2014/08/09

லுக்ரீசின் சாபம்



[அறிமுகம்]     [1]     [2-5]     [6-15]     [16-18]     [19-25]    



லுக்ரீசின் சாபம் [19-25]

19
தடுத்தான் கொலாடின்.
'நில்லுங்கள் ராஜாவே!13 என்றன்
சொல் கேளுங்கள் சற்று!' என்றான்.

மனைவியரைக் காணும் மயக்கம் பலருக்கு. அவரை
மறைவினில் காணும் தயக்கம் சிலருக்கு.
ஊர்நிலம் திரும்பும் உவகை பலருக்கு. கொலாடின் போல்
போர்நிலம் மறக்கும் கலக்கம் சிலருக்கு.

'அரசே! ஆழ்ந்த நட்பின் இலக்கணமே!' என
முரசொலிக்கும் குரல் தணித்து அழைத்தான் கொலாடின்.
'சுற்றிவந்த பகைவர் சோர்ந்தடங்கி நாம் தேடும்
வெற்றிக்கனி கையில் விழும் நேரம். விரைவில்
தங்கநகர்14 வென்றச் சிங்கமென வேடமின்றி
மங்கையரை காண முகங்காட்டிப் போகலாமே?'.

'கலங்காதே கொலாடின்' என்றான் செஸ்டஸ்.
'வெற்றிப்பெண் இடையினில் என் கைகள்
சுற்றித்தான் நாட்கள் பலவானதே? வெற்றுக்
கலவரம் இவையடங்க நாளாகும். அதுவரையில்
புலனடக்கும் கவலையில் முடங்கிப் பயனில்லை.
உம்மகளிர் அனைவரும் உம்மைப் போல் நன்கு
தம்புலன் அடக்கினரா தெரிய வேண்டாம்? நீர் சொன்ன
ஒழுக்கமும் அழகும் உண்மையா அறிய வேண்டாம்?
விழுப்பத்தின் விவரத்தை நேரில் காண வேண்டாம்?
கற்புக்கு அரசிகளா அவர்கள் காமத்தின் அரசிகளா?
சொற்குற்றம் காணாது பொருள் மட்டும் தெளிந்து வருவோம்'.

மனைவியரை நேசித்த மாந்தரும் மன்னன் சொல் கேட்டு
வினையானதோ தனிமை என்று வேண்டாத சந்தேகம் கொண்டு
ஆமென்றனர். அரசர் சொல்படி கொலாடினை வேடம் பூண்டுப்
போமென்றனர். தாமும் புறப்பட்டனர்.

மனங்கலங்கினான் கொலாடின்.
மன்னனோ விடவில்லை.
'புலம்பெயர்ந்தார் படைத்தலைவர் என்பதை
அரிதியா சேனை அறியாது. நாமும்
இரவோடிருளினில் திரும்பிடுவோம்.
மாறு வேடத்தில் நாம் போவது
வேறு யாருக்குத் தெரியப் போகிறது?'
தேவையின்றிக் குரலுயர்த்திக் கூறியதைக் கேட்டுச்
சேவைக்குழுச் சிற்றாள் ஒற்றன் ஒருவன்
மெள்ள விலகியதைக் கண்டு மனதுள்
கள்ளமாய்ச் சிரித்துக் கொண்டான் செஸ்டஸ்.

மறுத்தான் கொலாடின்.
'மன்னியுங்கள் மன்னா!' என்றான்.
'பகைவர் எழும் பயமில்லை எனக்கு. எம் வீரர்
பகையழிக்கவென்றே பிறந்தவராம்.
ஊர் செல்லும் காரணம் தான் எனக்குப்
பேர் சொல்லும் காரணியாய்த் தோன்றவில்லை.
என் மனைவியின் மேல் எனக்கு நேசம் உண்டு. அதைவிட
என் மனைவியின் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு.
லுக்ரீசின் அழகு உண்மை. எனில்
லுக்ரீசின் ஒழுக்கம் உண்மைக்கும் மேல்.
இனியவள் அகத்தை சந்தேகித்தால்
இனியவள் முகத்தை எப்படிக் காண்பேன்?
நெஞ்சில் என்னை வைத்திருக்கு மட்டும் என் லுக்ரீஸ்
கொஞ்சமும் தயங்காமல் சொல்வேன் என் லுக்ரீஸ்
வஞ்சிக்கமாட்டாள் என்னை. அவளைக்
கிஞ்சித்தும் சந்தேகித்தால் நான் அன்றோ துரோகி? எனவே
வீரருடன் தங்க அனுமதியுங்கள் என்னை. லுக்ரீஸைக் கண்டால்
தீராத என்னன்பைச் சொல்லுங்கள். நகருள் நீர் துணிந்து
பேருவகை பெற்றுப் பொழுதோடு வாருங்கள்' என்றான் பணிந்து.

உளமாற விடைகொடுத்த வீரத்
தளபதியை விட்டு செஸ்டசுடன்
பகை வென்றப் படைவீரர் பன்னிருவர்
நகை வியாபாரி போல் வேடம் பூண்டு
அரிதியா எல்லை கடந்தனர்
ரோம் நகருள் நடந்தனர்.

20
இரவின் போர்வையில் எத்தனை மூடல்கள்!
விழிப்பு அங்கே உறங்கினாலும்
உறக்கம் அங்கே விழித்துக் கொண்டிருந்தது.
உறங்கும் போது நரகமாகிறதா நகரம்?
விழிக்கும் போது நகரமாகிறதா நரகம்?
இயற்கை ஒளியில் மறைக்கப்படும் பாவம்
செயற்கை ஒளியில் நியாயமாகும் மாயம்.
பொது விளக்குகளின் ஜாலம். மதுக் கடைகளில்
எது ஒளி என்று இனம் அறியாக் கோலம்.
மதுவா?
மங்கையா?
பொய்யறிவா?
மெய்யறிவா?
அனுபவமா?
அறிவா?
சுகமா?
ஞானமா?
தட்டுங்கள் திறக்கப்படும். இங்கே எதுவும்
கேளுங்கள் தரப்படும்.
விற்கக் கூடாதவை விற்கப்படும்
வாங்கக் கூடாதவை வாங்கப்படும்
விற்கக் கூடாதவை வாங்கப்படும்
வாங்கக் கூடாதவை விற்கப்படும்.
ஒளிவிளக்குகளின் நிழல் சந்தையில்
களிப்பும் காணலாம். கவனித்தால்
கண்ணீரும் காணலாம்.

21
நகை வியாபாரிகள் நால்வரின் மனைவியர்
தகை மறந்து தங்களை மறந்து
இன்னொரு ஆண் இன்னொரு பெண் என
மின்னலாய்ப் புதுத்துணை தேடி
பொதுச் சந்தையிலே
மதுப் போதையில் இருந்தனர்.

இன்னும் சிலர் தம் மனைவியர்
தன்னை மறந்து தம்முடைய வீட்டுள் தம்முடைய கட்டிலில்
தனிமைக்குத் தனிமை வழங்கிக் கொண்டிருந்தது கண்டு
மனைவியைத் தழுவியக் கைகளை நொந்தனர்.

மாறுவேட வீரர்கள் வரிசையில் ஒவ்வொரு மனைவியின்
மீறல்களையும் துரோகங்களையும் கண்டனர்.
இறுதியில் லுக்ரீஸின் இல்லம் வந்தனர்.

22
இரவின் ஒளியில் லுக்ரீஸ் அங்கே
இன்னொரு நிலவாய் உலவிக் கொண்டிருந்தாள்.
இங்கொரு ஓவியம் அங்கொரு ஓவியம் எல்லாம்
தங்கமகன் காதலன் கணவன் கொலாடினின் முகம்.
நந்தவனத்தின் நடுவே அன்றரைத்த புதுச்
சந்தனத்தின் மணமும் பொலிவும் கூடி
வந்தமர்ந்த லுக்ரீஸ் அருகிருந்த
கொலாடினின் ஓவியத்தைப் பார்த்தபடி
பேசினாள் பாடினாள் பின்னர் அறைக்குள் ஓடினாள்.
வெள்ளை நிறத்தொரு ஆடை பின்
கிள்ளை நிறத்தொரு ஆடை பின்
சென்னிறத்தொரு ஆடை பின்
பொன்னிறத்தொரு ஆடை பின்
லேவன்டர் நிறத்தில் ஆடை பின்
லில்லி மலர் நிறத்திலுமொன்று.
'இது பிடிக்குமா? கண்ணாளா உனக்கு
இது பிடிக்குமா?' என்று ஓவியத்திடம்
மதுவின் குரலில் கேட்டுக் கொண்டிருந்தாள்
மணாளன் பதில் சொன்ன பாவனையில்
மாற்றுடையில் வந்தாள்.
'போர் முடிந்து வெற்றியுடன்
நீர் வரும் வேளையில் நான்
உடையணிந்தால் உமக்குக் கோபம் வருமோ?
தடையாகுமென்றால் வேண்டாம்' என்று
கையிலிருந்த உடையை எறிந்துப்
பொய்யாகச் சீண்டினாள் படத்தில் முகத்தை.
வண்ணப் பந்து போல் இங்குமங்கும் தாவி
கண்ணன் காதலன் கொலாடினின் முகம் தடவினாள்.
முத்தமிட்டாள். சிரித்தாள். அழுதாள்.
பித்தானாற்போல் பேதை.

23
திடுக்கிட்டான் செஸ்டஸ்.
போர்க்களத்திலிருந்து வந்தவன் இங்கொரு
போர்க்களத்தை எதிர்பார்க்கவில்லை.
சீர்க்களமாய் ஓர்க்களம் கண்டும்
போர்க்களமாகும் பார்வையின் காட்சி!
மிரண்டவன் மனதுக்குப் பறப்பதெல்லாம் பருந்து.
பசித்தவன் நாவுக்கு புசிப்பதெல்லாம் விருந்து.
சிரித்தான் செஸ்டஸ்.
என் பிரமையா? இல்லை உண்மை!
லுக்ரீஸ்!
இவள் ஒரு போர்க்களம்.15
இவள் முகம் ஒரு போர்க்களம்.
இவள் இடை ஒரு போர்க்களம்.
இவள் நடை ஒரு போர்க்களம்.
இவள் குரல் ஒரு போர்க்களம்.
இவள் முகத்தில் ரோஜாவுக்கும் லில்லிக்கும் போர்.
இவள் இடையில் மின்னலுக்கும் மலர்க்கொடிக்கும் போர்.
இவள் நடையில் அன்னத்துக்கும் தென்றலுக்கும் போர்.
இவள் குரலில் கன்னலுக்கும் கள்ளுக்கும் போர்.
அழகின் செம்மை.
அடக்கத்தின் வெண்மை.
இவள் உடலில் செம்மைக்கும் வெண்மைக்கும் போர்.
இவள் முகத்தின் செந்தீற்றுக்கள் போரின் ரணம்.
அழகின் ஆணவம்.
ஒழுங்கின் அடக்கம்.
இவள் பொலிவில் ஆணவத்துக்கும் அடக்கத்துக்கும் போர்.
இவளால் அழகுக்கும் ஒழுங்குக்கும் இடைவிடாதப் போர்.
இவளுக்குள் போரிடும் அழகும் ஒழுங்கும்
இவளுக்கே பாதுகாப்பா! பெரிய முரண்!
பலவாறு சிந்தித்த செஸ்டஸ்
நிலைமாறி நின்றிருந்தான்.

24
படைவீரர் பன்னிருவர் பொறாமையில் வெந்தாலும்
தடையின்றிப் போற்றினார்கள் லுக்ரீஸை.
சாகலாம் அவமானத்தால் அல்லது அரிதியா
போகலாம் என்றனர். இங்கிருந்தால் வேதனையில்
வேகலாம் என்றனர்.

விரசலாக அங்குவந்த ஒற்றனொருவன்
அரசனிடம் ஓலை தந்து ஒதுங்கினான்.
கொலாடின் கொடுத்தனுப்பிய செய்தி!
'நேசமிகு அரசே! அருமை நண்பரே!
மோசம் போனோம்.
மாறுவேடம் பூண்டு நீங்கள் போன செய்தி
கூறுகெட்டோர் கேட்டறிந்து சீறிவர
சேறானது நம் வெற்றி. உம் உயிருக்கு
ஊறானது. வஞ்சம் வேண்டித்
திரும்பும் வழியில் உம்மைக் கொல்ல
விரும்பி நிற்கிறார்கள் வில்லர்கள்.
அஞ்ச வேண்டாம். அரிதியாச்
சிறு நரிகளின் சீற்றம் நம்
சிங்கங்களுக்கு சிறு விளையாட்டு.
வீரர்களை அனுப்பிவிட்டு
அரசர் மட்டும் அங்கிருக்கட்டும்.
என் வீட்டில் தங்கி நிற்கட்டும்'.

25
பன்னிரு வீரரும் ஒவ்வொருவராய்த்
தன்னந்தனியே அரிதியா திரும்ப
மன்னன் மட்டும் மாறாப் புன்னகையுடன்
நின்றான், லுக்ரீஸ் இல்லத்து வண்ண வாயிலில்.
திட்டப்படி எல்லாம் நடந்தினித் தொடரும்
கட்டம் யாதென்ற எண்ண வாயிலில்.


[வளரும்]


13 ஹிஹி.. சுஜாதாவுக்கு என் மதிப்படங்கிய அங்கீகாரத்தின் ஒரு சிறிய அடையாளம்.

14 அரிதியா ஒரு துறைமுக நகர். மேற்கு நோக்கிய துறைமுகமானதால் ஸ்பெயின் ப்ரெஞ்சு (குறிப்பாக அந்தக்கால க்ரேக்க) நாடுகளிலிருந்து வணிகம் காரணமாக செல்வமும் நாகரீகமும் மிகுந்த பகுதியாக இருந்தது. ரோம் சற்று உள்தங்கிய (இன்றைய கணக்கில் சுமார் முப்பது கிலோமீடர்) நகரமாயிருந்ததால் அரிதியாவின் செல்வமும் செழிப்பும் ஒரு உறுத்தலாகவே இருந்தது ரோம் அரசர்களுக்கு. மேற்கத்திய கலாசாரமும் பகுத்தறிவும் ஊடுருவத் தொடங்கியிருந்ததால் அரிதியா புரட்சிக்காரர்களின் முகாமாகவும் இருந்தது. ஜூனியஸ் புரட்சிக்காரர்களுடன் தங்க நகரில் தங்கியிருந்தான். பேரரசன் லூசியசின் சேனை அரிதியாவைக் கைப்பற்ற எண்ணியதற்கு அதுவும் ஒரு காரணம். இன்றைய அரிதியா பற்றி விகியில் தேடி அறியலாம் (city of Ardea, Rome)

15 லுக்ரீசின் முகத்தில் தெரிந்த சிவப்புத்தீற்றுகள் செம்மைக்கும் வெண்மைக்கும் இடையிலான போரின் ரணம் என்பதை சேக்ஸ்பியர் மிக எளிமையாகச் சொல்லியிருக்கிறார். 'the silent war of lilies and roses' 'this heradlry in Lucrece's face was seen, argued by beauty's red and virtue's white' என்று எளிமையாக எழுத முடிகிற ஆங்கிலத்தின் அழகா அல்லது என் தமிழின் குறையா தெரியவில்லை, அங்கே கிடைத்த உணர்வை இங்கே கொண்டு வரத் திணறுகிறேன்.

14 கருத்துகள்:

  1. செகப்பிரியரைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிக்குத் தலை வணங்குகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம். மொழிபெயர்த்தால் முழிபெயர்க்கும் என்பதால் அந்தப் பக்கமே நான் போவதில்லை. கருவை என் வழியில் மொழியாக்கம் செய்வதோடு சரி. இருந்தாலும் அந்தச் சுவையை அப்படியே வழங்க முடியவில்லையே என்ற ஏக்கம் தான். இருந்தாலும் பாருங்கள், 'வெண்ணிலாவின் சாறு கொண்டு வெள்ளிக் கிண்ணம் நூறு கொண்டு பெண்ணுலாவ வந்ததென்று பேசவந்த வார்த்தை' என்று சிலர் அலட்சியமாக எழுதிவிட்டுப் போகிறார்கள். எங்கே.. சட்டியில் இருந்தால் தானே? :-)

      செகப்பிரியரை விடுங்க. ஜிஎம்பி பதிவுல 'துரோணா' என்று ஒரு ஆங்கில கவிதை வெளியிட்டு மொழிபெயருங்கடா பார்க்கலாம் என்று சவால் விட்டிருந்தார். ஹிஹி. அதைப் படிச்சதும் செகப்பிரியர் ரொம்ப சுலபம் என்று தீர்மானித்துவிட்டேன் :-).

      நீக்கு
  2. //'வெண்ணிலாவின் சாறு கொண்டு வெள்ளிக் கிண்ணம் நூறு கொண்டு பெண்ணுலாவ வந்ததென்று பேசவந்த வார்த்தை'//

    அசத்தலாக இருக்கிறதே... யார் எழுதியது?

    பதிலளிநீக்கு
  3. //// என் மனைவியின் மேல் எனக்கு நேசம் உண்டு. அதைவிட
    என் மனைவியின் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு.
    லுக்ரீசின் அழகு உண்மை. எனில்
    லுக்ரீசின் ஒழுக்கம் உண்மைக்கும் மேல்.
    இனியவள் அகத்தின் மேல் சந்தேகம் கொண்டால் நான்
    இனியவள் முகத்தை மட்டும் எப்படிக் காண்பேன்? /////

    அழகை சொல்ல அமைதியாக கவிபாடிய கொலாடினை விட லுக்ரீஸின் அகத்தை சொல்ல உணர்ச்சி பிழம்பாய் கவிபாடிய கொலாடின் மனதில் உயர்ந்து நிற்கிறான்

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான். ஆங்கிலத்தின் எளிமையை அப்படியே தமிழில் பலநேரங்களில் தர முடிவதில்லை.
    மொழிபெயர்ப்பு என்றில்லாமல் மொழியாக்கம், தமிழாக்கம் என்பதே சரியாகவும் சவுகரியமாகவும் இருக்கிறது:)! அருமையான நடையில் செல்கிறது. தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. நேருக்கு எதிர், எதிருக்கு நேர் என்று சில முயற்சிகளைச் செய்து பார்த்து வெற்றியடைந்திருப்பதையும், வார்த்தை விளையாட்டுகளில் விளையாடிப் பார்த்துக் களித்திருப்பதையும் வாசித்துப் பார்க்க மனசுக்கு இதமாயிருக்கிறது.

    டீக்கடைக்கு, அதுவும் சொந்தக் கடையாய் இருக்கும் பொழுது டீ சுவைக்க வருவோர் போவோர் முக்கியம். இஞ்சி டீ போட்டிருக்கிறீர்களே அதுவும் அற்புதம், சுக்கு டீ போட்டிருக்கிறீர்களே அதுவும் சுகம் என்கிற ரசிப்பு அரட்டை ஒன்றியும் பிறழ்ந்தும் பிறரும் கலந்து கொண்டு களைகட்டாத பொழுது அரட்டையும் களையிழந்து போகும். அதனால் கடைக்கு வந்தோமா டீ குடித்துப் போனோமா என்பதினால் மைனஸ் அரட்டை.

    பதிலளிநீக்கு
  6. அருமையான நடையில் செல்கிறது.... தொடருங்கள்... தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  7. செஸ்டின்..... செஸ்டஸ் ? தமிழில் எழுதுவதை ரசிப்பதுபோல் அல்லது விமரிசனப் படுத்துபோல் ஆங்கிலத்தில் இருப்பதை செய்ய முடிவதில்லை..ஒருவேளை அது நம் மொழி அறிவைப் பொறுத்து இருக்கிறதோ என்னவோ. ? அதுசரி அந்த வெண்ணிலாவின் சாறு கொண்டு.....”யாருடைய படைப்பு,,? சில உவமைகள் உ-ம் “நிலவைப் ப்டித்து சிறு கறைகள் துடைத்து குறு முறுவல் பதித்தமுகம் “ யோசித்துப் பார்த்தால் இப்போது கணினியில் உபயோகப் படும் smiley போல இருக்கும் என்று நினைக்கத் தோன்றும். ‘யாரடா.. எதையும் ரசிக்கத் தெரியாமல்.... “என்னும் கண்டனக் குரல் கேட்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எளிமை. நுண்மை. வளமை. ஆங்கிலம். தமிழ். சம்ஸ்க்ருதம்.

      நீக்கு
    2. திருத்திவிட்டேன். நன்றி.

      நிலவைப் பிடித்து.. வெண்ணிலாவின் சாறைவிட நன்றாக இருக்கிறதே?

      'வெண்ணிலா சாறு' சினிமாப் பாட்டு. ஸ்ரீயில் தொடங்கி ம்ல் முடிபவர் கிண்டல் செய்கிறார் என்று நினைத்தேன். மீயில் தொடங்கி சியில் முடியும் நபர் இருந்தால் இன்னேரம் அதை (மட்டுமாவது) விளக்கியிருப்பார் :-) கண்ணதாசன் எழுதிய கோலாகலமான பாடல். 'பட்டிலும் மெல்லிய பெண் இது, தொட்டதும் மெல்லிடை துள்ளுது, தட்டிய தங்கத்தில் செய்தது, தாமரைப்பூவினில் நெய்தது'.

      நீக்கு
  8. //என் மனைவியின் மேல் எனக்கு நேசம் உண்டு. அதைவிட
    என் மனைவியின் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு.//
    வார்த்தைகள் தெரிக்கின்றன. அற்புதம்.

    பதிலளிநீக்கு
  9. தங்கள் தயவில் சேக்ஸ்பியரை படித்தேன்.
    நல்ல முயற்சி நன்றி

    பதிலளிநீக்கு