2010/12/30

மெல்லிசை நினைவுகள்



திரும்பிப் பார்க்கிறேன். டிசம்பர் முழுவதும் மரிஷ்கா ஜவ்வு இழுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு முக்கியமான செய்தி ஒன்றைப் பகிர நினைத்தேன். இன்னொரு சமயம். இப்போதைக்கு மெல்லிசை முக்கியம் என்று தோன்றுகிறது.

பெண் குரல்களில் சுசீலா பிடிக்கும் என்று சொல்லியிருக்கிறேன். ரகசியமாக எல்ஆர் ஈஸ்வரி மேல் எனக்குப் பெருத்த காதல் உண்டு. சுசீலாவிடம் சொல்லவில்லை.

வளரும் பருவத்திலும் நான் விரும்பிக் கேட்டப் பெண் குரல் ஈஸ்வரியின் குரல். என் முதல் தங்கை சுசீலா கட்சி; இரண்டாமவள் ஈஸ்வரி கட்சி. இருந்த ஒரே ஒரு மர்ஃபி ரேடியோவில் நானும் இ.தங்கையும் ஒற்றுமையாகக் கேட்டது இரண்டே நிகழ்ச்சிகள்: 1)இலங்கை வானொலியின் பொங்கும் பூம்புனல் (அவளுக்கு அப்துல் ஹமீது, எனக்கு ராஜேஸ்வரி ஷண்முகம் குரல்களைக் கேட்டால் தான் பொழுது விடியும்), 2)ஈஸ்வரியின் திரைப்பாடல்கள். சமயத்தில் மாரியம்மா செல்லாத்தா என்று அச்சுறுத்தும் பொழுதெல்லாம் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு ஓடியிருக்கிறேன். இந்தியா போனபோது ஈஸ்வரி நிகழ்ச்சியொன்றைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். மாரியம்மா பாடல்களை வரிசையாகப் பாடினார். ஆத்தா பாடல்களைப் பக்தியாக உருகியுருகிப் பாடுவார் என்று பார்த்தால், பின்னால் பெண்கள் சூழக் குலுங்கி ஆடிப் பாடுகிறார்! தெரிந்திருந்தால் இத்தனை நாள் கேட்டிருக்கலாம்.

எந்த வகை இசையானாலும் அலட்டாமலும் இனிமையாகவும் ஒரு attitudeடன் பாடியது ஈஸ்வரியின் ஸ்டைல். மேற்கத்தியத் துள்ளல் தான் ஈஸ்வரிக்கு வருமென்று சொல்லும் பலர், இவரின் 'மலரைப் பறித்தாய்', 'மலருக்குத் தென்றல்', 'யாரடி வந்தார்', 'அலங்காரம் கலையாமல்' பாடல்களைக் கேட்டு அசந்திருக்கிறார்கள். இன்னொரு சுசீலா, இன்னொரு ஜானகி, இன்னொரு வாணி வந்திருக்கலாம், வரலாம். ஈஸ்வரி வழி தனிவழி. சசிரேகா என்று ஒருவர் கொஞ்சம் அருகில் வந்தார், பிறகு விலகிவிட்டார். ஈஸ்வரியின் இடம் அப்படியே இருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஈஸ்வரியுடன் பாடும் பொழுது, ஆண் பாடகர்கள் கொஞ்சம் பயந்து ஒழுங்காகப் பாடினார்கள் என்று நினைக்கிறேன். அசந்தால் ஒரு கையில் நசுக்கிச் சாப்பிட்டு விடுவார். ஈஸ்வரி டூயட்களில் போட்டி மனப்பான்மையும் ஆதிக்கமும் நுண்மையாகப் பரவியிருக்கும். ஆரம்ப எஸ்பிபி டூயட்களின் ஈஸ்வரி ஆதிக்கத்தை இன்றைக்கும் கேட்டு ரசிப்பேன். டிஎம்எஸ் கொஞ்சம் விதிவிலக்கு; அவரையும் சில பாடல்களில் பம்பரமாகச் சுற்ற விட்டார் ஈஸ்வரி (மாந்தோப்பில் நின்றிருந்தேன், ஒருவர் ஒருவராய்ப் பிறந்தோம், நினைத்ததை நடத்தியே, சொர்க்கம் பக்கத்தில் - பாடல்களில் டிஎம்எஸ்சுக்கு மூச்சு வாங்கும், நிறைய ரசிப்பேன் ஈஸ்வரியின் ஆதிக்கத்தை).

சுசீலாவுடன் பாடிய டூயட்களில் ஈஸ்வரி வெற்றி அதிகம் என்பேன். ஈஸ்வரி குரல் கடைசியாக ஓங்கிய பாடல்: பாலாடை மேனி பனிவாடைக் காற்றில். சுசீலா குரல் ஓங்கியக் கடைசிப் பாடல்: பொன்னழகுப் பெண்மை சிந்தும் புன்னகை என்ன. என்னிடம் இருக்கும் பாடல் பதிவில் தரமில்லை என்பது வருத்தம். பாலாடை மேனி எனக்கு மிகவும் பிடித்தப் பாடல். சுசீலா குரல் ஓங்கிய இன்னொரு ஆல்டைம் ஃபேவரிட் பாடல்: தூது சொல்ல ஒரு தோழி; அந்தப் பாடலும் என்னிடம் இல்லை.

இந்தப் பதிவுக்காகத் தேர்ந்தெடுத்தது, ஆண் பாடகர்களுடன் ஈஸ்வரி பாடிய டூயட்கள். சீர்காழியுடன் பாடிய 'ப்யூடிபுல்' பாடலைத் தொலைத்து விட்டேன். சீர்காழியின் குரலைக்கூட அசைத்தவர் ஈஸ்வரி. (சுசீலா செய்தது: 'கண்ணான கண்ணனுக்கு அவசரமா').

ஈஸ்வரியின் குரலுக்காகவும், உடன் பாடும் ஆண் பாடகர்கள் சிரமப்படுவதை ரசிப்பதற்காகவும் இந்தப் பாடல்களைப் பல முறை கேட்டிருக்கிறேன். ஒன்றைத் தவிர மற்றவை எல்லாம் மெல்லிசை மன்னரின் இசையில் உருவானவை.

'எந்தன் நெஞ்சம்' பாடலுக்கு இசை வேதாவாக இருக்கலாம். அந்தப் பாடலைப் பற்றிய ஒரு நினைவு. 'ஜிங்கிலாலா'வின் பாதிப்பு இல்லாத பிள்ளைகளே இல்லையெனலாம் அந்தப்பாடல் வந்த நாளில். அத்தனை சூபர் ஹிட்! என் தங்கை சரிகை ஃப்ரில் ப்ராக் போட்டு ஜிங்கிலாலா என்று ட்விஸ்ட் ஆடியது நினைவிலிருக்கிறது. காரைக்கால் நிர்மலாராணி பள்ளிக்கூட க்ரிஸ்மஸ் விழாவின் போது இந்தப் பாட்டுக்கு பிள்ளைகள் எல்லாம் ஆடினோம். திடீரென்று ஆட்டம் நின்று சிறு கலவரம். சிஸ்டர்களும் மதர்களும் அவசரமாக ஓடினார்கள். நாகப்பட்டினத்திலிருந்து ரகசியமாக ஒரு பஸ் வந்தது. வியட்நாம் போர் தொடங்கியதும் துரத்தப்பட்டுத் தஞ்சம் கேட்டு வந்தத் தமிழ்க்குடும்பங்களுக்கு மாதா கோவிலிலும் பள்ளிக்கூடத்திலும் அடைக்கலம் கொடுத்தார்கள். அகதிகள் என்றால் என்ன என்பதை முதன் முறையாகத் தெரிந்து கொண்டேன். அன்றைக்கு வந்தவர்களுள் என் வயதுக்காரன் ஒருவன் என்னோடு படிக்கத் தொடங்கினான். ஜிங்கிலாலா பாடலை இன்னொரு காரணத்துக்காகவும் மறக்க முடியவில்லை. நானறிந்த பெயர்களிலேயே சிறப்பான பெயர், என்னுடன் ஆடிய எங்கள் பக்கத்துவீட்டுப் பெண்ணுக்குத் தான் என்று நினைக்கிறேன். பாரியும் மலரும் எங்கிருந்தாலும் வாழ்க.

நினைவுகளின் சுமையைக் கரைக்கவும் சுவையைக் கூட்டவும் இசையால் முடியும். இந்தப் பாடல் தொகுப்பை ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன். பாடல்களின் காலக்கட்டங்களில் உங்கள் வாழ்வில் சுவையும் சுமையும் நிகழ்ந்திருக்கலாம். (ஆர்வீஎஸ் இன்னும் பிறக்கவில்லை). நிரந்தரமாக உடன் வருவது சுவையுமில்லை, சுமையுமில்லை - நினைவுகள் மட்டும் தான். அவற்றை அசைபோட நல்ல இசை தேவை என்று தோன்றுகிறது. (ஹேமாவுக்கு எல்ஆர் ஈஸ்வரி பிடிக்கும் என்று நினைக்கிறேன்.)
மெல்லிசை நினைவுகள் | 2010/12/30

25 கருத்துகள்:

  1. பயங்கர அலசல். எனக்கு இந்த அளவுக்கு ஞானம் இல்லை

    பதிலளிநீக்கு
  2. அப்பாடா கரப்பான் பூச்சியை ஒழித்து விட்டீர்களா....எனக்குப் பிடிக்கவே இல்லை.பி க்ரேட் ஹாலிவுட் படம் நிறைய கலந்து பார்த்தது போல் இருந்தது என்று சொன்னால் கோபித்துக் கொள்ளமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.இடை இடையே கொஞ்சம் உங்கள் கருப்பு நகைச்சுவை தெரிந்தது.மற்றபடி ஒரே வெள்ளை ரத்தம்.ஈஸ்வரியின் பளிங்கினால் ஒரு மளிகை தாம் அவர் பெஸ்ட் என்பது எனது கருத்து

    பதிலளிநீக்கு
  3. நடுவில் நீ நினைத்தால் காணோம் என்று நினைக்கிறேன்...'அலங்காரம் கலையாமல் ' என்ன பாடல் என்று தெரியவில்லை. பொன்னழகுப் பெண்மை சிந்தும் புன்னகை எல் ஆர் ஈ பாடுகிறாரா...பளிங்கினால் ஒரு மாளிகை, ஆடவரெல்லாம் ஆட வரலாம், லில்லி லல்லி ரோசி பப்பி, மலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும், இது மாலை நேரத்து மயக்கம், மின்மினிப் பூச்சிகள், மின்மினியை கண்மணியாய், முத்தமோ மோகமோ, முத்து குளிக்க வாரீயளா, கண்களுக்கென்ன, ஆனந்த தாண்டவமோ போன்ற பாடல்கள் பிடிக்கும்!

    பதிலளிநீக்கு
  4. நன்றி எல் கே(அடுத்த வாரம் எழுத நினைத்திருக்கிறேன்), kolipaiyan, bogan, ஸ்ரீராம், ...

    இதில் தவறாக நினைக்க எதுவுமே இல்லை bogan - இனி எழுதினால் நினைவில் வைக்கிறேன். பளிங்கினால் அட்டகாசமான பாடல்.

    ஈஸ்வரியின் தனிப்பாடல்களில் சோடை போனவை மிகக் குறைவு, ஸ்ரீராம். (பாட்டு லிஸ்டில் பிழை நேர்ந்து விட்டது, கவனக்குறைவு. திருத்திவிட்டேன்.)

    பதிலளிநீக்கு
  5. //(ஆர்வீஎஸ் இன்னும் பிறக்கவில்லை).//
    பெரியோர்களுடன் சேர்ந்து நானும் பழழ்ழ்ழ்......ய பாடல்கள் கேட்க கற்றுக்கொண்டேன். போட்ட பாடல்கள் அருமை. // ரகசியமாக எல்ஆர் ஈஸ்வரி மேல் எனக்குப் பெருத்த காதல் உண்டு. சுசீலாவிடம் சொல்லவில்லை. // பார்த்து கோச்சுக்க போறாங்க.. ;-)

    எனக்கு எல்.ஆர். ஈஸ்வரி "மாரியம்மா"வாகத்தான் அறிமுகம். சிறுவயதில்,மார்கழி மாதத்தில், அம்மா அம்மா என்று கூம்பு ஸ்பீக்கரின் வழியாக காதைக் குடைந்து தூக்கத்தை கலைக்கும் அலாரம் மாரியம்மா.
    "நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது..." என்று பாடிய காதோடுதான் நான் பாடுவேன்..... எனக்கு பிடித்த பாடல்.
    (எப்படி.. உங்க ரேஞ்சுக்கு ஒரு பாட்டு சொன்னேன் பார்த்தீங்களா!!!... ;-) )

    பதிலளிநீக்கு
  6. அப்பாடி(ஜி)...தொலைச்சாச்சு கரப்பான்பூச்சியை ஒருமாதிரி !

    இனிமையான தொகுப்பு.பாட்டு முடிஞ்ச அப்புறமும் இன்னும் வருமான்னு பாத்திட்டு இருக்கேன்.பழைய பாடல்கள் கேட்கும்போது ஒரு தெளிவு.

    ஜிகு ஜிகு...சூப்பர்.ஸ்ரீராம் எல்லாப் பாடல்களையும் அடுக்காச் சொல்லிட்டார்.நானும் ஒரு பாட்டுச் சொல்றேனே.காதோடுதான் நான் பாடுவேன்...!

    பதிலளிநீக்கு
  7. எனக்கு " இது மாலை நேரத்து மயக்கம், மற்றும் காதோடுதான் நான் பேசுவேன்" ரொம்ம்ம்ம்.....ப் பிடித்த பாடல்கள்.
    அப்புறம்.... "எயந்த பயம்" பாடல் ?

    பதிலளிநீக்கு
  8. //ஈஸ்வரியுடன் பாடும் பொழுது, ஆண் பாடகர்கள் கொஞ்சம் பயந்து ஒழுங்காகப் பாடினார்கள் என்று நினைக்கிறேன். அசந்தால் ஒரு கையில் நசுக்கிச் சாப்பிட்டு விடுவார்.//

    ஒரு முக்கியமான பாடலை விட்டு விட்டீர்களே அப்பாதுரை.
    ”துள்ளுவதோ இளமை..”

    ஒரு ரசனையில் புள்ளியில் இணைந்தவகள் இந்த இடுகையைப் படிப்பவர்கள் என்று நினைக்கிறேன்.
    ஈஸ்வரியின் பாடலைக் கேட்பவர் ஆடாமல் இருக்க முடியாது. அந்தக் குரலில் ஒரு வைபிரேஷன் இருக்கும். அதுதான் கேட்பவர்களைச் சுண்டி இழுக்கும்.. மயக்கும்..

    நல்ல பதிவுக்கு நன்றி அப்பாதுரை..

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. எனக்கும் LR ஈஸ்வரியின் பாடல்கள் பிடிக்கும். அவரின் பெரும்பான்மையான பாடல்களில் , வேகம், எனர்ஜி, உற்சாகம் மிகுந்திருக்கும்.
    ஆனந்த தாண்டவமோ, பளிங்கினால் ஒரு மாளிகை, போன்ற அவரின் பாடல்கள் என்று கேட்டாலும் போதை தருவன. நல்ல தொகுப்பு.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், மூன்றாம் சுழி வாசகப் பெருமக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. தொடர்ந்து பாடல் பதிவுகளைஅழகாக பதிவு செய்வதற்கு பாராட்டுக்கள் சுத்தமாக இருக்கிறது...

    ஈஸ்வரியக்கான்னு சொன்னாலே , மாரியம்மா பாட்டுக்கள்...இப்பக்கூட என் நண்பர் வண்டியில் அம்மன் பாட்டுக் கேட்டு வருகிறேன்.... சினிமாப்பாட்டில் அவரது ஆதிக்கம் உணர்கிறேன் ...

    //பெண்கள் சூழக் குலுங்கி ஆடிப் பாடுகிறார்! தெரிந்திருந்தால் இத்தனை நாள் கேட்டிருக்கலாம்.// அட்டுழியம் பண்ணின்றிங்க .. சினிமாலதானே ரெக்கார்ட் டேன்ஸ் பாட்டு பாடுவாங்க ..பக்தி பாட்டுல அது வேற வகை ஆட்டம்...

    //(ஆர்வீஎஸ் இன்னும் பிறக்கவில்லை) // மனுஷன் தலகால் புரியாம துள்ளி..துள்ளி குதிக்க போகிறார் ...

    பதிலளிநீக்கு
  12. இனிய நட்பை அறிமுகப்படுத்திய 2010 க்கு நன்றி.

    இந்த இனிமை தொடர இறையருளை வேண்டி புத்தாண்டில் தங்கள் மனம் போல எல்லா நலமும் குவியவும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  13. ////(ஆர்வீஎஸ் இன்னும் பிறக்கவில்லை) // மனுஷன் தலகால் புரியாம துள்ளி..துள்ளி குதிக்க போகிறார் ... //
    இசை என்னும் இன்ப வெள்ளத்தில் குதிப்பதைத் தான அதுமாதிரி சொல்றீங்க.. பத்துஜி.. ;-)
    @அப்பாதுரை
    என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அப்பாஜி. 11- ல கட்டாயம் சந்திப்போம். ;-)

    பதிலளிநீக்கு
  14. //இந்தப் பதிவுக்காகத் தேர்ந்தெடுத்தது, ஆண் பாடகர்களுடன் ஈஸ்வரி பாடிய டூயட்கள். சீர்காழியுடன் பாடிய 'ப்யூடிபுல்' பாடலைத் தொலைத்து விட்டேன். சீர்காழியின் குரலைக்கூட அசைத்தவர் ஈஸ்வரி.//

    நன்றி
    http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=6045 மற்றும்
    http://www.dhool.com/sotd2/870.html

    பதிலளிநீக்கு
  15. // ஆத்தா பாடல்களைப் பக்தியாக உருகியுருகிப் பாடுவார் என்று பார்த்தால், பின்னால் பெண்கள் சூழக் குலுங்கி ஆடிப் பாடுகிறார்! தெரிந்திருந்தால் இத்தனை நாள் கேட்டிருக்கலாம்.
    //

    காதல் ரொம்ப அதிகமாப் போகுது.. ஒரு அடிஷனல் கேள்வி. வேப்பிலை பாவாடையோடா? (இதைப் படிக்கும் போது கண்டிப்பா சிரிக்கணும். மூஞ்சியை சுழிக்கக் கூடாது) ;-) ;-)

    பதிலளிநீக்கு
  16. வாராய் என் தோழி
    பட்டத்து ராணி

    பதிலளிநீக்கு
  17. கடவுள் தந்த இருமலர்கள்

    நன்றி
    http://www.thiraipaadal.com/singer.php?SGRID=LR.%20%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF&lang=ta

    பதிலளிநீக்கு
  18. நன்றி RVS, ஹேமா, சிவகுமாரன், ஆதிரா, geetha santhanam, பத்மநாபன், பாலராஜன் கீதா, ...

    பதிலளிநீக்கு
  19. சுட்டிக்கு நன்றி பாலராஜன்கீதா. வாராய் என் தோழி பாடல் மறந்தே விட்டது. ஈஸ்வரியின் திறனுக்கு இன்னொரு அடையாளம். கடவுள் தந்த இருமலர்கள் டூயட்டா?

    பதிலளிநீக்கு
  20. 'காதோடு தான்' பாட்டில் தான் ஈஸ்வரி உடனடியாக அடையாளம் காணப்படுகிறார் போலிருக்கிறது.

    RVS.. வேப்பிலை ஸ்கர்ட் நல்ல கற்பனை.. முகம் சுளிக்க எதுவும் இல்லை.

    பத்மநாபன் - ஈஸ்வரியின் 'செல்லாத்தா' விடியோவைப் பாருங்கள். (ரிவைன்ட் செய்ய வசதியில்லாமல் தவித்தேன்)

    பதிலளிநீக்கு
  21. அழகாகச் சொன்னீர்கள் ஆதிரா.. இந்த வரியை பயன்படுத்திக் கொள்கிறேன், உங்கள் அனுமதியுடன்.
    >>>ஒரு ரசனையில் புள்ளியில் இணைந்தவகள்..

    பதிலளிநீக்கு
  22. தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  23. சிறப்பான பதிவு. நீங்க எழுதி இருப்பது போல் இவர் வழி தனி வழிதான். இவர் குரலை கேட்டாலே ஒரு தனி மயக்கம்தான். இவர் பாடிய முக்கால்வாசி பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றாலும் 'அதிசய உலகம், ரகசிய இதயம்' பாடல் எனக்கு மிகவும் special. பவள கொடியிலே, கல்லெல்லாம் மாணிக்க, ஏட்டில் எழுதி வைத்தேன் போன்ற பல பாடல்களில் வரும் இவரது ஹம்மிங்கை நான் மிகவும் ரசித்து கேட்பேன்.
    நானொரு காதல் சந்நியாசி, நீயென்பதென்ன, அம்மம்மா கேளடி தோழி, என் உள்ளம் உந்தன், வாழை தண்டு போல உடம்பு, வரவேண்டும் ஒரு பொழுது, உன் விழியும்.............இப்படி நிறைய சொல்லி கொண்டே போகலாம்.

    அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு