநீக்கு
  17. அடுத்த சில நாட்களுக்கு அருகிலிருந்தும் தொலைவிலிருப்பான் //

    உடன் நீயில்லை என்ற நினைவின் சோகம் மகிழ்ச்சியை அடக்கிவிட்டது. உடன் என் பிள்ளைகள் இல்லையே என்ற ஏக்கம் மகிழ்ச்சியை அடைத்துவிட்டது//

    நாமே மகிழ்ச்சி எந்திரம். நாம் வெளிப்படுத்தும்.. பகிர்ந்து கொள்ளும்.. பெறும்.. வழங்கும்.. நேசம் அன்பு காதல் ஈகை தான் மகிழ்ச்சி//

    goodbye, ray bradbury! we love you.

    பதிலளிநீக்கு
  18. டச்சிங்க்.
    இன்னும் நிறைய ப்ராட்பரி கதைகளை நீங்கள் தமிழில் கொண்டுவர வேண்டும் என்ரு வேண்டுகிறேன். உங்கள் பாணியில் சொல்லாமல் அவர் பாணியிலேயே சொல்ல வேண்டும் என்று வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. //(எழுபத்தைந்து வயதுக்கு மேலே உயிரை நிறுத்திக்கொள்ள மனிதருக்கு அடிப்படை உரிமை வேணும்னு நினைக்கிறேன்.. வரும்.)//
    வாத்தியார்கூட ஏதோஒரு கதையில் (சொர்க்கத்தீவு ?)ஒரு அதிநவீனக் கணினி 60 வயதுக்குமேல் யாரும் இல்லாதபடி கட்டுப்படுத்தும் என்ற விதத்தில் எழுதியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு