2010/11/06

சீவகசிந்தாமணி    ள்ளி நாட்களில் பெயரளவில் அறிந்த நூலைச் சமீபத்தில் முழுமையாகப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. காப்பியக்கதை அறியாத என் போன்ற ஞானஒளிகளுக்காக, இதோ மையக்கதை.

பெரும் மதில்களும், கோட்டைகளும், மண்ணில் பரவிய வானவில் போல் வண்ணச்சாந்து தெளிக்கப்பட்டத் தெருக்களும் சூழ்ந்த இராசமாபுரம் எனும் மாநகரைத் தலைநகராகக் கொண்டு, சரயு நதி பாயும் ஏமாங்கத நாட்டை ஆண்டான் சச்சந்தன். மாமன் மகள் விசயா என்பவளை மணந்து, அவளுடன் கூடிக் களிக்கவே பிறவியெடுத்ததாக நினைத்து அரசாளும் கடமையை மறந்தான். சச்சந்தனின் தலையமைச்சர் மூவருள் கட்டியங்காரன் என்பான் பக்கத்திருந்து பழுதெண்ணும் பதர். எனினும், சச்சந்தன் அவனை நம்பி ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்து, விசயாவுடன் களித்திருந்தான்.

கருவுற்ற விசயா, தான் கண்ட தீய கனவின் விவரம் சொன்னாள். கனவின் பொருளறிந்த சச்சந்தன், தனக்கு நேரப்போகும் தீமையை முன்குறிப்பாக உணர்ந்து கொண்டான்.

அனைவரையும் தன்வசப்படுத்திய கட்டியங்காரன், சச்சந்தனுடன் போர் தொடுத்தான். அதையறிந்த சச்சந்தன் விசயாவிடம், "காதலி, நின் கனவு பலிக்கத் தொடங்கியது. கருவிலிருக்கும் மகவைக் காக்க நீ இக்கணமே மறைக. செயலற்று நின்றால் சேய்க்கு ஆபத்து. அஞ்சாதே. உனக்கு எடுப்பான மகன் பிறப்பான். அவன் எட்டுப் பெண்களை மணந்து சிறப்பான்" என்று ஆசிகள் சொல்லி, அவளை முத்தமிட்டு, மயிற்பொறியிலேற்றி அனுப்பினான்.

அழுதுகொண்டே மயிற்பொறியின் விசையை இயக்கிய விசயை, அது பறந்து செல்கையில், மன்னன் கொலையுண்டதை அறிவித்த முரசொலி கேட்டு மனங்கலங்கி விசை மாற்றாது மயங்கி விழுந்தாள். மயிற்பொறி இடுகாட்டில் இறங்கி நின்றது. சுற்றிலும் பிணங்கள் எரியக்கண்டு அஞ்சிய அஞ்சுகம், ஆங்கே ஒரு ஆண்மகனைப் பெற்றாள். மகனழகில் மயங்கிய மாதரசி, 'கோட்டை சூழ் கோபுரத்தில் இருக்க வல்லான் கோட்டான் சூழ் காட்டிலே இருக்கக்கண்டு என்னுயிர் பிரியாதிருக்கிறதே, உலக நாயகன் உனை வளர்க்கும் விதம் அறியேனே! துணையில்லையே!' என, கீழ்க்காணும் விருத்தப்பா வடித்துத் துடித்தாள்.
    மற்றிஞ் ஞாலம் உடையாய் நீ வளருமாறு மறியேனால்
    எற்றே இதுகண் டேகாதே இருத்தி யாலென் இன்னுயிரே!

கணவனின் மறைவை எண்ணிப் புலம்பியவள் மேல் கருணை கொண்ட ஒரு காட்டுத்தெய்வம் அவள் முன் தோன்றி, "மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விசயா" என்றது. திடுக்கிட்ட விசயாவிடம், "கலங்காதே. இறந்த குழந்தையை எரிக்க இங்கே கந்துக்கடன் எனும் வணிகன் வருவான். உன் மகனை அவன் கண்பட விட்டு ஒளிவோம். உன் மகன் நாடாளப் பிறந்தவன். வணிகன் வீட்டில் சிறப்பாக வளர்ந்து ஒரு நாள் நாடாள்வான். பின்னொரு நாள் நானே உன்னை அவனிடம் சேர்ப்பேன்" என்று ஆறுதல் சொன்னது.

கடுந்தரையில் கதிரவனாய் ஒளிவீசும் குழவியைக் கண்டுத் திகைத்தான் கந்துக்கடன். சுற்றும் பார்த்துக் கையிலெடுத்தான். குழந்தை தும்ம, "சீவ" என்றொலித்தது. அதையே தெய்வத்தின் குரலாகக் கொண்டு, "இனி, நீ என் மகன். உன்னைச் சீவகன் என்பேன்" என்று பெயரிட்டு உடனெடுத்துச் சென்றான். சில நாட்களில் கந்துக்கடனுக்கு இன்னொரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு நந்தட்டன் என்று பெயரிட்டு, சீவகனையும் நந்தட்டனையும் இரு கண்கள் போல் வளர்த்தான். சீவகனும் நந்தட்டனும் இணைபிரியாதிருந்தனர்.

இயல் இசை நாடகம் நடனம் வாதம் என்ற கலைகளையும், மல் வில் வாள் என்ற போர்முறைகளையும், அறம் பொருள் இன்பம் வீடு என்ற நெறிகளையும் கற்று, அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து வளர்ந்த சீவகன், வீடு பற்றிய சிந்தனையிலே உழன்று துறவறம் தழுவ எண்ணினான். அதையறிந்த அவனுடைய ஆசிரியர், சீவகனை அழைத்து அவன் பிறந்த வரலாற்றைக் கூறினார். வாளெடுத்தச் சீவகனைத் தடுத்து, "நான் ரகசியமாகக் காத்து வந்த செய்தியைச் சொன்னேன். உனக்கும் உன் தாய்க்கும் பெருமை சேர, கட்டியங்காரனைக் கொன்று நாட்டைக் கைப்பற்று. அதை நல்ல தருணத்தில் நிறைவேற்றுக" என்று சொல்லித் தவமேற்க மறைந்தார்.

காட்டுத்தெய்வம், விசயாவை வணிகன் வீட்டில் விட்டுச்சென்றது. தாயுடன் இணைந்த தனயன், கட்டியங்காரனை வீழ்த்தித் தாயின் கண்ணீர் துடைக்கக் காத்திருந்தான். இடைவேளையில் எட்டுப் பெண்களைப் பின்வருமாறு மணந்தான்.

1. கோவிந்தை: வேடுவர் கொள்ளையடித்த ராசமாபுர ஆனிரையை மீட்டு வரச் சென்ற மன்னன் கட்டியங்காரனின் சேனை புறமுதுகிட்டு ஓட, ஆயன் நந்தகோன் மனந்தளராமல் ஆனிரையை மீட்டு வருவோனுக்கு பணமும் மணமும் பரிசளிப்பதாக அறிவித்தான். செய்தி கேட்ட சீவகன் சிலையும் அம்புமெடுத்து தேரேறிச் சென்றான். சீவகனின் போர் வேகங்கண்டு கலங்கிய வேடுவர் ஆனிரையை விட்டோடினர். தன் கன்னிப்போரில் உயிர்க்கொலை தவிர்த்து ஆனிரையும் மீட்டு வந்த சீவகனைப் பாராட்டிய நந்தகோன், "நீ கட்டியங்காரனை வெல்லும் நாளை எதிர்பார்க்கிறேன். இனி என் மகளுடன் மகிழ்ந்திரு" என்று தன் மகள் கோவிந்தையை மணமுடித்து வைத்தான். நகரமெங்கும் விழா எடுத்தனர். கற்புடை மங்கையர் அவனை வாழ்த்தினர். ஈராயிரம் பசுக்களைச் சீதனமாகப் பெற்ற சீவகன், கோவிந்தையுடன் கூடிக் களித்தான்.

2. காந்தருவதத்தை: சீதத்தன் என்ற ராசமாபுர வணிகன், கடும்புயலில் எல்லாமிழந்து ஒரு தீவில் ஒதுக்கப்பட்டான். பொன்னும் ஒரு பெரிய கப்பலும் பரிசளித்து அவனிடம் தன் மகளை ஒப்படைத்தத் தீவின் மன்னன், "இசையில் தன்னை வென்றவரையே மணப்பதாக உறுதியோடுள்ளாள் என் மகள் காந்தருவதத்தை. தோற்றுப் பொலிவிழந்த மன்னர் ஏராளம். இசையால் ராசமாபுர வீரன் எவனும் இவளை வென்றால், அவனுக்கே மணமுடித்து வையுங்கள்" என்று வைரம் நிறைந்த ஐநூறு பெட்டிகளும் இளம் பேடிகள் மூன்றும் சீதனம் கொடுத்தான். வீடு திரும்பிய சீதத்தன், வல்லோரையும் வானோரையும் தத்தையுடன் போட்டியிட அழைத்தான். தத்தையை வெல்லத் துணிந்த சீவகனைத் தடுத்தக் கந்துக்கடன், "கட்டியங்காரன் கேடு செய்வான்" என்றான். அஞ்சாத சீவகன், விலைவரம்பறிதலில்லா வெண்டுகிலுடுத்து வெளிப்போந்தான். அவனைக் கண்ட அளவிலே காதல் கொண்ட தத்தை, கலையறிவைச் சோதிக்கப் பல்வகை யாழினை முன்வைத்தாள். ஒவ்வொன்றன் திறம் சொல்லி மறுவற்ற யாழெடுத்து விரலாற்றாடவி விரவப்பாடினான் சீவகன். அவன் இசையில் மயங்கி, பாடுவாளாய்த் தொடங்கிய தத்தை பாடாது தோற்றாள். அலையன்ன காதலொடு மலையன்ன மாலையொடு வந்தாளை விழுங்குவானாய் நோக்கினான் சீவகன். பெரும் காமத்தீயால் அவசமுற்ற தத்தை, சீவகனே வென்றானென்றாள். கட்டியங்காரன் புழுங்கிப் போர்தொடுத்தான். சிங்கமென வெகுண்டான் சீவகன். "என் பொருட்டு இத்துன்பமோ?" என்று பதறிய தத்தையை அணைத்து, "கலங்காதே, ஒரு கையால் உனையணைத்து மறு கையால் பகை வெல்வேன்" என்றான். தம்பி நந்தட்டனுடன் இணைந்துப் பகைவரை விரட்டியடித்தான். பின்னர் நெய் சொரிந்த வேள்வித்தீ முன் தத்தையை மணந்தான்.

3. குணமாலை: வணிகன் குபேரமித்திரனின் அழகு மகளிர் குணமாலை, சுரமஞ்சரி இருவரும் நறுமணச் சுண்ணமிடிப்பதில் வல்லவர்கள். எவர் சுண்ணம் சிறந்ததென்று போட்டி வர, இதைத் தீர்க்க வல்லானென்ற தோழியர் சொற்படிச் சீவகனிடம் சென்றனர். கண்டவுடனே காதல் கொண்டனர். குணமாலையின் சுண்ணம் சாலச் சிறப்புடைத்து என்ற சீவகனிடம், அதை மெய்ப்பிக்கச் சொன்னார்கள். சோலைச் சுரும்புகள், தேனீக்கள், வண்டுகள் மற்றும் ஞிமிறுகளை அழைத்து இருவரின் சுண்ணப்பொடிகளையும் காற்றில் தூவினான் சீவகன். உடனே அவை குணமாலையின் சுண்ணத்தைத் தேடி மொய்த்தன. சுரமையின் சுண்ணத்தில் மகரந்தக்குறை புலப்பட்டது. தோற்ற சுரமை, இனி ஆடவரே தேவையில்லை என்று பெண்களுடன் வாழ்ந்தாள். வெட்கத்தால் ஓடிய குணமாலையை ஒரு மதயானை துரத்த, மலைமேற் பாயும் மின்போற் பாய்ந்து யானையை அடக்கினான் சீவகன். அவனது வீரம் கண்ட குணமாலையின் மனதில் கடல்நீர் போல் பெருகியது காதல். தன் எண்ணத்தை ஒரு கிளியிடம் சொல்லித் தூதனுப்பினாள். சீவகனும் கிளியிடம் தன் சம்மதத்தைத் தெரிவித்தான். மணமுடித்த சீவகனும் குணமாலையும் ஊடிக்கூடி குறையா இன்பக்கடலுள் அழுந்தினர். இடையில் மதயானை அரசயானை என்று தெரியவந்து, சீவகன் மேல் அரசகுற்றம் சுமத்தினான் கட்டியங்காரன். கட்டியங்காரனைக் கொல்ல வெகுண்ட சீவகனை அவனுடைய தாய் தடுத்தாள். ஒரு விஞ்சகன் சீவகனை எடுத்துச்சென்று விண்ணகத்தே மறைத்தான். சீவகனைக் காணாத கட்டியங்காரனின் ஆட்கள், இறந்து கிடந்த ஒருவனுக்கு சீவகன் போல் அலங்காரமிட்டு, சீவகனைக் கொன்றதாகச் சொன்னார்கள்.

4. பதுமை: விஞ்சையுலக அரசவையில் தேசிகப்பாவை எனும் நாடகப்பெண் சீவகனைக் கண்டதும் மையல் கொண்டாள். இவனை அடையவேண்டுமே என்று புலம்பினாள். ஆனால் சீவகன் பிடிப்பில்லாது மண்ணுலக நினைவில் வாழ்ந்திருந்தான். மன்னன் மகள் பதுமையை, தோழியரோடு சோலையில் விளையாடிய வேளையில், பாம்பொன்று தீண்டியது. மயங்கி விழுந்த பதுமையைக் கண்டு அலறிய தோழிகள் மன்னரிடம் செய்தி சொல்லிப் பதறினார்கள். மருந்து பல கொடுத்தும் நஞ்சிறங்காதது கண்டு கலங்கிய மன்னன் சீவகனை அழைத்து, "என் மகள் பால் அருள் செய்தி" என்றான். பதுமையின் முடியில் மருந்தைத் தேய்த்து நஞ்சை இறங்கச் செய்தான் சீவகன். உறங்கினார் எழுமாப்போல எழுந்த பதுமை, முன் நின்ற சீவகனைக் கண்டு நாணி ஓடினாள். சோலையில் அன்று மாலை பதுமையைக் கண்ட சீவகன், 'தேவமகளோ இயக்கியோ இவள் யார்தாமென்று' மயங்கி அவள் கூந்தலில் மலர் தைத்தான். காதல் வெள்ளத்தில் நாணம் புல்லாய்ச் சாய, பதுமையும் உடல் சிலிர்த்து அவனைத் தழுவினாள். உடனே அரசன் இருவருக்கும் மணமுடித்தான். பதுமையுடன் உறவாடித் திளைத்த சீவகன் ஒரு நாள் சோலையில் இளைப்பாறுகையில், தேசிகப்பாவையைக் கண்டு மயங்கினான். முன் கொண்ட ஆவலால் தேசிகப்பாவையும் மயங்க, இருவரும் கூடிக் களித்தார்கள். பிறகு யாரிடமும் சொல்லாமல் வேறு நாடு சென்றான் சீவகன். அவன் புணர்ந்த பெண்கள் கலங்கினார்கள். பின், மருவுங்காலத்து மகிழ்ந்தார் பிரியுங்காலத்து பேதுறுதல் மடமையென்று தெளிந்தார்கள்.

5. கேமசரி: வழியிலொரு தவப்பள்ளியைக் கண்ட சீவகன், ஆங்கிருந்தோரிடம் தன் கதையைச் சொன்னான். "குருதியாற் கறைபட்ட வெண்துகிற் குருதியாற் தூய்மையாமோ? புலனடக்க நெறி அறி" என்று அவர்கள் வல்லினம் மிக மொழிந்தனர். "அப்படியே செய்தாற் போனது" என்ற சீவகன் அவசரமாக அங்கிருந்து நகர்ந்து எதிரே தென்பட்ட ஒரு தெய்வத்தைக் கண்டு,
    காதலா லெண்வினையும் கழிபவென்றி அக்காதல்
    ஆதலா லெண்வினையும் கழியாவென்றும் அறைதியாற்
    போதுலா தேன்றுளித்துப் பொழிந்துவண்டு திவண்டுலாம்
    கோதைதாழ் பூம்பிண்டிக் கோமானின்னைத் தொழுதேனே!
என்று அழகு தமிழில் புலம்பி, தக்கநாடு சேர்ந்தான். அந்நாட்டில் சுபத்திரன் மகள் கேமசரி பேரழகி எனும் கர்வமுடையாள். "யாரைக் கண்டு நாணுகிறாளோ அவனையே மணப்பாள்" என்று நிமித்தகர் சொன்னதால், மகளுக்கேற்ற மணமகனுக்காகக் காத்திருந்தான் சுபத்திரன். அவ்வழி வந்த சீவகனைக் கண்ட கேமசரி, நாணமுற்றாள். சீவகனும் தன் உள்ளத்தே பெருகியக் காதல் வெள்ளத்தைக் கண்ணிற் கொட்டினான். உடனே சுபத்திரன் இருவருக்கும் மணமுடித்தான். சீவகனும் கேமசரியும் வேறு வழியிலாதுக் கூடி மகிழ்ந்தனர். துயில் விழித்த கேமசரி, சீவகனைக் காணாது பதறினாள். அவளைப் பிரிந்த சீவகன், வழியில் கண்ட ஏழைக்குத் தன் பொருளையெல்லாம் வழங்கி, "கள்ளும் ஊனும் காமமும் தீங்கு; தானமும் ஈரமும் தவமும் பாங்கு" என்று சொல்லிப் போந்தான்.

6. கனகமாலை: காட்டு வழியே நடந்த சீவகன் ஏமமாபுர நாட்டையடைந்தான். மன்னன் தடமித்தன் தன் மகன்களுக்கு கல்வி கேள்வி வழங்க, சீவகனைப் பணித்தான். மன்னர் மகள் கனகமாலை சீவகனைக் கண்டு காமவேட்கைப் பெருகி மெலிந்தாள். நிலையறிந்த மன்னன் சீவகனையழைத்து, "களிறனைய தோன்றலே, என் மகளை ஏற்றுக்கொள்ளுதி" என்று கனகமாலையை அவனுக்கு மணமுடித்த்தான். சீவகனும் கனகமாலையுடன் வழக்கமெனக் கூடிக்களித்தான்.

    இவ்வண்ணம் சீவகன் இடர்பட்டிருக்க, ராசமாபுரத்தில் தனித்திருந்த காந்தருவதத்தை, தான் முன்பு கற்ற மதிமுகமென்னும் வித்தை வழியாக, 'கவலையின்றி சீவகன் அலையவும் நான் கைவளை தொலையவும் இஃதென்ன பேதமை!' என, சீவகனின் திருவிளையாடல்களைத் தொடர்ந்து வந்தாள். ராசமாபுரக் காவலர்கள் சீவகன் இறந்தானென அறிவித்தது கேட்டு சீவகனின் தம்பி நந்தட்டன் தத்தையை அணுகி, மூன்று வில் தொலைவில் நின்று வணங்கினான். "கணவன் இறந்தானேல் எரிகின்ற தழலுள் மூழ்குதல் கற்புடை மகளிர் கடனன்றோ? இவ்வாறு அலங்காரம் அணிவது முறையோ?" என்று பணிவுடன் கேட்டான். "அண்ணல் இன்னல் காணுதி! கணத்தொரு கன்னியொடு மணவின்பம் துய்க்கையில் யாம் வாடுவதெற்றுக்கு?" என்ற காந்தருவதத்தை, மதிமுக வித்தையினால் சீவகன் கனகமாலையைக் கூடிக் கொண்டிருப்பதைக் காட்டினாள். இலவசக் காட்சி கண்ட தம்பி நந்தட்டன் குறுகி, அண்ணலைக் காண்பேன் என்றான். தத்தையும் தன் வித்தையினால் அவனை ஏமமாபுரம் புகச் செய்தாள். சீவகனைக் கண்டதும் பாசம் பொங்க கண்ணீருகுத்துக் கைகூப்பித் தொழுது விழுந்தான் நந்தட்டன். வீழ்ந்தவனை நிறுத்தி மும்முறை மார்புடன் தழுவிப் பிரிவுநோய் தீர்த்தான் சீவகன். மன்னனிடமும் கனகமாலையிடமும் தன் கதையைச் சொல்லி, கட்டியங்காரனை அழிக்க வேண்டிய அவசியத்தைச் சொன்னான். மன்னன் வழங்கிய நால்வகைச் சேனையுடன் சகோதரர்கள் ராசமாபுரத்துக்குத் திரும்பினார்கள். தெய்வத்தாற் பிழைத்தான் சீவகன் எனப் பறைசாற்றினார்கள். தெய்வம் தவறியதைத் தான் முடிப்பதாகச் சூளூரைத்தான் கட்டியங்காரன்.

7. விமலை: கட்டியங்காரனைக் கொல்ல இதுவே தருணமென வீராவேசமூட்டினாள் விசயா. அன்னையின் துயர் அறுக்கவும் மக்களின் நலம் பெருக்கவும் கட்டியங்காரனைக் கொல்லச் சபதமிட்ட சீவகன், போராடும் தோழர் தேடி நகரத்துள் போந்தான். அங்கே ஒரு அழகி முத்து வடங்கள் கொங்கையைப் புடைப்ப மேகலையும் சிலம்பும் புலம்பப் பந்தாடிக் கொண்டிருந்தாள். பந்து தெருவில் விழுந்தோடியது. நெற்றிச்சந்தனமும் மார்பின் குங்குமமும் பந்தாடிய வியர்வையிற் கரையும் வானவில் போலுருக, துகில் நெகிழ்ந்து மேகலை தோன்ற, வீழ்ந்த பந்தின் விழி தொடர்ந்தாள். வீதியில் வந்த சீவகன் தோற்றம் கண்டு காமுற்றாள். அவள் தோற்றம் கண்டு சீவகனும் வேட்கை தலைக்கேற்பட்டு, "இவளைக் கூடியன்றிக் கணப்பொழுதேனும் வாழ்வேனோ?" என்று புலம்பினான். விமலையின் தந்தை சாகரதத்தன் அன்று ஆறு கோடிப்பொன் வணிகம் செய்தான். 'நின் மகளுக்குரியவர் தோன்றும் நாளில் நின் பொருளெல்லாம் விற்கும்' என்று முன்னர் அசரீரி சொன்னது நினைவுக்கு வந்து, சீவகனைக் கண்டு மருகன் வந்தானென்றே மகிழ்ந்தான். விமலையை மணமுடித்து வைத்தான். விமலையுடன் கூடி மகிழ்ந்திருந்த சீவகன், தான் நகர் வந்த காரணம் நினைவுக்கு வர, 'அட, மறந்தேனே!' என்று மீண்டும் தோழர் தேடிப் போந்தான்.

8. சுரமஞ்சரி: சோலையிற் பதுங்கியிருந்த தோழரைச் சந்தித்து, மணவினை விவரம் சொன்னான் சீவகன். தோழர்கள் வியந்து, "புக்கவிடமெலாம் புதுமணம் செய்தவா, இங்கே சுரமை என்றொரு அழகி ஆண்களைக் காணவும் ஒருப்படாது உள்ளாள். உன் வல்லபம் அவளை வெல்லுமோ?" என்று சீண்டினர். "சுரமையை வயப்படுத்தத் தவறினால் அன்பில்லா மங்கையரைத் தீண்டிய தீயோனாவேன்" என்று சூளுரைத்து, ஒரு முதிய அந்தணன் வேடத்தில் சுரமையகம் ஏகினான் சீவகன். முதிய அந்தணர் மேல் இரக்கங்கொண்டு சுரமையைக் காண அனுமதித்தனர் தோழியர். மயிலன்ன சுரமையும் முதியோன் வேடத்திலிருந்த சீவகனும் சந்தநடையில், 'தன்ன-நன தன்ன-நன தான-நன தான' என்ற மெட்டுக்கேற்ப, பின்வருமாறு உரையாடினர்:
    வந்தவர வென்னையென வாட்கண்மட வாய்கேள்
    சிந்தைநலி கின்றதிரு நீர்க்குமரி யாட
    அந்தில்லதி னாயபயன் என்னைமொழி கென்றாள்.
    முந்திநலி கின்றமுது மூப்பொழியும் என்றான்.

இதற்கிடையில் தோழியர் வீணையிசைக்க, தன்னை மறந்த சீவகன் தமிழ்ப்பண் பாடினான். அவன் குரலில் மயங்கி, "சீவகன் ஒருவனே இவ்வண்ணம் புவி நிற்கவும் அசையவும் பாட முடியும். முதியவரே, நீவிர் யார்?" என்று சுரமையும் தோழியரும் வினவினர். "நான் சிரித்துப் பழகிக் கருத்தைக் கவரும் ரசிகன்" என்று புன்னகையுடன் அகன்றான் சீவகன். மறுநாள் காமன் கோட்டத்திற்குச் சென்ற சுரமை, "என் மனங்கவர்ந்தவன் சீவகன் மட்டுமே. சுண்ணத்திற் குறை கண்டதாற் கோபத்தில் நான் ஒதுங்கினாலும், அவனே என் காதலன். அவனை என்னிடம் சேர்த்தால் என் செல்வமெல்லாம் தருவேன் காமனாரே" என்று உளமாற வேண்டினாள். முன்னேற்பாட்டின்படி அங்கே ஒளிந்திருந்த சீவகனின் தோழன், "கன்னிகையே, நீ சீவகனைக் காண்பாய். அவன் உன்னவன்" என்று குரல்கூட்டிச் சொன்னான். காமன் வரம் கொடுத்த களிப்பில் திரும்பிய சுரமஞ்சரி, வழியில் சீவகனைக் கண்டாள். உடனே இருவரும் கூடிக்களித்தனர். பின் சீவகன் அவளையணைத்து, "நின்னை மணப்பேன்" என்றான். மறுநாள் சுரமையின் பெற்றோர் ஒப்ப இருவரும் மணந்தார்கள்.

    சுரமையும் சீவகனும் களித்திருக்கையில் தோழர்கள் அண்டை நாடுகளின் நட்பைப் பெற்றுத் திரும்பினர். கட்டியங்காரனைப் போருக்கழைத்தான் சீவகன். முரசங்களும் சங்குகளும் கொம்புகளும் பம்பைகளும் ஒலிக்க, கடல்முழக்கத்தை ஒத்திருந்தது போர்க்கள ஓசை. கட்டியங்காரன் தாமரை வடிவில படை வகுத்து வந்தான். சீவகனும் தோழர்களும் நந்தட்டனும் நட்புநாட்டுச் சேனைகளுடன் கட்டியங்காரன் சேனையைக் கொன்றொழித்தனர். சீவகனும் கட்டியங்காரனும் நீண்டு பொருதார்கள். முடிவில் சீவகன் வென்றான். கட்டியங்காரன் மாண்டான். விசயாவின் மனம் குளிர்ந்தது.

தோழரும் தம்பியும் தாயும் சூழ, நன்னாளில் மன்னனாய் முடிசூடிக் கொண்ட சீவகன், நந்தட்டனிடம் தன் மனைவியர் எண்மரையும் அழைத்து வரச் சொன்னான். பிரிவினால் துன்புற்றிருந்த எண்மரும் மன்னர் கோலத்தில் சீவகனைக் கண்டு மகிழ்ச்சி கொண்டனர். நட்பு நாட்டரசன் கோவிந்தன் தன் மகள் இலக்கணையை சீவகனுக்கு நன்னாளில் மணமுடித்து வைத்தான். தான் மணந்தவரையெல்லாம் அரசியராக்கினான் சீவகன். சீவகன் ஆட்சியில் மாதம் மும்மாரிப் பொழிந்தது. மக்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தார்கள். கல்வியும் செல்வமும் கொழித்தது.

விசயா சீவகன் பிறந்த இடுகாட்டை அறச்சாலையாக்கினாள். அங்கே தனக்குதவி செய்த காட்டுத் தெய்வத்துக்கொரு கோட்டம் கட்டினாள். "எல்லோரும் இன்புற்றிருங்கள்" என்று வாழ்த்தித் துறவறம் பூண்டாள்.

பல ஆண்டுகள் ஆட்சி புரிந்து மக்களன்பைப் பெற்ற சீவகன், மெய்ப்பொருள் எதுவென ஞானத்தாலுணர்ந்தான். கந்துக்கடனை அரசனாக்கி, நந்தட்டனை இளவரசாக்கினான். தன் கடமை முடிந்ததெனக் கருதித் துறவறம் பூண்டான். சீவகனைத் தொடர்ந்து மனைவியரும் துறவறம் பூண்டனர். சீவகனும் தேவியரும் சமணப்பெருமானைத் துதித்து வீடு பெற்றனர்.

சீவகனின் சாகசங்களைச் செம்மொழியில் படித்ததும் சில கேள்விகள் தோன்றின:

1. தமிழ்நாட்டுக்கும் இந்தக் கதைக்கும் துளிக்கூடத் தொடர்பில்லை. இதை எப்படித் தமிழ்க்காப்பியமாக ஏற்றார்கள்? காவிரி பாயும் ஏமாங்கத நாடு என்று ஒரு ஆறுதலுக்காக எழுதியிருக்கலாமே? ஐந்தில் தொன்மையான சீசி மட்டுமே கிளைக்கதைகள், சாகசங்கள், மர்மங்கள், போர், மனித அமனித நிலைகள், இடுகாடு, காதல், சோகம், ஏமாற்று, அநீதி, அறந்தேடல் என்று பலவகைக் காப்பியச் சாதனங்கள் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இதை ஏன் பாட நூல்களில் எளிமைப்படுத்தி முன்வைக்கவில்லை? தேரா மன்னாவுக்கு அளித்த சலுகைகள் தேவர் மொழிக்குத் தரவில்லையே? சுவாரசியமாக இருந்திருக்குமே?

2. கணவன் சிதையில் கற்புடை மனைவி சேரும் அவசியத்தை நைசாகச் சேர்த்திருக்கிறாரே திருத்தக்கதேவர்? கற்பின் சின்னம் சொன்ன அதே வீச்சில், அசந்தால் 'கூடிக்களிப்புறு' சீவகனை, ஒரு காப்பிய நாயகனை, ஏன் அப்படிச் சித்தரித்தார் தேவர்? அந்தக் காலப் பெண்கள் என்ன லேசா? சீவகன் கற்புடையவனா? ஒழுக்கம் கெட்டவனா? தத்தையின் மதிமுக (கட்சிப் பெயர் போல இல்லை?) வித்தை பற்றி விரிவாக வருமென்று எதிர்பார்த்தேன். கால/பரிமாணப் பயணம் பற்றிக் கோடிட்டு மறந்துவிட்டாரே? காமக்களியாட்ட முறைகளும், போர் முறைகளும், தகவல் தொடர்பு முறைகளும், மத இன மரபு நெறிகளும் (பாப்பாரப் பாம்பு என்கிறார் ஒரு இடத்தில்), அரசியல் தந்திரங்களும் விவரமாகச் சொல்லியிருக்கும் திருத்தக்கதேவரின் பின்னணி என்ன? யாரிவர்? மெத்தப் படித்தவரா? அரச பரம்பரையா? காப்பியப் புலவர்கள் தங்களைப் பற்றி ஏன் விரிவாகச் சொல்வதில்லை? தேவரின் கற்பனையும் உவமைகளும் சொல்லாட்சியும், அவரைக் கட்டித்தழுவச் சொல்கிறது. 'விலைவரம்பறிதலில்லா வெண்டுகிலுடுத்து வெளிப்போந்தான், விரலாற்றாடவி விரவப்பாடினான்' என்று வேகமாகப் பிழையில்லாமல் சொல்ல முடியுமா?

3. 'எட்டுக்கு மேல் எட்டாதிருப்பான்' சீவகன் என்று நினைத்தால், ஒன்பதாவது திருமணமும் செய்து வைத்திருக்கிறாரே? தேவர் படித்தது சுருளிராஜக் கணக்கா? இதில் பாருங்கள், கோவிந்தை திருமணத்தில் கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. அரச மரபில் வந்தவர்கள் முதல் திருமணத்தை அரச குடும்பத்தில் தான் முடிக்க வேண்டுமாம். கோவிந்தை வணிக மரபு, சீவகனோ அரச மரபு. அதனால் சீவகன் 1) தன் நண்பன் பதுமுகக் குமரனிடம் கோவிந்தையைத் திருமணம் மட்டும் செய்யச் சொல்லிவிட்டு, தான் அவளுடன் கூடிக்களித்தான்; அல்லது, 2) பதுமுகக் குமரன் என்ற வணிக மரபுப் பெயரை மாற்றிக் கொண்டு கோவிந்தையை மணந்தான். பெயர் மாற்றமென்று முதலில் நினைத்தேன். எட்டுத் திருமண ஆசி பலித்தது என்று கொண்டால், முதல் திருமணம் தில்லுமுல்லா? பின் கதையில் பதுமுகக் குமரனும் வருவதால், சீவகன் கோவிந்தை திருமணச் சிக்கல் எப்படித் தீர்வானதென்று என்னால் கோனாருரை இல்லாமல் புரிந்து கொள்ள முடியவில்லை. சரியான விவரம் தெரிந்தால் சொல்வீர்களா?

4. மாயாஜாலம், மங்கைகள் நடனம், எட்டு காதலிகள், ஒன்பது மனைவிகள், போதாத குறைக்கு இரண்டு கூடல் பெண்கள், வீர வசனம், கற்பழிப்பு, மதயானை அடக்கம், வாட்போர், மாறுவேடம், தாய்ப்பாசம், குடும்பப்பாசம், கனவு, இசை - இந்த அரசக்கதை மசாலாவை எம்ஜிஆர் எப்படி விட்டுவைத்தார்? இது ஏன் திரைப்படமாகவில்லை? (ஒரு வேளை எனக்குத் தெரியாமல் இந்தப் படம் வந்திருந்தால் சொல்லுங்கள். உடனே பார்த்தாக வேண்டும்). எந்திரனைப் பீச்சாங்கையில் மடக்குமளவுக்குப் பிரம்மாண்டமாகப் படமெடுக்க வேண்டும் என்று கமலகாசன் துடிப்பதாகப் படித்தேன். யாராவது சீசி என்று அவர் காதில் ஓதுவார்களா? கமலகாசனுக்கு ராஜபார்ட் பொருந்தும். மன்மதலீலை பார்ட் 2 பண்ணவும் ஒரு வாய்ப்பு. சூபர் ஹிட்டுக்கான அத்தனை அம்சங்களும் கொண்ட இந்த இலவசக் கதையை யாராவது கமலகாசனை வைத்துத் திரைப்படமாக எடுப்பார்களா? கதை கூட முப்பது வருடங்களுக்கு முன், தானே எழுதியதாகக் கமலகாசன் சொல்லிக்கொள்ளலாம். தட்டிக்கேட்க நாதியில்லை.(படம் எடுத்தால் எனக்கொரு ஓசிப் பாஸ் கொடுக்க வேண்டுகிறேன்)

5. இந்தக் காப்பியமெல்லாம் இந்நாளில் யாராவது படிக்கிறார்களோ? பொறுமையாக இதுவரை படித்த உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்? வேண்டுமானால் குண்டலகேசி பற்றி எழுதட்டுமா?

33 கருத்துகள்:

 1. அதானே...எம் ஜி ஆர் எப்படி விட்டு வைத்தார்?
  இலவசக் காட்சி, உங்கள் கருத்தைக் கவரும் ரசிகன் என்றெல்லாம் எழுதி கருத்தைக் கவர்ந்து விட்டீர்கள். பள்ளியில் கூட இப்படி நான் படித்ததில்லை. கடைசியில் எங்கே ஐந்து மார்க், பத்து மார்க் கேள்வி காணப் படுமோ என்ற பயத்துடனேயே படித்தேன்!

  பதிலளிநீக்கு
 2. அட்டகாசம் அப்பாஜி!
  அஷ்ட கல்யாண ஆசி பெற்ற சீவகனின் கதை பிரமாதம். குண்டலகேசி பற்றியும் எழுதுங்கள்.
  மதிமுக - நான் கூட வைக்கோ கட்சி போல் இருக்கேன்னு முதல் தடவை வரும்போதே நினைத்தேன். மதிகெட்டவன். ;-)
  மதிக்கும் நமக்கும் தான் வெகுதூரம் ஆயிற்றே! வெண்மதின்னா நிலாவா சார்!

  பதிலளிநீக்கு
 3. முழுசாக எடுக்கவில்லையே தவிர ஆங்காங்கே பிய்த்து நிறையத் தமிழ்ப் படங்கள் வந்திருப்பது போல்தன் தெரிகிறது..இதைத் தவிர நான் வேறு சில பின் நவீனத்துவக் கூறுகளையும்[!]கவனித்தேன்.பறக்கும் தட்டு,ஏலியன்ஸ்,லெஸ்பியன் [சுரமை]தொலைகாட்சி எல்லாம் வருகிறதே..கொஞ்சம் தோண்டி பார்த்தால் ஒரு பால் உறவும் கிடைக்கும் என்றே தோன்றுகிறது.[சீதனமாய் ராஜா மூன்று இளம் பேடிகளையும் கொடுப்பதால்]இவ்வளவும் பண்ணிவிட்டு கடைசியில் மெசேஜ் வேறு சொல்கிறார் தேவர்!

  பதிலளிநீக்கு
 4. சீவக சிந்தாமணி கதையை சுவையாக எழுதியிருக்கிறாய். எப்படி உன்னால் இதையெல்லாம் படிக்க முடிகிறது? உன் தமிழ் தாகம் என்னை ஆச்சர்யப்படுத்துகிறது.
  சீவக சிந்தாமணியில் தத்தைவிடு தூது பகுதியைத் தமிழ் பாடத்தில் படித்திருக்கிறேன். .
  கமலஹாசன் எந்திரனை மிஞ்ச ஆசைப் படுகிறாரா? ரஜினிகாந்தை என்றைக்கும் வசூலில் மிஞ்ச முடியாது. உடனே கமலஹாசன் ரசிகர்கள், நடிப்பில் அவரை மிஞ்ச முடியாது என்பார்கள். அளவுக்கு மிஞ்சினால் நடிப்பும் விஷம்தான்.

  பதிலளிநீக்கு
 5. பள்ளியில் படித்தது! இப்போது நன்றாக விளக்கமாக படித்தேன்! சிறப்பாக உள்ளது! இப்படிப்பட்டதை எழுதியதற்கே உங்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள்! மிக்க நன்றி!
  குண்டலகேசி பற்றியும் எழுதுங்கள்!

  பதிலளிநீக்கு
 6. முதலில் கை கொடுங்கள்! ஐம்பெரும் காப்பியங்களில் அகப்பொருள் முன் வைத்து படைக்கப்பட்ட ஒரு காவியத்தைப் பற்றி எழுதியதற்கு முதலில் என் நன்றி. இந்தக் காவியம் திருத்தக்கதேவருக்கு மதுரையம்பதியில் விடப்பட்ட சவாலில் தோன்றியதாகும். சமண முனிவரான தேவர் காமநூல் பாட இயலாது என்று இகழ்ந்த படியால் அவர்தம் குருநாதர் தந்த ஊக்கத்தில் இதை எழுதினார்.
  நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. தமிழ்நாட்டுக்கும் இந்தக் கதைக்கும் துளிக்கூடத் தொடர்பில்லை. இந்தக் காவியம் வாதீபசிம்ஹன் படைத்த க்ஷத்ர சூடாமணியை மூல நூலாய்க் கொண்டு இயற்றின படியால் சற்றே அந்நியத் தன்மை கலந்தே இருப்பதும் இதற்குக் காரணம். நிலையாமையை எல்லா நூல்களும் வழிமொழிய, ‘மூவாமுதலா உலகம்’ என்று தொடங்கும் முதல் பாடலே மாற்றுத் தொனியில் ஒலிக்கும். அதாவது, மூப்பும் பிறப்பும் இல்லாத உலகம் என்ற பொருளில்.
  மேலும், காப்பியங்கள் மேலான ஒழுக்க நெறி, மற்றும் இறை மாந்தர்கள் என்றிருக்க, காம மிகைக் காரணமாய்க் கூட சற்று தள்ளியே வைக்கப் பட்டிருக்கலாம்.
  ஆனாலும், அற்புதமான விருத்தப் பாடல்களால் ஆன இந்தக் காவியம், ,மொழியின் செறிவிற்கென்றே தமிழ் ஆர்வலர்களால் தவிர்க்க இயலாதது. அடுத்து, திருத்தக்க தேவரை பற்றி பார்ப்போம். இவர் சோழ குலத்தவர் என்றும், எட்டு நாட்களில் இந்தக் காவியம் பாடியதாயும், அறிகிறோம்..
  இளமையிலேயே துறவுமேற்கொண்ட இவர், எப்படி காமம் சொட்டும் கவி இயற்றினார் என்று அவர் துறவையே சந்தேகித்தபோது, பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பத்தை கட்டிக் கொண்ட வண்ணம், “என் துறவு உண்மையெனில், இதென்னை சுடாமல் போகட்டும் என்று தன்னை மெய்ப்பித்தார் என்றும் கர்ண பரம்பரை செய்திகள் உண்டு.
  எட்டு திருமணங்களும் எண்குணம் அடைந்தவன் சீவகன் என்ற குறியீடே என்பதும் உண்டு. சமூகத்தின் பல கூறுகளை உன்னிப்பாக கவனித்து அலசியிருக்கிறார் தி.த.தேவர். என்னுடைய ‘ஒன் அண்ட் தெ ஒன்லி’ கோவிந்தை கடை வீதி செல்ல மூன்றாம் அழைப்பும் விட்டுவிட்ட படியால் மீண்டும் தொடருகிறேன்.
  போவதற்கு முன், தமிழ்த் தாத்தா உ.வே.சா இல்லையேல் நமக்கு சீ.சி
  கிட்டியிருக்காது.. அவருக்கு ஒரு நமஸ்காரம்.. இதை எழுதத் தோன்றிய உங்களுக்கு ஒரு நமஸ்காரம்.

  பதிலளிநீக்கு
 7. தமிழ் காதல் கொண்டோர் நிச்சயம் படிக்கவேண்டிய காவியம்...அப்ப படிக்கவில்லையே எனும் வருத்ததை எற்படுத்தி ,இப்பவாது படிச்சோமேங்கிற சந்தோஷத்தையும் எற்படுத்தியது இந்த பதிவு..

  மோகன்ஜி யின் பின்னூட்டம் இன்னமும் ஆர்வத்தை தூண்டுகிறது...

  பதிலளிநீக்கு
 8. நன்றி ஸ்ரீராம்,RVS,bogan,geetha santhanam,எஸ்.கே, மோகன்ஜி,பத்மநாபன்,...

  பதிலளிநீக்கு
 9. எனக்கும் அப்படித் தோன்றியது bogan. தேவரின் கற்பனை அதிசயிக்க வைத்தது. இது தவிர, மனிதர் மருத்துவம், சூனியம், மந்திரம், போதைப் பொருள், சித்திரவதை, ஹெடரோசெக்ஸ் என்று நிறையத் தொட்டிருக்கிறார். ஒரு வேளை இவை எதுவுமே அந்தக் காலத்தில் புதுமை இல்லையோ?
  :-)
  >>>இவ்வளவும் பண்ணிவிட்டு கடைசியில் மெசேஜ் வேறு..

  பதிலளிநீக்கு
 10. சிரித்தேன், ஸ்ரீராம். அந்த நாளில் மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு படித்தது நினைவுக்கு வந்தது.
  >>>எங்கே ஐந்து மார்க், பத்து மார்க் கேள்வி காணப் படுமோ என்ற பயத்துடனேயே...

  பதிலளிநீக்கு
 11. தமிழார்வம் ஒரு காரணம், கைவசம் நேரம் நிறைய இருப்பது பெரிய காரணம் கீதா. போரடிக்கும் போது படிக்கலாமே என்று தான். (எந்திரன் பட வசூலில் வியாபார நுணுக்கம் அதிகம், ரஜினிகாந்த் தாக்கம் கம்மி என்று நினைக்கிறேன்.)

  பதிலளிநீக்கு
 12. சரியாப் பாருங்க RVS.. தடுக்கி விழுந்தா காதல், கல்யாணம், கூடல்.. ஆசின்னா இதல்லவோ?
  >>>அஷ்ட கல்யாண ஆசி பெற்ற சீவகனின் கதை

  பதிலளிநீக்கு
 13. வாங்க எஸ்.கே! ரொம்ப தேங்க்ஸ். (ஆமாம், சொன்ன மாதிரி ஆவியோட பேசினீகளா?)

  பதிலளிநீக்கு
 14. உண்மை பத்மநாபன். ஒரு நல்ல அகராதியோட படிச்சா தேவரின் தமிழ் ஓரளவுக்கு எளிமையா இருக்கு. தமிழ் விரும்புவோர் படிக்கக்கூடிய, படிக்க வேண்டிய நூல். 'காதல் வெள்ளத்தில் புல்லெனச் சரியும் நாணம்' - நூற்றுக்கணக்கில் நயமான வரிகள் இது போல்! விருப்பம் இருந்தால் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடுகளில் ஒன்றை வாங்கிப் படிக்யுங்கள். சில வெளியீடுகள் பொருளுடன் கிடைக்கின்றன. பார்த்து வாங்க வேண்டும் - அருஞ்சொற்பொருளுடன் (விளக்கம் இல்லாத) வெளியீடு படிக்க நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். பொருள் சொல்கிறவர்கள் பல இடங்களை ஒரேயடியாக அமுக்கி வாசித்து விடுகிறார்கள். தமிழ் நன்கறிந்த நாவலரும் 'முத்துத் தடம் கொங்கை விதிர்ப்ப மேகலை சிலம்பு புலம்பப் பந்தாடினாள்' என்பதை 'அழகிய மங்கை தெருவில் பந்து விளையாடினாள்' என்று நயத்தை மறைத்து பொருள் சொல்லியிருப்பது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 15. நன்றி மோகன்ஜி. இத்தனை விவரங்களா! இன்னும் இருந்தா சொல்லுங்க.
  வளையாபதி தவிர மிச்ச நாலு காப்பியங்களுமே ஒழுக்கச் சிக்கலைத் தான் அடிப்படையாக வைத்து எழுதப் பட்டிருக்கிறதென்று தோன்றுகிறது. சிலம்புக்கு எடுக்குற விழா போல மத்த நாலுக்கும் நாம ஏன் ஒண்ணும் செய்யுறதில்லை?
  தமிழ்க் காப்பியங்கள் எல்லாமே சமண மதம் சார்ந்ததாகவே இருப்பதையும் இப்பத் தான் கவனிச்சேன். முருகன் போல் தமிழ்க் கடவுள்களைக் காணோம்.
  கோவிந்தை திருமண விவரம் தெரிந்தால் சொல்லுங்கள். ஆவலாக இருக்கிறேன். சீவகன் தான் பதுமுகக் குமரனா? இல்லை பதுமுகக் குமரன் வேறே ஆளா? பதுமுகக் குமரன் வேறே ஆளாக இருந்தால் surrogate wedding பற்றி அந்த நாளில் சொல்லியிருக்கும் தேவரை எண்ணி எண்ணி வியக்கிறேன்!
  இரும்புக் கம்பம் செய்தி படிக்க நல்லா இருந்தாலும் பொருந்தவில்லை. காதல் காமம் மட்டுமில்லை, போர் மந்திர தந்திரம் பற்றி இத்தனை நுணுக்கமாக அனுபவமில்லாமல் எழுத முடியாது என்று நினைக்கிறேன். காப்பியப் புலவர்கள் பற்றி விவரங்கள் சேகரிக்காதது வருத்தமாக இருக்கிறது.
  இந்தக் காப்பியத்தில் சீவகனின் ஆசிரியராக வரும் பாத்திரம் திருத்தக்க தேவரென்று சந்தேகிக்கிறேன். அது பற்றி ஏதாவது தெரிந்தாலும் சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
 16. உவேசா அவர்களுக்குத் தமிழுலகம் என்றைக்கும் கடமைப் பட்டிருக்கிறது. இத்தனை காலம் தமிழ் பிழைத்தது அவரால் தான். சரியாகச் சொன்னீர்கள் மோகன்ஜி. உவேசா அவர்களின் தொண்டினைப் பற்றிய புத்தகம் ஒன்று படித்தேன். அவரே எழுதிய சரிதை இருப்பதாகச் சொல்கிறார்கள் - இந்தியா வந்தால் தேட வேண்டும்.
  (தமிழ்த் தாத்தாவைப் பற்றிக் கேட்ட போது, 'உவேசா தெரியாது, வஉசி தான் உவேசாங்கறியா?' என்றாள் என் தங்கை மகள். சரி, ஒருத்தரைப் பற்றியாவது தெரிந்தால் சரிதான் என்று சமாதானம் அடைந்தேன்.)

  பதிலளிநீக்கு
 17. அப்பாஜி! எனக்கு நினைவில் வரும் சிலவற்றை சொல்கிறேன்..
  இது போன்ற காப்பியங்களை, தமிழில் ஒரு தேடல் உணர்வும், எதிலும் சாராநிலையும் கொண்ட தமிழார்வலர்களுடன் விவாதித்து, சண்டையிட்டு ,பிற மொழி இலக்கியங்களில் ஒப்புமை போன்ற அலசலுடனுமே தமிழைத் துய்க்க வேண்டும்.
  ‘செந்தமிழும் நாப்பழக்கம்” மட்டுமல்ல, பழக்கம் உள்ளோருடன் குலவும் புழக்கத்திலும் வாழ்கிறது..

  சரி.. வாங்க பழகுவோம்!

  திருத்தக்க தேவர் சீவக சிந்தாமணி எழுதுமுன் அவருடைய ஆசிரியர் அந்த வழி ஓடிய நரியைப் பற்றி புனைவொன்றைக எழுதுமாறு பரீட்சை வைத்தாராம்.. நரி விருத்தம் என்ற அந்த நூலை பார்த்து திருப்தியுற்ற பின்னரே சீ.சி.க்கு ஒப்புதல் தந்து
  கடவுள் வாழ்த்தையும் எழுதித் தந்தாராம். திருவள்ளுவர் காலத்தவர் என்றும் தி.த.தேவரைக் கூறுவர்

  சீவக சிந்தாமணி 3,141 செய்யுட்களில் 2,700 தி.த.தேவராலும் மீதி அவரின் ஆசிரியராலும் மற்றொரு புலவராலும் இயற்றப் பெற்றவை
  என்பர். அவருடைய ஆசிரியர் மேலுள்ள குருபக்தியால் அன்னாரையே சீவகனின் குருவான ‘அச்சணந்தி’யாய் சித்தரித்திருக்கக் கூடும்.

  கோவிந்தையை பதுமுக குமாரர்கேன்றே ஏற்றுக் கொள்கிறான் சீவகன்.
  /..... வீரன் ஏற்றான்
  பாறு கொள் பருதி வைவேல் பதுமுக குமாரற்கு என்றே/

  பதுமுககுமாரன் கோவிந்தையிடம் பெரும் இன்பத்தைக் கூட
  கீழ்க் கண்ட வரிகளில் அசத்துகிறார்..

  /........ அலைத்தது காமன் சேனை
  அரு நுனை அம்பு மூழ்க
  முலைக் குவட்டு இடைப் பட்டு ஆற்றான்
  முத்து உக முயங்கினானே.

  கள் வாய் விரிந்த கழுநீர் பிணைந்து அன்ன வாகி
  வெள் வேல் மிளிர்ந்த நெடுங் கண் விரை நாறு கோதை
  முள்வாய் எயிற்று ஊறு அமுதம் முனியாது மாந்திக்
  கொள்ளாத இன்பக் கடல் பட்டனன் கோதை வேலான். /


  அர்த்தமா கேக்குறீங்க? போங்க..
  எனக்கு வெட்கமா இருக்காதா?!

  தி.த.தே. சமண சமயப் பற்றினால் மற்ற கோட்பாடுகளை மட்டம் தட்டியும் இருக்கிறார்., புத்தர், சிவபெருமான், திருமால், பிரமன் ஆகியோர் பற்றிய சமயச் செய்திகளை எல்லாம் கேலி செய்கிறார்.

  ஆச்சரியகரமாய் இவரின் நைந்து போன சுவடிகளை ஒரு சைவ மடம் பாதுகாத்து அதை உ.வே.சாமிநாத அய்யர் புதுப்பிக்க
  வேண்டியதாயிற்று.

  எனவே பிளாக் எழுதும் போது கவனமுடன் இருக்கவும்.எதிர்காலத்தில் நமக்கும் திருத்தக்க தேவர் நிலை வரலாம்.!

  “ஆம் பொருள்கள் ஆகும் அது யார்க்கும் அழிக்கொண்ணா
  போம்பொருள்கள் போகும்அவை பொறியின் வகைவண்ணம்..”

  விளையாடி இருக்கிறார் இல்லையா தி.த.தே?

  உ.வே.சா பற்றி ஒரு தொடர் பதிவே போடலாம்.. ‘என் சுய சரிதம் ‘
  என்ற அவரின் ஒரு அற்புதமான புத்தகம் உண்டு. என்னிடம் இருந்ததை ஒரு பிரபலத்திடம் தந்தேன். அங்கேயே தங்கி விட்டது.
  மீண்டும் சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 18. மோகன்ஜி, பின்றீங்க தலைவரே. (இதுக்காகவே இந்தியா வரும்போது ஹைதராபாக்கத்துக்கு ஒரு விசிட் அடிச்சுறுவோம். சங்கத் தமிழ் பேசுவோம், தங்க இடம் மட்டும் தா.)

  பதுமுகக் குமரன் இன்னும் விளங்கவில்லை - எதுவும் லேசுல ஏறாதுங்க இந்த மண்டைல. பதுமுகக் குமரன் சீவகனா, வேறே ஆளா?

  ஆறு மாசத்துக்கு மேலே ஆச்சு படிச்சு முடிக்க.. நிறைய கிளைப் பயணங்கள் செய்திருக்கிறார் தேவர். மையக்கதை மட்டுந்தான் எழுதினேன் - இதுவே வள வளனு ஆயிருச்சு. நீங்க சொல்றது போல் விவரங்கள் எல்லாம் பிரமிக்க வைக்கும் அளவுக்கு எழுதியிருக்கிறார். ஒரு சில இலம்பகங்கள் (இந்தச் சொல்லே எனக்குப் புதிது) தவிர, அனுபவம் இருப்பவர்கள் சுலபமாகப் புரிந்து கொள்ளும்படி தான் எழுதியிருக்கிறார். அதனால் தான் அவருக்கு காம அனுபவம் கிடையாது என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

  புரியலையே?
  >>>எனவே பிளாக் எழுதும் போது கவனமுடன் இருக்கவும்...

  பதிலளிநீக்கு
 19. மோகன்ஜி அவர்களுக்கு நெடுஞ்சாண் கிடை வணக்கம் ...அப்படியே தமிழ் திருநீறு கொஞ்சம் நெற்றியில் வைத்து விடுங்கள் ...
  ஓடி பொய் சீவக சிந்தாமணியை வாங்க சொல்லுது உங்க விளக்கம் ....

  அப்பாஜி ...மோகன்ஜி ப்ளாக் ல பாத்துக்கங்க சொன்னது ...அந்த கால கரையான் ஓலைகளை அரிச்சது மாதிரி ... இப்ப மென்பொருளில் வைரசும் வன்பொருளில் சாதீயமும் பற்றி சொல்லியிருப்பாரோ ?

  பதிலளிநீக்கு
 20. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 21. தமிழ்த் தாத்தா உ.வே.சா மாதிரி தமிழ் மாமா, தமிழ் அண்ணா என்று அப்பாஜியும் மோகன்ஜியும் பின்னி எடுக்குறீங்க. ஸ்ரீராம் சொன்னா மாதிரி படிக்கற காலத்துல மார்க்குக்காக படிச்சது. ஒருக்கால் "கா" மேட்டர் நிறைய இருக்கறதுனால அடக்கி வாசிக்க சொன்னங்க போலிருக்கு. அப்ப ஒன்னும் புரியலை. இப்ப நீங்க விளக்கமா சுருக்கமா சொல்லும்போது பிரமாதமா இருக்கு.
  எது என்னவோ உங்க ரெண்டு பேர் புண்ணியத்ல கொஞ்சம் நாங்களும் தெரிஞ்சிக்கிறோம். மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 22. நீங்க வேறே RVS! தமிழ் மாமா இல்லிங்க.. மாமாத் தமிழ். அது தான் என்னுது. (சார், ரூம் வேணுமா சார்? அலோ, ப்ரதர், ரூம் வேண்மா.. நீட்டா இருக்கும் சார்)

  எனக்கும் தமிழ்தாய்க்கும் லடாய்.

  பதிலளிநீக்கு
 23. அப்பாஜி!
  //இந்தியா வரும்போது ஹைதராபாக்கத்துக்கு ஒரு விசிட் அடிச்சுறுவோம். சங்கத் தமிழ் பேசுவோம், தங்க இடம் மட்டும் தா//
  ரசித்தேன் குறும்பரே!அவசியம் வாருங்கள்.
  என்னிடம் தங்க இடம் கேட்டுட்டு ஆர்.வீ.எஸ் கிட்ட 'ரூம் வேணுமா சார்? அலோ, ப்ரதர், ரூம் வேண்மா..'
  நல்லா இருக்கு முதலாளி.. நல்லா இருக்கு!
  நாம் அனைவரும் கண்டிப்பாக
  சந்தித்துக் கொள்ள வேண்டும். ஒரு
  ப்ரோக்ராம் போடுவோம்.
  பத்து ஜி! நேரில் சந்திக்கும் போது திரு நீறு இடுவதென்ன? வேப்பிலையே அடிக்கிறேன் போதுமா?
  ஆர்.வீ.எஸ்! எனக்கொரு நண்பேன் இருக்கான். அவனுக்கு "கா" மேட்டர்
  வர்ற இலக்கிய பாடல்கள் மட்டும் தமிழிலும், வடமொழியிலும் சொல்லணும். ரசிகமணியாய்க் கேட்பான். இலக்கியத்துக்கு மீண்டும் பேச்சு திரும்பினால்,
  "சங்கத்த கலைங்கடா'என்று கிளம்பிடுவான். ஏதோ தமிழ் படிச்சா சரி தானே?

  பதிலளிநீக்கு
 24. ஐம்பெருங்காப்பியத்தில், சிலப்பதிகாரம் மட்டும்தான் கொஞ்சம் தெரியும். சீவகசிந்தாமணி இந்த நூல் எதை பற்றியது என்பதே இப்பொழுது உங்களாலதான் தெரிந்தது. இந்த கதை..... பேஷ், பேஷ் ரொம்ப நல்லா இருக்கு!?
  அழகு தமிழுக்காக பொருளோடு சில கதைகளை படிக்க விருப்பம் இருக்கிறது. அதில் இந்த கதையை தாராளமாக தள்ளி வைத்து விடலாம் என்று தோணி விட்டது.
  //சீவகன், வீடு பற்றிய சிந்தனையிலே உழன்று துறவறம் தழுவ எண்ணினான்.// கதையின் துவக்கத்தில் இதை படித்துவிட்டு பின் கதையை தொடர்ந்து படித்தபோது மிகவும் வேடிக்கையாக இருந்தது. அந்த காலத்துல பெண்களுக்கும், பெண்ணை பெத்தவங்களுக்கும் மூளையே கிடையாதா என்று கேட்கத் தோன்றது. பெண்ணையும் கொடுத்து, பெரும் சீதனத்தையும் கொடுத்து, போதாததுக்கு சீதனமா மூன்று பேடிகள் வேற!! திருக்குறள் எழுதின காலத்துலதான் இந்த நூலுமா? 'பண்பாடு' இந்த வார்த்தைக்கு அந்த காலத்துல என்ன அர்த்தம் இருந்திருக்கும்? மேலும் 'காதல்' என்பதற்கு என்ன அர்த்தம் இருந்திருக்கும்? தன் காதல் கணவனை எந்த பெண்ணாவது இன்னொருத்திக்கு விட்டு கொடுப்பாளா?
  சீவகன் குணமாலையை மணக்கும் தருவாயில், கட்டியங்காரனை கொல்ல வெகுண்ட போது, அது தக்க சமயமில்லை என்று அவன் தாய் தடுத்ததற்கு காரணம், அவள் கணவன் கூறியது போல், எட்டு பெண்களில் மீதி உள்ள பெண்களையும் அவன் மணந்து முடிக்க வேண்டும் என்பதற்காகவா? எல்லாம் முடித்து, இதில் மனைவி மார்களுடன் துறவறம் வேறு. இந்த துறவறத்தில் எல்லா மனைமார்களுக்கும் சம்மதம் இருந்திருக்குமா?

  எது எப்படியோ! உங்களுக்கு என் வாழ்த்துக்கள் அப்பாதுரை! இந்த நூலை எளிய தமிழில், அழகாக, உங்கள் பாணியில் எழுதி, இந்த நூலை பற்றி தெரிந்து கொள்ள உதவியதற்கு மிக்க நன்றி. 'மரணத்தை எண்ணி கலங்கிடும்.....' 'உங்கள் கருத்தை கவரும் ரசிகன்....' என்று அழகாக இடையில் புகுத்தி படிக்கும்போது ஒரு சுவாரசியத்தை உண்டாக்கி விட்டீர்கள். :)
  'குண்டலகேசி' நேரம் கிடைக்கும்பொழுது தயவு செய்து இந்த நூலை பற்றியும் எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 25. //காப்பியக்கதை அறியாத என் போன்ற ஞானஒளிகளுக்காக, இதோ மையக்கதை.//

  அது சரி, அதனாலேயே நான் படிக்கிறேன். அலுவல் வேலை முடிந்த பிறகு !

  பதிலளிநீக்கு
 26. பதிவு சீவகசிந்தாமணி.
  கேள்விப்பட்டதோடு சரி.கொஞ்சம் புரிந்துகொண்டேன்.என்றாலும் பழைய சம்பிரதாயங்கள் கோபப்பட வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 27. வாங்க meenakshi, சாய், ஹேமா.

  சாய் - படிச்சதும் சொல்லுங்க, ஸ்ரீராம் கேள்வி அனுப்பியிருக்காரு. எல்லாம் பத்து மதிப்பெண் கேள்விகள்.

  ஹேமா - உங்க கோபம் புரியுது. ஆணாதிக்கப் பழமையில் இன்னும் நிறைய வருத்தப்பட வேண்டியதிருக்குது. என்ன, சில சமயம் இதே நடத்தை தெய்வம் என்கிற பெயரில் அனுமதிக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் பாராட்டவும் படுகிறது.. அதற்கு என்ன சொல்வது! (ஆணாதிக்கப் பழமையா? இப்ப என்ன வாழுதுன்றாங்க எங்க வீட்ல :)

  meenakshi அய..யோ.. என்ன இப்டி ஆயிடுச்சே! என்னால ஒரு தமிழ்க்காப்பியம் படிக்கப் படாம ஒதுங்கிடுச்சே! கதை தானுங்களே, அதுல நல்லது கெட்டது பாவம் புண்ணியம்னு தீர்வைப் பாத்தா முடியுமா? இன்னொருக்கா சந்த நடையைப் படிச்சுப் பாருங்க. ஆமா, எட்டுப் பெண்களை மணந்த பகவான் க்ருஷ்ணர் கதை உங்களுக்குப் பிடிக்குமா? (காதலிகளைச் சொல்லவில்லை) படிக்குறப்ப நீங்க எப்படி.. இதே மாதிரி சுளிப்பீங்களா இல்லை பக்தி பரவசத்துல மெய் சிலிர்த்துப் போயிடுவீங்களா?

  பதிலளிநீக்கு
 28. குண்டலகேசியும் இதே மாதிரி இருக்குமா? (நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு ஆவலில்...)
  அதற்க்கும் மோகன்ஜி கமென்ட் அடித்து கலக்கவேண்டும்.... "கா" பதிவுகள் அப்படின்னு புது டைட்டில்ல ஒன்னு ஆரம்பிக்கவேண்டியதுதானே...
  மாமாத் தமிழ்.. யம்மாடியோவ்... என்னமா சரளமா வருது...(நா வேற ஒன்னும் சொல்லலை..) லடாய் ஆன தமிழ்த்தாயே இப்படி இருக்கும்போது அன்பா இருந்தா...

  பத்துஜிக்கு எப்போது விபூதி பூசி வேப்பிலை அடிக்கும் வைபவம் நடை பெறப் போகிறது.. அவசியம் அப்போது எனக்கும் அழைப்பு வைக்கவும். தவறாமல் கலந்து கொள்கிறேன். ரெண்டு கொத்து வேப்பிலை கொஞ்சம் திருநீறு என்மேலும் படட்டும்... நெல்லுக்கு பாய்ந்தது போக மிச்சம் கொஞ்சம் (ஃ )புல்லுக்கும்.. பாயட்டுமே...

  தமிழ் வாழ்க.. (இது தான் ஃபினிஷிங் டச்...) நன்றி..

  பதிலளிநீக்கு
 29. ஹஹஹாஹஹஹா.......! RVS. எவ்வளவு ஆசையா கேட்டிருக்கீங்க. கதையை கேட்டா காத்து போன பலூன் மாதிரி ஆயிடுவீங்க. நானும் குண்டலகேசி படித்ததில்லை. ஆனால் இந்த கதையின் முடிவுதான் 'மந்திரிகுமாரி' படக் கதையின் மையக்கருத்து என்பதை கேள்விபட்டிருக்கிறேன். 'மந்திரி குமாரி' படம் பார்த்திருக்கீங்களா? அந்த கதை ஞாபகம் இருக்கா?

  பதிலளிநீக்கு
 30. அதான் சொன்னேனே RVS, மாமாத்தமிழ் தான் எனக்கு வரும்.

  குண்டலகேசியா? (நான் ரொம்ப நாளா அது பட்சணம்னு நினைச்சிட்டிருந்தேன், தமிழ் படிக்க ஆரம்பிக்கற வரைக்கும்)

  பொஞ்சாதியைக் கொல்லப்போன புருசனைக் கொன்ன பொஞ்சாதியின் கதை. புரியுதா?

  இதுவும் வடநாட்டு இறக்குமதி. தமிழ்க்காப்பியம்னு சொல்லிக்கிட்டிருக்கோம். (காப்பி அடித்ததால் காப்பியம்னு பேரு என்று அப்புசாமி பாணியில் விளக்கம் கொடுக்க வேண்டியது தான்) ஐம்பெருங்காப்பியம்னு பேருக்கு ஒள ஒள... குண்டலகேசியும் வளையாபதியும் கிடைக்கவேயில்லையாம். நூறு இருநூறு பாட்டுங்களை வச்சுக்கிட்டு பெருங்காப்பியம்னு பஜனை செஞ்சுகிட்டு இருக்கோம். உள்ளங்கையில் எழுதிறலாம்னாலும், தெரிஞ்ச குண்டலகேசி கதை கொஞ்சம் புரட்சி தான்.

  பதிலளிநீக்கு
 31. ரைட் meenakshi
  மையக்கருத்தா தெரியாது.. ஆனா மந்திரிகுமாரி படம் குகே influenceனு சொல்லிக் கேட்டிருக்கேன். படம் பார்த்ததில்லை.

  பதிலளிநீக்கு
 32. மந்திரி குமாரி MGR. நடித்த படம் என்றாலும் இதில் அவர் இரண்டாவது ஹீரோதான். இந்த படத்தில் வரும் திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய இரண்டு பாடல்களும் சூப்பர் ஹிட். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் 'வாராய் நீ வாராய்' என்ற பாடலின் வரிகள் அவ்வளவு அற்புதமாக இருக்கும். கதை, வசனம் கருணாநிதி அவர்கள் எழுதியது. நான் மிகவும் ரசித்து பார்த்த படம் இது.

  பதிலளிநீக்கு
 33. //பொஞ்சாதியைக் கொல்லப்போன புருசனைக் கொன்ன பொஞ்சாதியின் கதை. புரியுதா? //
  குண்டலகேசியின் ஒன் லைனர் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. நன்றி.. மந்திரிகுமாரி நான் பார்த்ததில்லை. யாரவது இப்ப டிஜிடல் பிரிண்ட் போட்டால் பார்க்கலாம். இல்லைனா ஒரே ஒட்டடை சுத்தினது மாதிரி தெரியும்.

  பதிலளிநீக்கு