2015/02/14

காதலிப்பா






கட்டிக் கரும்பே கனியினிமைக் காதலியே
ஒட்டிக் களிக்கலாம் வாகண்ணே - இட்டு
எழுதலாம் முத்தக் கவிதை தடைகள்
முழுதும் துறந்து விடு.

இனியோர் விதிசெய்வோம் இன்பமாய் வாழ்வோம்
நனிவகையில் கூடிக் களிப்போம் - தனிமையில்
யாரும் அறியாமல் ஒன்றுபட்ட நம்முறவை
ஊரும் அறியுமே இன்று.

முனிவோரும் பெறா ரகசிய முக்தி
இனியோர் கணமும் பெறலாம் - கனிவாகத்
தொட்டால் மலரும் மதுமொட்டில் என்னதரம்
பட்டால் தெறிக்குமே தேன்.

முத்த மையினால் காதல் மடலொன்று
பித்தனென் மார்பில் எழுதிவிடு - நித்தம்
புதுக்காதல் செய்திதரும் உன்னுடலை நானும்
மெதுவாய்ப் படிக்க விடு.

கனிப்பாலில் தேன்கலந்தக் கன்னலின் சாறுன்
இனிப்பான முத்தமிதைச் சொல்லும் - கனிபிழிந்தப்
பாலில் கலக்கும் கரும்புத்தேன் போலநாம்
மேலும் ஒன்றாவோம் என்று.

ஒன்றாகும் வேகமெலாம் நின்றாலும் என்கண்ணே
நன்றாகும் நாளெல்லாம் மோகமது - என்றமிழ்
யாப்பினும் மேலாய்ச் சுரந்திடும் நம்காதல்
தோப்பினில் மோக மது.