தீப்பெட்டி அட்டைகளைச் சேகரித்தது நினைவிருக்கிறதா? எளியவரின் தபால்தலை, தீப்பெட்டி அட்டை என்பேன்.
நண்பர் அடிபட்டு மருத்துவமனையிலிருந்தார் என்றேனே, சிகிச்சைக்குப் பின் ஒரு மாதமாக வீட்டிலிருக்கிறார். கழுத்தில் ஒன்றை மாட்டிக் கொண்டு நிதானமாகச் சுற்றிச்சுற்றிப் பார்க்க வேண்டிய நிலை. எனக்கும் வேறு வேலை இல்லையா? முடிந்த போதெல்லாம அருகிலிருக்கும் அவரைச் சந்திக்கும் போக்கில் அவர் வீட்டு வரவேற்பரையிலிருக்கும் coffee-table book ஒன்றைப் புரட்டிக் கொண்டிருப்பேன். அவர் குனியவோ திரும்பவோ முடியாமல் சொகுசு நாற்காலியில் என் எதிரே அமர்ந்து கொண்டு, இன்சூரன்சு இல்லாமல் இடித்துத் தள்ளியவனின் பரம்பரையைக் கலர் கலராகத் திட்டிக் கொண்டிருப்பார். ஒரு கையால் புத்தகம் புரட்டிப் படிக்க வேண்டிய நிலையை நினைத்து நான் இன்னும் சில கெட்ட வார்த்தைகளைப் போட்டுக் கொடுப்பேன். திட்டுப் படலம் நின்றதும், சில சமயம் அவரைக் கிண்டல் செய்வதற்காக அவர் பின்னால் நின்று கொண்டு அழைப்பேன். கழுத்தைத் திருப்பமுடியாமல் திட்டிக்கொண்டே நூற்றெண்பது டிகிரி திரும்புவார். திரும்பிய பின் இன்னும் திட்டுவார். நன்றாகப் பொழுது போனது. (ஹி..ஹி.. இரண்டாவது பதிவுங்க, ஸ்ரீராம்).
அவரைச் சந்திக்கத்தான் சென்றேன் என்றாலும், அந்த coffee-table book என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. தீப்பெட்டி அட்டைகளைப் பற்றிய பீமசேனன் சைஸ் புத்தகம். அத்தனை உலக நாடுகளிலிருந்தும் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்துச் சேகரித்தத் தீப்பெட்டி அட்டைகளின் படங்களை வெளியிட்டு, சமகால வரலாறு மற்றும் கலாசாரத்தைப் பற்றி எழுதியிருந்தார்கள். Fascinating. நாகேஷ் பாணியில், simply wonderful... hello? simply wonderful!
அவரைச் சந்திக்கத்தான் சென்றேன் என்றாலும், அந்த coffee-table book என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. தீப்பெட்டி அட்டைகளைப் பற்றிய பீமசேனன் சைஸ் புத்தகம். அத்தனை உலக நாடுகளிலிருந்தும் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்துச் சேகரித்தத் தீப்பெட்டி அட்டைகளின் படங்களை வெளியிட்டு, சமகால வரலாறு மற்றும் கலாசாரத்தைப் பற்றி எழுதியிருந்தார்கள். Fascinating. நாகேஷ் பாணியில், simply wonderful... hello? simply wonderful!
தீப்பெட்டி அட்டைப்படங்களில் தமிழ்நாட்டின் பங்கு பிரமிக்க வைத்தது. கேள்விப்படாத அல்லது கேள்வி மட்டுமே பட்டிருந்த ஊர்களின் பெயர்களைப் பார்த்தபோது, உள்ளம் முறையாகச் செய்த திருவாதிரைக் களி போல் நெகிழ்ந்து போனது. (எங்கள் வீட்டில் செய்த களியை அம்மா அந்தப்பக்கம் நகர்ந்ததும் எடுத்து யாருக்கும் அடிபடாதபடி வேலி ஓரமாக உருட்டி வைப்போம். நாங்கள் தான் அப்படியென்றால் பக்கத்து வீட்டிலும் அதே கதை. எங்கள் வீட்டுப் பொது வேலிச்சுவரின் தோற்றம்.)
தீப்பெட்டி அட்டைப்படங்கள் தான் சிவகாசியின் அச்சுத் தொழில் வளரக் காரணம் என்று புரிந்தது. குடிசைத் தொழில் என்று நிறைய படித்திருந்தாலும், முதல் முறையாக குடிசைத் தொழிலின் பரந்த பொருளாதார பாதிப்பைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. தீப்பெட்டி அட்டைப்படங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்தவற்றையொட்டி வடிவமைக்கப்பட்டிருந்தன. சுதந்திரப் போராட்டத்தை ஒட்டியும் சுதந்திர இந்தியாவின் முதல் வருடங்களைப் பற்றியும் தீப்பெட்டி அட்டைகள் வழியாக அறிந்துகொள்ள முடிந்தது. பூக்கள், விலங்குகள், பெண்கள், பறவைகள், திருவிழாக்கள், அரசியல், சமூகம், கடவுள் என்று விதவிதமாகத் தீப்பெட்டி அட்டைகள் கதை சொல்கின்றன.
அந்த நாளில் தீப்பெட்டி அட்டைகளால் இரண்டே உபயோகம் தான். 'மேச்சீஸ் விளையாடலாம்' என்று கிளம்பி பேந்தா கோலி, கிட்டிப்புள், மரக்குரங்கு விளையாட்டுக்களில் பணத்துக்குச் சமமாகப் பந்தயம் கட்டி விளையாடப் பயன்பட்டது. இரண்டாவது உபயோகம், புது நட்புக்களை வலுப்படுத்திக் கொள்வது. என்னிடம் 'லால் பகதூர் சாஸ்திரி மேச்சீஸ் இருக்கு, உன்னிடம் என்ன இருக்கு?' என்று சொல்லி நட்பு ஏற்படுத்திக்கொண்டு மழை நாட்களில் வீட்டுக்குள் பெரியவர்களின் சீட்டு விளையாட்டுக்கு இணையாக மேச்சீஸ் ட்ரேடிங்! ebayல் இன்றைக்கு நான்கு டாலர் வரை ஏலம் போகிறது தீப்பெட்டி அட்டை!
தீக்குச்சியை உலகுக்கு வழங்கிய நாடு - ஒன்று இரண்டு மூன்று... தெரியாவிட்டால், இதோ: சைனா. கிழக்கிலிருந்து மேற்கே போன கண்டுபிடிப்புகளுள் ஒன்று. இன்றைய தொழில்நுட்பங்களைப் பார்க்கும் பொழுது தீப்பெட்டியை மிகச்சாதாரணமாக எண்ணத் தோன்றும். ஆனால் இந்த எளிய தொழிலில் தமிழ்நாட்டு மக்கள் புகுத்திய புதுமை உலகக் கவனத்தை ஈர்த்தது. இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை ஸ்வீடன் நாடு தான் தீப்பெட்டித் தொழிலில் முன் நின்றது. 1920 வாக்கில் தொடங்கி, படிப்படியாக சிவகாசி தீப்பெட்டி ஏற்றுமதியில் முக்கிய அந்தஸ்தைப் பெற்றது. சிவகாசி வளர வளர தீப்பெட்டித் தொழிலில் ஸ்வீடன் நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்து ஏறக்குறைய அழிந்து போனது. சிவகாசி மற்றும் தமிழ்நாட்டுத் தீப்பெட்டி குடிசைத் தொழிற்சாலைகள் உலகமெங்கும் ஏற்றுமதி செய்தார்கள். அந்த நாளைய அவுட்சோர்சிங்? (சோறு தண்ணீர் போடாமல் தொழிலாளிகளைக் கொத்தடிமையாகச் சிறுவர்களையும் சேர்த்து வேலை வாங்கியதாகச் சொல்லப்படும் தீப்பெட்டித் தொழிற்சாலை முதலாளிகளைப் பற்றி ஒன்றும் எழுதக் காணோம்!).
ஒரு வருடத்துக்கு 243 பிலியன் தீக்குச்சிகள் சிவகாசியில் தயாராகின்றனவாம். (243,600,000,000. இது எத்தனை கோடி? கோடிக்கணக்குத் தெரிந்தவர்கள் உதவி! உதவி!) இவையத்தனையும் கைத்தொழிலாம். இதைத் தவிர இயந்திரம் உபயோகித்து கல்கத்தா போன்ற இடங்களில் தீக்குச்சிகள் தயாரிக்கிறார்களாம்.

தீப்பெட்டி அட்டை இன்றைக்கு இன்னொரு பெருமையை தமிழ்நாட்டுக்கு (சிவகாசிக்கு) வழங்கியிருக்கிறது. வண்ண அச்சுத்துறையில் உலகத்திலேயே இரண்டாவது இடத்தை சிவகாசி பெறுவதற்குக் காரணம் தீப்பெட்டி அட்டை அச்சுக்கலை தான். குடிசைத்தொழிலை ஆதரிக்க வேண்டும் என்று சொன்ன அரசியல்வாதி யார்? காந்தியா? (காந்தி அரசியல்வாதியா?). சொன்னவரையும் செய்து காட்டியவரையும் (சிவகாசி நாடார்கள்) கும்பிடுகிறேன்.
சிலத் தீப்பெட்டி அட்டைகளைப் பார்ப்போம்.













பீரங்கி அட்டை சேகரித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். வாளைப் பார்த்தால் வெண்டைக்காய் மாதிரி இல்லை?

தாயின் மணிக்கொடி கொஞ்சம் சிலிர்க்க வைக்கிறது. சுதந்திரத்துக்கு முந்தைய அட்டைகள் என்றாலும், நடுவில் இருப்பது கொடியைக் கொளுத்துவது போல் தோன்றுகிறது. அல்லது நாடே சுதந்திர வெறியில் தீப்பற்றி எரிகிறது என்ற பாலசந்தர் பாணி டைரக்சனா?


ரொட்டி, காபி என்ற மேல்நாட்டு இறக்குமதிகள் எந்த அளவுக்குப் பரவியிருக்கின்றன பாருங்கள். மேலையர் ஆதிக்கத்துக்கு முன் நாம் காபி குடித்தோமா? 'காபியைச் சீக்கிரம் கண்ணுல காட்டுறா' என்று காலையில் பொறுமையிழக்கும் என்னருமை அம்மா, உனக்கு இருபது சந்ததி மூதாதையர் காபியே குடிக்கவில்லை தெரியுமோ?


ஸ்ரீராம் ஸ்பெஷல்.

Matchbox Labels, Jane Smith
தீப்பெட்டி அட்டை சேகரித்த நாட்களின் வாசனையைக் கிளப்பி விட்டீர்கள்.நல்ல பதிவு.பூங்கொத்து.
பதிலளிநீக்குதுரை சார் - சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரை. அந்தக் காலத்தில் நூறு மாட்ச் படங்கள் சேர்த்து தெரு சிறார்களுக்கு நடுவே எங்க அண்ணன் வெற்றி நடை போட்டு உலா வந்தது ஞாபகம் வந்தது. ஒரு தெரு விளையாட்டு கோஷ்டிக்கும், மற்ற தெரு விளையாட்டு கோஷ்டிக்கும் - கிட்டிப்புள், கோலி விளையாட்டு, சடு குடு, தஞ்சாவூர் குத்துப் பம்பரம் போன்ற விளையாட்டுகள் ஜரூராக நடந்த சமயங்களில், தோற்றவர், வென்றவருக்கு,
பதிலளிநீக்குஅ) கோலிகள்
ஆ) மாட்சஸ்
இ) சிகரெட் பெட்டி அட்டை
ஈ ) சில்லறை பைசா
போன்ற பொருட்களை கப்பம் கட்ட வேண்டியது வரும். தோற்றவர்களின் பம்பரம் போன்ற விளையாட்டுப் பொருட்களும் ஜப்தி செய்யப்படும்.
இந்தப் பொருட்கள் எதுவுமே இல்லாத பையன்கள், விளையாட்டில் தோற்றுவிட்டால் - ஐந்து அல்லது பத்து சலாம் அடித்துவிட்டு தப்பித்துவிடுவதும் உண்டு. இந்த வகையில்தான் - எங்கள் தெரு காப்டனான என் அண்ணன் - நூறு மாட்ச் கப்பம் வாங்கி - முடி சூடா மன்னனாக வளைய வந்தான்!
// நாரீஷூ ரம்பா //
பதிலளிநீக்குஹி ஹி - அவ்வளவு வருஷமா பீல்ட்ல
இருந்தாங்களா அந்த அக்கா?
// சென்னையில் தீப்பெட்டித் தொழில் இருந்ததா இல்லை சும்மா பேருக்குப் பெயரா?//
பதிலளிநீக்குகத்திவாக்கம் / எண்ணூர் - இரயில்வே ஸ்டேஷனுக்கு முதல் ஸ்டேஷன் : விம்கோ நகர். அதாவது West India Match Company. nagar. இங்கே ஒரு காலத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை ரோரிங் பிசினெஸ் . தீப்பெட்டி தொழில் குடிசைத் தொழில் என்று அரசு அறிவித்தபின் அது அங்கே ஸ்நோரிங் பிசினெஸ் ஆகிவிட்டது.
// மூன்று பைசா நாணயத்தை எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன் - படத்தில் தான்//
பதிலளிநீக்குமூன்று பைசா நாணயம் வந்த புதிதில், அது தண்ணீரில் மிதக்கின்ற முதல் நாணயம் என்று தெரிந்துகொண்டு,
சுற்றுப் புறத்தில் உள்ள நண்ப / நண்பிகளின் வீட்டுக்கெல்லாம் போயி, அவங்க வீட்டுல மூன்று பைசாவை
வாளித்தண்ணீரில் லாவகமாக மிதக்கவிட்டு, ஷோ காட்டினது ஞாபகத்துக்கு வந்தது.
// இரண்டு பைசா ஒரு பைசா நாணயங்கள் இருக்கும் போது, மூன்று பைசா நாணயத்துக்கு என்ன அவசியம்//
பதிலளிநீக்குI think - those days - the idea was to make the costly copper coin - 1 paisa - out of circulation since copper content value was more than the face value of the coin. And also, there was Russian coin of value 3 kopecs - and our Russian influenced finance ministry experts might have had similar ideas for Indian coins too.
வருகைக்கு நன்றி, அருணா.
பதிலளிநீக்குஉங்கள்
"பறக்கப் பார்க்கும்
சிறகின் மேல்
கல் வைத்துப்
பாதுகாக்கும் உத்தி"
வரிகளை படித்தது முதல் எப்படியாவது உபயோகிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். (எமக்குத் தொழில் ஈயடிச்சான்)
வாங்க, kgg. கொஞ்ச நாளா உங்களைக் காணாம எங்க நீங்களும்...
பதிலளிநீக்குபம்பரம் மறந்தே விட்டது. you are right. ஆக்கர் விழுந்த எத்தனை பம்பரங்களை இழந்திருக்கிறேன்! கொடுமை என்னவென்றால் சில சமயம் பம்பரத்தைக் கொடுத்துவிட்டு, அதைச் சுழற்றப் பயன்படுத்தும் கயிற்றை எடுத்துக் கொண்டுவிடுவார்கள். பம்பரம் மட்டும் எனக்குச் சரியாக விளையாட வந்ததே இல்லை. பாதி நேரம் அருகில் இருப்பவர்கள் மேலே விழும் என்னுடைய குத்து - அதற்கு பயந்து கொண்டே என்னைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
ரோரிங், ஸ்னோரிங் - நைஸ். இதை நைசாக நானும் உபயோகம் செய்துவிடுகிறேன்.
மூணு பைசா அலுமினியம், ரைட்? ரசியாக் காரங்களா? அடடா, தெரியாம போச்சே? இருக்கும் இருக்கும். ரசியாக்காரங்க பாப்பாரங்க இல்லேனு வாத்தியார் கிட்டே சொல்லியிருக்கலாம் (அதற்கு இரண்டு விழுந்திருக்கும்).
தீப்பெட்டி என்ற பெயரை படித்ததுமே சட்டென்று என் நினைவுக்கு வந்தது, இதை வைத்து ரயில் பெட்டி செய்து விளையாடியதும், தீபாவளிக்காக வரும் வண்ண வண்ண மத்தாப்பு பெட்டிகளும்தான்.
பதிலளிநீக்குமிகவும் சுவாரசியாமான கட்டுரை.
கௌதமன், எனக்கு ஒரே ஒரே சகோதரன்தான். சிறு வயதில் அவன் எனக்காக என்னுடன் நிறைய விளையாடி இருக்கிறான். அதனால் நான் விளையாடியது எல்லாம், கில்லி, பம்பரம், கோலி, கிரிகெட். காத்தாடி விட்டது இதெல்லாம்தான். காத்தடி நூலுக்கு மாஞ்சா போட, என்னுடைய கண்ணாடி வளையல்களை நிறைய நொறுக்கி இருக்கிறேன். பம்பரம், யார் விடறது நிறைய நேரம் சுத்தறதுன்னு போட்டி வேற. இதுக்காக தனியா நிறையதடவ ப்ராக்டிஸ் வேற. இதெல்லாம் இப்பொழுது நினைத்தாலும் இனிக்கிறது.
இந்தப்பாட்டைப் பாடுற இவரு எத்தனை நாளா பீல்டுல இருந்தாருன்னு நெனக்கிறீங்க? (எங்களுக்கு எதுக்குங்க பொறாமை?)
பதிலளிநீக்குகாத்தடி நூலுக்கு மாஞ்சா போட, என்னுடைய கண்ணாடி வளையல்களை நிறைய நொறுக்கி இருக்கிறேன். - meenakshi கூறியது...
பதிலளிநீக்குமாஞ்சா போட்டீங்களா? சரிதான்... இந்த பல்லாங்குழி, ஸ்கிப்பிங்க், ஒரு கொடம் தண்ணி ஊத்தி.., தரையில் கட்டம் வரைந்து ரைட்டா கொய்ட்டா..
இது மாதிரி சாதுவா விளையாடினது கிடையாதா?
ரெண்டு இடத்துல என் பெயர் வரவைத்ததற்கு ஜக்கம்மா உங்களைக் காப்பாற்றுவாள். ர் என்று சொல்லணுமோ...கோபித்துக் கொண்டு விடுவாரோ...!
பதிலளிநீக்குஇரண்டு புறா இருக்கு...இரட்டைக் கிளி தீப்பெட்டியைக் காணோம்.
ஜப்பான் லேடியைப் பார்த்தால் உங்கள் அபிமான நூடன் சடையாய் இல்லை...?!
Cheeta Fight என்று ஒன்று பார்த்த ஞாபகம் இருக்கிறது...அதை இதில் காணோம்.
நாங்கள் தீப் பேட்டி அட்டைகளை விட சிகரட் அட்டைகளை வைத்துதான் நீங்கள் சொன்ன விளையாட்டெல்லாம் விளையாடி உள்ளோம்.
மீனாக்ஷி சொன்ன மாஞ்சா அனுபவம் வைத்து ஒரு தனிப்பதிவு ஓட்ட ஐடியா வருகிறது....!
//தரையில் கட்டம் வரைந்து ரைட்டா கொய்ட்டா..//
பதிலளிநீக்குபரவா இல்லையே! நல்லா ஞாபகம் வெச்சிருக்கீங்க. சாதுவான விளையாட்டெல்லாம் நிறையவே விளையாடி இருக்கேன். ஆனாலும் பம்பரம் விடறது, காத்தாடி விடறது, கில்லி அடிக்கறது இதெல்லாம்தான் ரொம்ப ஜாலியா இருந்துது.
இன்னொரு விளையாட்டு சொல்ல மறந்து போச்சே! போகி அன்னிக்கு, எல்லாரும் சேர்ந்து வீட்டு வாசல்ல போகி கொளுத்தி, மோளம் அடிக்கறது. இத அடிக்க, ரோடு போடற தார கொஞ்சமா எடுத்து, அதை உருட்டி, நல்ல தடிமனான ஈர் குச்சி நுனீல சொருகி வெச்சு அடிச்சா
நல்லா சத்தம் வரும். இந்த மோளத்தை அப்ப அப்ப அந்த போகி கொளுத்தின நெருப்புல காட்டி அடிச்சா இன்னும் நல்லா சத்தம் வரும். இந்த விளையாட்டு மட்டும் எங்கப்பாவுக்கு பிடிக்காது, கோவம் வரும். ஆனா ஒண்ணும் சொல்ல மாட்டார். அவர் சொன்னாலும் நான் கேக்க மாட்டேன்னு அவருக்கு நல்லாவே தெரியும்.
//ஜப்பான் லேடியைப் பார்த்தால் உங்கள் அபிமான நூடன் சடையாய் இல்லை...?!//
ஸ்ரீராம், super!!!
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅப்பாதுரை சொன்னது…
பதிலளிநீக்கு"மாஞ்சா போட்டீங்களா? சரிதான்... இந்த பல்லாங்குழி, ஸ்கிப்பிங்க், ஒரு கொடம் தண்ணி ஊத்தி.., தரையில் கட்டம் வரைந்து ரைட்டா கொய்ட்டா..
இது மாதிரி சாதுவா விளையாடினது கிடையாதா?"
"பொம்மலாட்டம்" படத்தில் சோ-வை மனோரமா மெட்ராஸ் தமிழ் பேசி பயமுடித்தியே காதலிப்பார். ஒரு முறை சோ-வின் வீட்டில் தெருவில் போவோரை கூப்பிட்டு போட்டுக்கொடுத்துவிடுவார்.
அப்போது ஒருவர் சோ-விடம் "யோவ், ஏன் பொம்பளைக்கிட்டே இப்படி நடந்துக்கொள்கிறாய் என்று கேட்பார்"
அதற்கு சோ, "இது பொம்பளையே இல்லை, சும்மா புடவைக்கட்டி ஊரை ஏமாத்துது என்பார் !"
அதுபோல் தான் மீனாட்சியும் !!
- சாய்ராம் கோபாலன்
தாரை உருட்டி மேளம் அடிப்பீங்களா? பலே, பலே!
பதிலளிநீக்குசாய்ராம், அந்த சின்ன வயசுல எல்லார் கூடவும் சந்தோஷமா நிறைய விளையாடி இருக்கோம். அதானே முக்கியம். அது எந்த விளையாட்டா இருந்தா என்ன? இன்னும் சொல்ல போனால், என் அண்ணாவின் நண்பர்கள் எல்லோருடைய தங்கைகளும் அந்த கும்பலில் இருந்தார்கள். நீங்க சொல்றபடி பாத்தா எங்க தெருவுல பாதி பேர் பொம்பளையே கிடையாதுதான்.
பதிலளிநீக்கு//தாரை உருட்டி மேளம் அடிப்பீங்களா? பலே, பலே//
ஆமாம். இப்ப நெனச்சு பாத்தா சிரிப்புதான் வரது அப்பாதுரை. கண்ணதாசன் சொன்ன மாதிரி, "அந்நாளை நினைக்கையிலே என் வயதும் மாறுதடா, பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லை ஒரு துன்பமடா". முற்றிலும் உண்மை.
meenakshi சொன்னது…
பதிலளிநீக்கு"என் அண்ணாவின் நண்பர்கள் எல்லோருடைய தங்கைகளும் அந்த கும்பலில் இருந்தார்கள்"
அதனால் தான் உன் அண்ணா ஊரை விட்டு பெண் எடுத்தான் போலிருக்கு !
ஜப்பான் லேடியைப் பார்த்தால் உங்கள் அபிமான நூடன் சடையாய் இல்லை...?! - ஸ்ரீராம்
பதிலளிநீக்குஇதுக்காகவே ஒரு பதிவு எழுதி நூதனுக்கு நூதன் வாங்கறேன்.
ஸ்ரீராம்
பதிலளிநீக்கு"ஜப்பான் லேடியைப் பார்த்தால் உங்கள் அபிமான நூடன் "சடையாய்" இல்லை...?!//"
அவங்க சடை தான் ! அதை இப்படி பகிரங்கமாக சொல்லவேண்டுமா ஸ்ரீராம் !
ஜாடை சடை ஆகி விட்டது. நானாவது மறுபடி படித்துப் பாத்திருக்க வேண்டும்தான்...அதற்கு இப்படி வார வேண்டுமா? ஐயோ....ஐயோ..(வடிவேலு மாதிரிப் படிக்கவும்...இதையும் வெடிவேலு மேட்டர் ஆக்கி விட வேண்டாம்..!)
பதிலளிநீக்குஅன்புள்ள துரை
பதிலளிநீக்குதீப்பெட்டி பற்றி நன்றாக நிறைய எழுதி இருக்கிறாய் .
தீப லக்ஷ்மி பற்றி எழுதியது கார்த்திக் குழந்தயாக இருந்தபோது கேட்டது நினைவுக்கு வருகிறது. " அம்மா அன்னபூரணி முகம் ஏன் எப்படி இருக்கு. முன்னாடியே இப்படிதானா ? இல்ல நீ பூஜை பண்ணின அப்புறமா இப்படி ஆயிடுத்தா "
அன்புள்ள லதா
- நீங்கள் சொல்லுவது போல் இது ஒரு மிகபெரிய பொழுதுப்போக்கு. பல நாட்கள் அண்ணன் சுட்டு விடுவோனோ என்று டவுசரில் வைத்து தூங்கி அடுத்தநாள் அம்மா துணி தோய்க்க போட்டதால் விட்ட தீப்பெட்டி அட்டைகள் தான் அதிகம் !
பதிலளிநீக்கு- 1993 முதல் திருவாதிரைக்களி உங்கள் அம்மா செய்ததுபோல் தான் எனக்கும் ! கல்யாணம் ஆகும் முன்பு என் அம்மா செய்த திருவாதிரைக்களி மற்றும் தாளகம் - அமோகம் ! "நினைவில் நின்றவள் " படத்தில் கே.ஆர். விஜயா சமைக்கும்போது நாகேஷ் அவருக்கு சமையல் புத்தகத்தில் இருந்து இதை போடு, அதை போடு என்று சாம்பாரை "கொந்து"போல் ஆக்கிவிடுவார் - வெளியில் இருக்கும் நாய்க்கு வைப்போம் அது தின்றால்; இதையே பண்ணி டெய்லி வைப்போம் என்பார். என் மனைவியும் அப்படித்தான் !!
- 1981 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து சிவகாசியில் உள்ள சித்தப்பா வீட்டுக்கு போனோம் (தலைவரின் தில்லுமுல்லு படமும் அந்த வருடம்). சிவகாசியில் கொளுத்தும் வெயிலில் பட்டாசு செய்யும் இடம், பிரிண்டிங் பிரஸ் மேலும் தீப்பெட்டி செய்யும் இடங்களுக்கு போனோம்.
அந்த சிறுவர்களின் கை ஸ்பீட், லாவகம் இயந்திரத்திற்கு வருமா என்று தோணும்.
என்ன அட்டை இருந்து என்ன புண்ணியம் - ரம்பா இல்லை, நமீதா இல்லை !
- சாய்ராம் கோபாலன்
ஸ்ரீராம். சொன்னது…
பதிலளிநீக்கு"ஜாடை சடை ஆகி விட்டது."
ஓஹோ ஓஹோ, அந்த கிழத்தை உங்களுக்கும் பிடிக்குமா ? நீங்கள் சொன்ன சடை தான் அவர்களுக்கு பொருந்தும் !
எனக்கு நாரதர் என்று ஒரு பெயர் உண்டு, அது உங்களுக்கு தெரியாதா !
அப்பா சாரும், ஸ்ரீராமும் கோவிச்சுக்கக் கூடாது;
பதிலளிநீக்குஎனக்குத் தெரிஞ்சு, அந்தக் காலத்துல
'நூடன்' என்ற பெயரில் ஒரு மண்ணெண்ணெய் ஸ்டவ் தான்
ரொம்ப பிரபலம், ரொம்ப பேருங்க வேண்டி விரும்பி
வாங்கினாங்க!
தேடல் எப்படியெல்லாம் வரும் என்பதற்கு இது நல்ல சான்று
பதிலளிநீக்குஉண்மைதான்...அபபடி ஒரு ஸ்டவ் இருந்தது...இருக்கிறது. அப்படிப் பேர் வச்சாலாவது 'பத்திக்குமா' என்பதற்காக வச்ச பேரோ என்னமோ அது....நான் ரொம்ப நாள் ஆம்பிளை வேஷம் போட்டு பொண்ணா நடிக்குதுன்னு நம்பினேன் ...அதனால நான் கோச்சுக்க மாட்டேன்
பதிலளிநீக்குநான் கூட அப்படி நினைச்சிருக்கேன் - nutan had facial features that seemed less feminine at certain angles . இந்திரா காந்தியைக் கூட அப்படித்தான் நினைச்சேன் - பொம்பிளை வேசம் போட்ட ஆம்பிளைனு. கமலகாசனை எப்பவுமே அப்படித் தான் நினைச்சிருக்கேன் - ஆம்பிளை வேசம் போட்ட பொம்பிளைனு. so what? isn't that what makes them unique and special? பத்தாயிரம் முகத்துல ஒரு முகத்தை நினைவுக்குக் கொண்டு வர முடியுதே?
பதிலளிநீக்குஇதுல கோபப்பட என்னங்க இருக்கு?
ஸ்ரீராம். சொன்னது…
பதிலளிநீக்கு"அப்படிப் பேர் வச்சாலாவது 'பத்திக்குமா' என்பதற்காக வச்ச பேரோ என்னமோ அது"
Brilliant Sriram
Meenakshi Said:
பதிலளிநீக்கு"பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லை ஒரு துன்பமடா"
அது சரி, ஆனால் உங்கள் தாய் தந்தை நிலைமை !
Please Visit
பதிலளிநீக்குhttp://rajesh-godofkings.blogspot.com
It is a coin, banknote, and MATCHBOX collection Website