உன் குளிர் என் குளிரல்ல, இது உய்வாரிலாதொழிக்கும் குளிர். இருபது வருடங்களில் இது போல் குளிர் கண்டதில்லை என்கிறார்கள். குளிர் விட்டுப் போச்சு என்று இனி எவரும் சொல்ல வருடக்கணக்கில் ஆகும்.
பனியும் குளிரும் சிகாகோவை இரண்டு வாரங்களாகப் பிய்த்தெடுக்கிறது. சனிக்கிழமையின் பனிப்புயலில் நிறைய சோகங்கள்.
நேற்று மாலை பனியை அள்ளி ஒதுக்க ஆள் வருவான் ஆள் வருவான் என்று காத்திருந்து கடைசியில் கடவுளும் இந்த ஆளும் ஒன்று எனத் தீர்மானித்து, வீட்டைச் சுற்றிய நடைபாதையில் பனி அத்தனையும் நானே அள்ளியொதுக்கி அப்போது தான் உள்ளே வந்திருந்தேன். "இந்தாப்பா ஹாட் சாக்லேட்" என்றாள் மகள். நன்றி சொல்லியபடி அருந்திக் கொண்டிருந்த போது, வெளியே போயிருந்த எங்கள் நாய் ஸ்டெல்லா பனியில் கால் விறைத்து அப்படியே சுருண்டு விழுந்ததைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. கேமெரா இருந்தும் படமெடுக்க மனமில்லாமல், ஹாட் சாக்லெட்டை அப்படியே வைத்து.. நாயை அள்ளி வர ஓடினேன். பனியில் கால் வைத்ததும் தான் எனக்கு உறைத்தது.
வெறுங்கால். அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ!
என்ன செய்ய.. இறங்கியாகிவிட்டது, நாயை அள்ளிக்கொண்டு அலறியபடி உள்ளே ஓடி வந்தேன். இடது கால் பாதம் புண்ணாகிவிட்டது.
அக்காலை நொண்டியபடி இக்காலை வெளியே பார்த்த போது தென்பட்ட அதிசயம் ஆனால் உண்மை. ஒரு சூரியன் பார்த்தால் இன்னொரு சூரியன் இலவசம். கண்ணைக் கூசும் என்பதற்கான பொருளே இன்றைக்குத் தான் விளங்கியது. அரை மணி நேரத்துக்கு மேலானது கண்பார்வை இயல்புக்கு வர. (at your own risk போட்டோவைப் பாருங்கள்).
எது அசல், எது நகல்? எதனால் நகல், சொல்லுங்கள் பார்ப்போம். விடை கடையில்.

விடை: என்னைக் கேட்டால்?
2014/01/06
அதிசயம் இலவசம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)